நட்டாத்தி, கண்ணான்டிவிளையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

*4 மாதங்களாக தொடரும் அவலம் சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

ஏரல் : நட்டாத்தி மற்றும் கண்ணான்டிவிளையில் குழாய் உடைப்பால் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வீணாகி வருவதை உடனடியாக சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரல் அருகேயுள்ள மங்களக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உறைகிணறு அமைக்கப்பட்டு 90 கிராம கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீரை பஞ்சாயத்து சார்பில் வீட்டு குடிநீர் இணைப்பு மற்றும் தெரு பைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் செல்லும் பைப் லைனில் நட்டாத்தி அருகேயுள்ள கண்ணான்டிவிளை பெரியமுத்தம்மன் கோயில் முன்பு சாலையோரத்தில் உடைப்பு ஏற்பட்டு 4 மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த தண்ணீரானது கோயில் முன் குளம்போல் தேங்கிய நிலையில் உள்ளது.

இதனால் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வர மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த தண்ணீர் தேங்கி கிடப்பதால் அதில் கொசு உற்பத்தியாகி பலவித நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. கோயிலில் கொடை வர இருப்பதால் அதற்குள் சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குழாய் உடைப்பினை சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் நட்டாத்தி பஞ்சாயத்து அலுவலகம் முன்பும் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு 4 மாதங்களாக தினசரி பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிதண்ணீர் வீணாகி வருகிறது. கோடைக்காலம் என்பதால் பல இடங்களில் மக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வரும் நிலையில், நட்டாத்தி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தண்ணீர் ஆறாக ஓடி வருகிறது. எனவே இந்த குழாய் உடைப்பையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீண்டும் உடைப்பு சீரமைக்கப்படுமா?

சாயர்புரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் நட்டாத்தி மெயின் ரோட்டில் குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வருவது குறித்து கடந்த மார்ச் 31ம் தேதி தினகரனில் செய்தி வெளியானது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்து சென்றனர்.

ஆனால் மறுநாளே அந்த இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு முன்பு இருந்ததை போலவே தண்ணீர் வீணாக சென்று வருகிறது. எனவே இந்த உடைப்பையும் அதிகாரிகள் சீரமைப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post நட்டாத்தி, கண்ணான்டிவிளையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.

Related Stories: