சேலம்: ஆத்தூர் அருகே வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், டிடெக்டிவ் ஏஜென்சியில் திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் அருகே உள்ள பாலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (70), ஓய்வு பெற்ற விஏஓ. இவரது மகன் ராம்குமார், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 29ம் தேதி இரவு வேணுகோபால், தனது குடும்பத்தாருடன் வீட்டில் இருந்தபோது, 9 பேர் கும்பல் உள்ளே புகுந்து அனைவரது கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி, 20 பவுன் நகை, ₹10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையர்கள் தப்பிச்சென்ற கார் எது என்பதை கண்டறிந்தனர்.
அந்த கார் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் வழியே கோவைக்கு பை-பாஸ் சாலை வழியே சென்றதை, 250 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அறிந்தனர். தொடர் விசாரணையில், அந்த கார் கோவையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும், அவர் விற்பனை செய்த நிலையில் ஒருவரிடம் அடமானத்திற்கு வந்ததை கண்டறிந்து, அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், பிரபல ரவுடிகளான திருப்பூர் சுபாஷ் சந்திரபோஸ் (31), ஆனந்தகுமார் (29) ஆகியோர் எடுத்துச்சென்றது தெரிந்தது. அவர்கள் இருவரையும் கடந்த 3ம் தேதி போலீசார் கைது செய்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, இக்கொள்ளையில் 10க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருப்பதும், இதற்காக கோவையில் செயல்படும் ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியில் திட்டமிட்டு கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து இக்கொள்ளையில் தொடர்புடைய கோவை சுந்தராபுரத்தில் ‘‘லாடு ஸ்பை’’ என்னும் பெயரில் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தி வந்த விஜய் (எ) விஜயகுமார் (40), உதவியாளர் சந்தியா (25) மற்றும் பாஜ பிரமுகர் அயோத்தி ரவி (எ) ரவிச்சந்திரன் (48), அஸ்வின்காந்த் (50) ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுபற்றி போலீசார் கூறியதாவது: கோவை சிட்கோ பகுதியை சேர்ந்த விஜயகுமார், சுந்தராபுரத்தில் ‘லாடு ஸ்பை’ என்னும் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு, கொலை வழக்குகளில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த ரவுடிகள் சுபாஷ்சந்திரபோஸ், ஆனந்தகுமார் ஆகியோருடன் விஜயகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பிறகு 3 பேரும் வெளியே வந்ததும், பெரிய அளவில் கொள்ளையில் ஈடுபட வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஹவாலா பணம், கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் நபர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என தனது டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் துப்பு துலக்கியுள்ளார். அதில், கோடிக்கணக்கில் பணம் இருக்கும் என கணிக்கப்பட்ட 4 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்தசூழலில் சேலம் ஓய்வு விஏஓ வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருக்கும் என கணித்துள்ளனர். தனியாக தோட்டத்தில் இருக்கும் அந்த வீட்டை படமாகவும், வீடியோவாகவும் எடுத்து, வந்து செல்லும் பாதை உள்ளிட்ட விவரங்களை விஜயகுமாரிடம் அஸ்வின்காந்த் கொடுத்துள்ளார். பிறகு கொள்ளை திட்டத்தை டிடெக்டிவ் ஏஜென்சியில் வைத்து தீட்டியுள்ளனர்.
அதன்படி, சம்பவத்தன்று 2 கார்களில் சுபாஷ்சந்திரபோஸ், ஆனந்தகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட கும்பல் ஓய்வு விஏஓ வீட்டிற்கு வந்து, திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் கோடிக்கணக்கில் வீட்டில் பணம் இல்லை. அதனால், அவர்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டில் இருந்த 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியுள்ளனர். தற்போது சிக்கிக்கொண்டனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு பின் கைதான விஜயகுமார், சந்தியா, ரவிச்சந்திரன், அஸ்வின்காந்த் ஆகிய 4 பேரையும் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் ேபாலீசார் அடைத்தனர். இவ்வழக்கில் இன்னும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post ஹவாலா, கருப்பு பணம் யார் வீட்டில் உள்ளது என டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் துப்பறிந்து சேலத்தில் கொள்ளையடித்த கும்பல்: பாஜ பிரமுகர் உள்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.