பழநி: பழநி பகுதியில் பட்டுப்புழுக்கள் கூடு கட்டாமல் இறந்ததால், விவசாயிகள் வேதனையடைந்து பட்டுப்புழுக்களை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டுப்புழு வளர்ப்பில் 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கோவை, உடுமலை திருப்பூர் பகுதிகளில் உள்ள இளம்புழு மையத்தில் இருந்து, விஞ்ஞானிகளால் முட்டையின் தரம் ஆய்வு செய்து புழுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 100 எண்ணிக்கை கொண்ட புழுக்கள் விவசாயிகளுக்கு ரூ.4,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. பழநி பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு இளம்புழு வளர்ப்பு மையத்தால் வழங்கப்பட்ட புழுக்கள் அனைத்தும் நோய் வாய்ப்பட்டு உயிரிழந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து பட்டுப்புழுக்களை தீயிட்டு எரித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘இளம்புழு வளர்ப்பில் ஈடுபட்ட 15 நாட்களுக்குள் பட்டுப்புழுக்கள் அனைத்தும் கூடு கட்ட வேண்டும். ஆனால் தற்போது 13 நாட்கள் ஆகியும் புழுக்கள் இலையை எடுத்து கொள்ளவும் இல்லை. கூடு கட்டவும் இல்லை. மேலும் புழுக்கள் அனைத்தும் உயிரிழந்து கீழே விழுகின்றன. இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ.1.50 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டு உள்ளது. பட்டுப்புழுக்களுக்கான காப்பீடு கடந்த ஆண்டு 9வது மாதமே முடிந்துவிட்ட நிலையில் இதுவரை புதுப்பிக்கவில்லை. முறையாக காப்பீடு புதுப்பிக்கப்பட்டு இருந்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். பட்டுப்புழுக்கள் இறப்பு குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தபோது மீண்டும் தரமான முட்டைகள் இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளனர்’’ என்றார்.
The post கூடு கட்டாமல் இறந்ததால் வேதனை; பட்டுப்புழுக்கள் தீ வைத்து எரிப்பு: பழநி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.