சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார். அதில்;

* குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு கூடுதல் முதலீட்டு மானியத்தின் உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். தற்போது குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான 10 விழுக்காடு கூடுதல் முதலீட்டு மானியம், தகுதியான இயந்திர தளவாடங்களின் மதிப்பில் உச்சவரம்பாக ரூ.5 லட்சம் வரை 5 தவணைகளாக 5 ஆண்டுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இக்கூடுதல் முதலீட்டு மானியத்திற்கான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

* இயற்கையாக அமையப் பெற்றிருக்கும் தொழில் குழுமங்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் அக்குழுமங்களுக்கான உட்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் இதர முன்னெடுப்புகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இயற்கையாக அமையப் பெற்றிருக்கும் தொழில் குழுமங்களின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு, உட்கட்டமைப்பு, ஒருங்கிணைந்த பொது வசதிகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்கள் இன்றியமையாததாகும். இதனை எதிர்கொள்வதற்கு இக்குழுமங்கள் போதிய நிதி ஆதாரமின்மையால் இடர்களை எதிர்கொள்கின்றன. இக்குழுமங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த மேற்குறிப்பிட்ட இனங்களுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* பழங்குடியினர் நிறைந்த பகுதிகளில் கடன் உத்தரவாதத்துடன் (Credit Guarantee) ரூ.100 கோடி அளவில் பழங்குடியினருக்கு, தொழில் தொடங்க கடனுதவிகள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். பழங்குடியினர் பெருமளவில் வசிக்கும் பகுதிகளில் சுயதொழில், தொழில்முனைவுத்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பு கடன் வசதியாக்கல் முகாம்கள் நடத்தப்படும். இம்முகாம்களில் பெறப்படும் தகுதியான விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு கடன் ஒப்புதல் வழங்க தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு நிதி அதிகாரம் அளிப்பது உறுதி செய்யப்படும். இதன் மூலம் பழங்குடியின தொழில்முனைவோருக்கு ரூ.100 கோடி அளவிற்கு கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* கிராம அளவிலான கைவினை குழுக்கள் மற்றும் குறுந்தொழில் குழுமங்கள் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை பாதுகாத்திடும் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.18.18 கோடி மதிப்பில் ஏற்படுத்தி தரப்படும். பணித்தளம், சேமிப்பு வசதிகள், இயந்திரங்கள், பொது உற்பத்தி மையங்கள் மற்றும் இதர தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வதன் மூலம் குறுந்தொழில் குழுமங்கள், கைவினை குழுக்கள் ஆகியவற்றுக்கான பொதுத் தேவைகளை பூர்த்தி செய்வது இதன் நோக்கமாகும். இந்த அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலம் உற்பத்தி திறனை மேம்படுத்தவும், நிலையான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திடவும், கிராமப்புற பொருளாதார வளர்ச்சியினை உறுதிப்படுத்திடவும் வழிவகை ஏற்படுத்தப்படும். தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) உடன் இணைந்து இத்திட்டம் ரூ.18.18 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

* தேசிய சிறு தொழில் நிறுவனத்தின் ஒரு முனை பதிவு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சந்தை ஆகிய திட்டங்களில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒப்பந்தப் புள்ளி ஆவண தொகுப்புகளை இலவசமாக பெறவும், முன்வைப்புத் தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு பெறவும், தேசிய சிறு தொழில் நிறுவனத்தின் ஒரு முனைப் பதிவு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சந்தை ஆகிய திட்டங்களில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

* உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) மூலம் ஐந்து தனித்துவமான தயாரிப்புகளுக்கு பொதுவான வணிகக் குறியீடுகள் (branding) ரூ.3.62 கோடியில் உருவாக்கப்படும். குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் சந்தை இருப்பை மேம்படுத்த, ஈரோடு, காஞ்சிபுரம், தேனி, திருச்சிராப்பள்ளி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) மூலம் தேங்காய், மஞ்சள், முருங்கை, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி சார்ந்த தயாரிப்புகளுக்கு பொதுவான வணிக குறியீடுகள் ரூ.3.62 கோடியில் உருவாக்கப்படும்.

