குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படுகிறதா?மூலக்கரையில் வீடு, வீடாக கூடுதல் கலெக்டர் ஆய்வு

ஆறுமுகநேரி : மூலக்கரை ஊராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என மாவட்ட கூடுதல் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆறுமுகநேரி அருகேயுள்ள மூலக்கரை ஊராட்சி பகுதியில் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வீடு வீடாக சென்று குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்கப்படுகிறதா என பார்வையிட்டார். தொடர்ந்து குப்பைகள் தரம் பிரித்து கொடுக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்கும் வீடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்து பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

குப்பைகள் தரம் பிரித்து கொடுக்காத வீடுகளுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது. மேலும் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்காமலும், பொது இடங்களில் குப்பைகள் கொட்டினாலும் ரூ.100 முதல் ரூ.200 வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை ஸ்டிக்கர் ஓட்டப்பட்டது. குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இப்பகுதியில் உள்ள கடைகளில் பாலிதீன் கவர்கள் விற்கப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். வாடிக்கையாளர்கள் மஞ்சப்பை, கூடை, துணிப்பை கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பின்னர் மூலக்கரை ஊராட்சி பகுதியில் உள்ள குப்பை கிடங்கை பார்வையிட்டார். அங்கு மண்புழு உரக் கொட்டகையை பார்வையிட்ட மாவட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, மண்புழு உர கொட்டகைக்கு செட்டுகள் அமைத்து நவீன முறையில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது பிடிஓக்கள் ஜான்சி ராணி, அண்டோ, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பெலிக்ஸ், திட்ட ஒருங்கிணைப்பாளர் கலாவதி, ஊராட்சி செயலர் சாரதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் குமார், ஒன்றிய ஊராட்சி பணி மேற்பார்வையாளர் நந்தினி உட்பட பலர் உடனிருந்தனர்.

The post குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படுகிறதா?மூலக்கரையில் வீடு, வீடாக கூடுதல் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: