சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கான புதிய ஊதிய நிர்ணயம் செய்வது குறித்த பேச்சுவார்த்தை நாளை மறுதினம் சென்னையில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடைகளில் பணிபரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு புதிய ஊதிய நிர்ணயம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் 2ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் பதிவாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நியாய விலை கடை ஊழியர்களுக்கு புதிய ஊதிய நிர்ணயம் செய்வது தொடர்பான கோரிக்கைகளை முன்வைப்பார்கள். இதுகுறித்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை குழுவினர் தங்கள் விளக்கங்களை அளித்து, அதற்கு ஏற்றபடி ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஊதியம் மறுபரிசீலனை செய்ய கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வீரப்பன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
