ஜூலை மாதத்திற்குள் 11 ஆயிரம் புதிய பஸ்கள்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

கோவை: தமிழகத்தில் ஜூலை மாதத்திற்குள் 11 ஆயிரம் புதிய பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கோவை திருச்சி ரோடு சுங்கம் போக்குவரத்து கழக அலுவலகத்தில் புதிய பஸ்கள் இயக்கம், பணி காலத்தில் இறந்த 41 தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், வர்ணம் தயாரிப்பு ஆலையில் கூடுதல் இயந்திரம் துவக்குதல் மற்றும் நடமாடும் தானியங்கி பணிமனை வாகனம் துவக்க விழா நேற்று நடந்தது. இதில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து கழகத்தில் 2700 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். இதில், கருணை அடிப்படையில் நிரப்பப்படும் பணியிடங்கள் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும் நிலையில் இருக்கிறது.

மகளிர் கண்டக்டர்களுக்கு உயரம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பெண் கண்டக்டர்களின் உயரம் 10 செ.மீ. வரை குறைக்க சலுகை வழங்கி முதல்வர் உத்தரவிட்டார். டிரைவர் பணியிடங்களில் மகளிருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மாநில அளவில் வரும் ஜூலை மாதத்திற்குள் 11,000 புதிய பஸ்கள் பெறப்பட்டு இயக்கத்திற்கு கொண்டு வரப்படும். அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்பட மாட்டாது. சிலர் இது தொடர்பாக தவறான தகவல் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கேரளா, கர்நாடக மாநில போக்குவரத்து கழகங்களை விட தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் 19 விருதுகளை வென்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post ஜூலை மாதத்திற்குள் 11 ஆயிரம் புதிய பஸ்கள்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: