பெட்ரோல், டீசல் வரி ரூ.2 அதிகரிப்பு; காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதே போல, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றை பொறுத்து மாதந்தோறும் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஆண்டு மக்களவை தேர்தல் நெருங்கிய நிலையில், மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் ரூ.100 குறைக்கப்பட்டது. இதன்படி, சென்னையில் ரூ.918 ஆக இருந்த காஸ் சிலிண்டர் விலை ரூ.818 ஆக குறைந்தது. கடந்த ஓராண்டாக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

அதே போல, ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு பொதுத் தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2ஐ ஒன்றிய அரசு குறைத்தது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் ரூ.92.39 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் காஸ் சிலிண்டர் விலையையும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியையும் ஒன்றிய அரசு உயர்த்தியது. இதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதே போல, உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து இனி சென்னையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் ரூ.868.50 ஆகவும், உஜ்வாலா பயனாளிகளுக்கு ரூ.550 ஆகவும் இருக்கும். சிலிண்டர் விலை உள்ளூர் வரிக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் விலை மாறுபடும்.

இதுதவிர, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு ரூ.2 உயர்த்தி உள்ளது. ஆனாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், அதன் விலை குறைப்புக்கு ஏற்ப இந்த அதிகரிப்பு சரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போதைய விலையே தொடரும்.

இந்த விலை உயர்வு குறித்து ஒன்றிய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்ட அறிக்கையில், ‘எண்ணெய் நிறுவனங்கள் காஸ் சிலிண்டர் விநியோகத்தில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சவுதி சிபி-எல்பிஜி விலையை பொறுத்து காஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2023 ஜூலையில், ஒரு டன் 385 டாலராக இருந்த எல்பிஜி 2025 பிப்ரவரியில் 63 சதவீதம் உயர்ந்து 629 டாலராக அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.43 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதை ஈடுகட்ட காஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பெட்ரோல், டீசல் தேவை 16,000 கோடி லிட்டராக உள்ளது. இதில் கலால் வரி ரூ.2 உயர்த்தப்படுவதன் மூலம் அரசுக்கு ரூ.32,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இந்த தொகை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட பயன்படுத்தப்படும்’ என கூறி உள்ளார்.

ஏற்கனவே, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் காஸ் சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதோடு, விலைவாசியை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எண்ணெய் விலை குறைந்தால் கலால் வரி உயர்வு தொடர்கதை
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு, சீனாவில் பதிலடி என உலக வர்த்தக போரால் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்கிற அச்சத்திற்கு மத்தியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 2021 ஏப்ரலுக்கு பிறகு மிகக்குறைந்த விலையை எட்டி உள்ளது. பீப்பாய் 70 முதல் 75 டாலரக இருந்த நிலையில் நேற்று 63.15 டாலராக சரிந்துள்ளது.
பிரதமர் மோடி அரசு தனது 11 ஆண்டு கால ஆட்சியில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்த போதெல்லாம் கலால் வரியை உயர்த்தி இருக்கிறது. நவம்பர் 2014 முதல் ஜனவரி 2016 வரை 9 முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அந்த 15 மாதங்களில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.11.77 ஆகவும், டீசலுக்கான வரி லிட்டருக்கு ரூ.13.47 ஆகவும் உயர்த்தப்பட்டது.

இதன் காரணமாக, 2014-15ம் ஆண்டில் ரூ.99,000 கோடியாக இருந்த கலால் வரி வசூல், 2016-17ம் ஆண்டில் ரூ.2,42,000 கோடியாக உயர்ந்தது. 2017 அக்டோபரில் கலால் வரியில் 2 ரூபாயை ஒன்றிய அரசு குறைத்தது. ஒரு வருடம் கழித்து மேலும், ரூ.1.50 குறைத்தது. அதன் பின்னர், ஜூலை 2019ல் கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது. மீண்டும் மார்ச் 2020ல் லிட்டருக்கு ரூ.3 கலால் வரி உயர்த்தியது.

மார்ச் 2020 முதல் மே 2020 வரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி முறையே லிட்டருக்கு ரூ.13 மற்றும் ரூ.16 உயர்த்தப்பட்டது. எனினும், அந்த வரி உயர்வை திரும்பப் பெற்றது. தற்போது ரூ.2 உயர்த்தப்பட்டதன் மூலம் பெட்ரோலுக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ.11ல் இருந்து ரூ.13 ஆகவும் டீசலுக்கான கலால் வரி ரூ.8ல் இருந்து ரூ.10 ஆகவும் அதிகரிக்கும்.

The post பெட்ரோல், டீசல் வரி ரூ.2 அதிகரிப்பு; காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: