தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியது: பட்டாசு வெடிக்க தடை உள்பட கடும் கட்டுப்பாடுகள் அமல்

* கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் விழாக்கோலம்
* அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 1.10 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமலிருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க பெருநகர காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது.

பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் 2026 புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஏதுவாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு குறித்து கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களுடன் போலீஸ் கமிஷனர் அருண் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கடற்கரை, வழிபாட்டு தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் கமிஷனர்கள் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் தலைமையில் மொத்தம் 19 ஆயிரம் போலீசார் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று இரவு 9 மணியிலிருந்து முக்கியமான இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சென்னை, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையார்மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட, வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள். இது தவிர கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் ஜிஎஸ்டி ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 100க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுதலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் நாளை வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் மற்றும் குதிரைப்படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையாக, எச்சரிக்கை பதாகைகள் பொருத்தப்பட்டு கடலில் யாரும் மூழ்கிடாமல் உயிரிழப்பை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசால் அனுமதிக்கப்பட்ட மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்கள், விடுதிகளுடன் கூடிய நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனங்கள் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும்.

புத்தாண்டு என்ற பெயரில் பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்திட வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகளை கடைபிடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுமாறும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், வழக்குப் பதிவு செய்ய நேரிட்டால் பாஸ்போர்ட், வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளின் விண்ணப்பங்கள் போலீசாரால் சரிபார்ப்பு செய்யும்போது பாதிப்பு ஏற்படும் என்பதால் இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்குமாறும் பெருநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகளிலும் நியூ இயர் பார்ட்டிக்கு விமர்சையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் நள்ளிரவு 1 மணியுடன் இங்கு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related Stories: