முதலிபாளையம் தொழிற்பேட்டையை தொழில் முனைவோர்கள் பயன்படுத்த வேண்டும்

திருப்பூர் : முதலிபாளையம் தொழிற்பேட்டையில் தொழில் தொடங்க சாதகமான சூழல் உள்ளதால் தொழில் முனைவோர்கள் பயன்படுத்த வேண்டும் என தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி கூறினார்.

திருப்பூர் முதலிபாளையம் தொழிற்பேட்டையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது. இதற்கு தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த தொழில் முனைவோர்கள் தொழில் துவங்க பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தாட்கோ தொழிற்பேட்டையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி புனரமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனடிப்படையில் தற்போது முதலிபாளையம் தாட்கோ தொழிற்பேட்டையில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சுமார் 140 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்பேட்டையில் 3200 மீட்டர் அளவில் புதிய தார்சாலை வசதி, 5 ஆழ்துழாய் கிணறுகள், 50 புதிய தெரு விளக்குகள், 3000 மீட்டர் அளவில் புதிய சுற்றுச்சுவர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த தொழில் முனைவோர்கள் தாட்கோ சார்ந்த திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில் தொழிற்பேட்டையில் புதிய நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த சிறு, குறு மற்றும் பெருந்தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் இத்தொழிற்பேட்டையில் தொழில் துவங்க தொழிற்கூடங்களை காலிமனையாக, மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கூடங்களாக, ஒற்றை மாடி அல்லது பல மாடி தொழிற்கூடங்களாக அமைத்து தொழில்முனைவோர்களின் தேவைகேற்ப குறுகிய அல்லது நீண்டகால குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பத்துடன் விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்கள் தாங்கள் தொழில் செய்வதற்கு தொழிற்கூடங்களை பெற விண்ணப்பிக்கலாம். தொழில் முனைவோர்கள் தளத்தினை பார்வையிட்ட பிறகு அலுவலக தேவை படிவத்தின் மூலம் அவர்களின் விருப்பத்தை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதலிபாளையம் கொழிற்பேட்டையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொழில் முனைவோர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் புதிய தொழில் துவங்கவும், தொழில் விரிவுபடுத்தும் வகையில் கலந்து கொண்டார்கள். இதில் 250-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் மூலம் தொழில் முனைவோர்கள் வழங்கிய மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, முதலிபாளையம் தொழிற்பேட்டையில் தொழில் தொடங்க சாதகமான சூழல் உள்ளதால் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் முதலிபாளையம் தொழிற்பேட்டையில் தாட்கோ சார்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், தாட்கோ செயற்பொறியாளர் (கோவை கோட்டம்) சரஸ்வதி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் சரவணன், தொழில் முனைவோர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post முதலிபாளையம் தொழிற்பேட்டையை தொழில் முனைவோர்கள் பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: