அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு ரூ.806 கோடி இழப்பீடு தொகை நிலுவை உள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடாக 806 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்தின் ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சேட்டு, சந்திரசேகர் ஆகியோர் 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில், உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 1,521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வருவாய் துறை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், 2024ம் ஆண்டு டிசம்பர் வரை 806 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு நிலுவை உள்ளது. இந்த இழப்பீடுகளை வழங்குமாறு பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி 1,303 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இந்த தொகைகளை விரைந்து வழங்குவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிலுவை இழப்பீட்டு தொகையை வழங்குவது குறித்து அதிகாரிகள் கூட்டத்தை கூட்டியுள்ளனர். அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம் என்றார். இதை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு ரூ.806 கோடி இழப்பீடு தொகை நிலுவை உள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: