சென்னை: கல்வி, கலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு 2026ம் ஆண்டு பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) செயலர் ஆர்.மணிஷ் ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 2026ம் ஆண்டு பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://awards.gov.in/ எனும் இணையதளத்தில் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாமல் அனைவரும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர். இந்த விருதுகளுக்கான பரிந்துரைகளை நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இணைய வழியில் அனுப்பலாம்.
விளம்பரத்துக்காக அல்லாமல் அந்தந்த துறைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியவர்களை கண்டறிந்து விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும். தன்னலமின்றி பொதுமக்களுக்கு சேவையாற்றுவோருக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். கல்வி நிறுவனங்களின் சார்பில் பரிந்துரைக்கப்படுபவர் ஆற்றிய சாதனைகள், சேவைகள் குறித்து 800 வார்த்தைகளுக்கு மிகாமல் குறிப்பிடப்பட வேண்டும். மேலும், அந்தநபர் பரிந்துரை செய்யப்படுவதற்கான காரணத்தை அது தெளிவாக விளக்க வேண்டும். பத்ம விருதுகளுக்கான விதிகள், வழிகாட்டுதல்கள் https://www.padmaawards.gov.in/ என்ற வலைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு appeared first on Dinakaran.