* 60 வயதிற்கு உட்பட்ட இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற்கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, விபத்து மற்றும் பாம்புகடியினால் ஏற்படும் உயிரிழப்பிற்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க ஏதுவாக ரூ.1.50 கோடி மதிப்பில் மூலதன நிதியம் உருவாக்கப்படும். இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் தற்போது 337 உறுப்பினர்கள் பாம்பு பிடிக்கும் மற்றும் கையாளும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 60 வயதிற்குட்பட்ட இச்சங்க உறுப்பினர்களுக்கு விபத்து மற்றும் பாம்புகடியினால் ஏற்படும் உயிரிழப்பிற்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்கிட ஏதுவாக ரூ.1.50 கோடி மதிப்பில் மூலதன நிதியம் உருவாக்கப்படும்.

* இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகளின் தேயிலை சாகுபடிக்கு தேவைப்படும் விவசாய இயந்திரங்கள் ரூ3.25 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகளின் உறுப்பினர்களின் பயன்பாட்டிற்க்கு வழங்கப்படும். இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் தயாரிப்பு செலவினை குறைக்கவும் உறுப்பினர்களின் பசுந்தேயிலைக்கு சிறந்த விலை வழங்கவும், தானியங்கி கைபிடி பேட்டரி மூலம் இயங்கும் அறுவடை இயந்திரம், மின்சார தூரிகை வெட்டிகள், விளிம்பு வெட்டிகள் மற்றும் பேட்டரி தெளிப்பான் ஆகிய இயந்திரங்கள் இண்ட்கோசர்வ் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகள் வழியாக உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இதற்கென ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தென்னை நார் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முன்வரும் தொழில் ஆர்வலர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக தொழில் நுட்ப பரிமாற்றம், பயிற்சி, மானியங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ரூ.5 கோடி மதிப்பில் ஒரு திட்டம் உருவாக்கப்படும். தமிழ்நாட்டிலிருந்து தென்னை நார் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் பொருட்டு டான்காயர் மூலமாக ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவைப்படும் உதவிகளான தொழில் நுட்ப பரிமாற்றம், பயிற்சி, மானியங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இதற்கென குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல் திட்டத்தின் நிதியிலிருந்து ரூ.3 கோடியும் தமிழ்நாடு கயிறு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.2 கோடியும் செலவிடப்படும்.

* தென்னை நார் உற்பத்தியில், மதிப்பு கூட்டலை ஊக்குவிக்கும் விதத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மேம்பாட்டு மையம் ரூ.9.86 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் தென்னை நார் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட தென்னை நார் புவி விரிப்புப் பொருட்கள் உற்பத்தி வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தலுக்கான ஒரு சிறப்பு நெறிப்படுத்தல் மையம் (Nudge Unit) ரூ.9.86 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு புத்தாக்க ஆராய்ச்சி நிதி (TANII) திட்டத்தின் கீழ் நிறுவப்படும். இம்மையம், தமிழ்நாட்டில் தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட புதிய பொருட்கள் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்.

* தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தென்னை நார் சார்ந்த பொருட்களுக்கு சந்தை அங்கீகாரம் பெற தனித்துவமான வணிகக் குறியீடு (branding) உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தென்னை நார் பொருட்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையில் அங்கீகாரம் பெற ஒரு தனித்துவமான வணிகக் குறியீடு (branding) உருவாக்கப்படும். இது உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி விற்பனையை அதிகரிக்க உதவும்.

* தென்னை நார் பொருட்களுக்கென சிறப்பு வாங்குபவர் விற்பவர் சந்திப்புகள் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் மூலம் ரூ.40 இலட்சம் செலவில் நடத்தப்படும். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தென்னை நார் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கு உள்நாடு மற்றும் உலகளாவிய அளவில் சந்தை வாய்ப்பினை அதிகரிக்க தென்னை நார் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கென சிறப்பு வாங்குபவர் விற்பவர் சந்திப்புகள் ரூ.40 லட்சம் செலவில் நடத்தப்படும்.

* சேகோசர்வ் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு எண்முறை மாவுச்சத்து அளவீட்டுக் கருவிகள் (Digital Starch Meters) கொள்முதல் செய்ய 25 விழுக்காடு மானியம் வழங்கப்படும். மரவள்ளிக்கிழங்கிலிருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி செய்யவும், சேகோசர்வ் உறுப்பினர்கள் தரமான மரவள்ளிக் கிழங்கினை கொள்முதல் செய்யவும், மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு மாவுச்சத்திற்கு ஏற்ப உரிய விலை கிடைத்திடவும், மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்தினை துல்லியமாக அளவீடு செய்வது முக்கியமானதாகும். இவ்வளவீட்டினை அறிந்துகொள்ள உதவும் ”எண்முறை மாவுச்சத்து அளவீட்டுக் கருவிகள்” (Digital Starch Meters), கொள்முதல் செய்யும் உறுப்பினர்களுக்கு கொள்முதல் மதிப்பில் 25 விழுக்காடு மானியமாக வழங்கப்படும். இதற்கென சேகோசர்வ் சங்க நிதியிலிருந்து ரூ.20 லட்சம் செலவிடப்படும்.

* தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் 20 பணியாளர்களுக்கு பிற மாநில தேயிலை தொழிற்சாலைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அளிக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 16 தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தி மேலாண்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தி, தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்கி வரும் சிறு தேயிலை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க தொழிற்சாலைகளில் பணிபுரியும் 20 பணியாளர்களுக்கு பிற மாநில தேயிலை தொழிற்சாலைகளிலும் பயிற்சி நிலையங்களிலும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்படும். இதன் மூலம் தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூளினை சிறந்த முறையில் தயாரிக்கவும், சந்தைபடுத்தவும் இயலும்.

* தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்கும் உறுப்பினர்கள் கூடுதலாக பசுந்தேயிலை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் ரூ.4 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும். நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 16 தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் அங்கத்தினர்களுள் அதிகமாக பசுந்தேயிலை வழங்கும் அங்கத்தினர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அதிகபட்சமாக பசுந்தேயிலை வழங்கும் ஒரு உறுப்பினருக்கு ரூ.25,000/- ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் தொழிற்சாலைக்கு ஒருவர் என 16 தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும்.

* நடப்பாண்டில் ஆறு விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வுகள் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடத்தப்படும். அவற்றுள் ஆதிதிராவிட/ பழங்குடியின தொழில் முனைவோருக்கான இரண்டு தனிச்சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படும். நடப்பாண்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு, உணவு பதப்படுத்துதல்,மின்சாரம் மற்றும் மின்னணுவியல் மற்றும் தோல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன் ஆறு விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வுகள் நடத்தப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில் இரு சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படும். இந்நிகழ்வுகளுக்கென FaMeTN மூலமாக ரூ.40 லட்சம் செலவிடப்படும்.

* ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத சிப்பமிடும் (packaging) முறைகள் குறித்து, ரூ.30 லட்சம் மதிப்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத சிப்பமிடும் முறைகள் குறித்து FaMeTN,இந்திய பேக்கேஜிங் நிறுவனத்துடன் (IIP) இணைந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், தூத்துக்குடி,வேலூர் ஆகிய மண்டலங்களில் நடத்தப்படும். இந்த முயற்சியின் மூலம் நிறுவனங்கள் பன்னாட்டு சுற்றுச்சூழல் தரங்களை பூர்த்தி செய்து அவர்களின் தயாரிப்புகளை கடுமையான சுற்றுச்சூழல் விதிகள் கொண்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தகுதியுடையவர்களாக மாற்றி உலகளாவிய சந்தைகளில் அவர்களின் வளர்ச்சியினை மேலும் அதிகரிக்க இயலும். இதற்கென FaMeTN மூலமாக ரூ.30 இலட்சம் செலவிடப்படும்.

* மின்னணு வர்த்தக தளங்களில், கைவினை கலைஞர்கள் உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை, பதிவேற்றம் செய்து அவர்களது உற்பத்திப்பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு வசதி செய்து தரப்படும். கைவினை கலைஞர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களை மின்னணு வர்த்தக தளங்களில் பதிவேற்றம் செய்ய வசதி செய்து தரும் விதமாக, சந்தை வல்லுநர்கள் மற்றும் அயலகத் தமிழர்களுடன் இணைந்து தேவையான நிபுணத்துவத்துடன், தங்களின் உற்பத்திப் பொருட்களை உலகசந்தைகளில் சந்தைப்படுத்த ஆயத்தப்படுத்தும் வகையில் சந்தை விரிவாக்கம் தொடர்பான பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்படும். இதற்கென FaMeTN மூலமாக ரூ.20 லட்சம் செலவிடப்படும்.

* டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 120 இளைஞர்களுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 120 இளைஞர்களுக்கு புதிய உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க தேவையான திறன்களை பெறும் வகையில் மூன்று மாத தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு உணவுத் தொழில் முனைவு விரைவாக்கத் திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* உணவுத் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் துறை சார்ந்த 25 வேளாண் மற்றும் உணவுத் தொழில் நுட்ப பட்டதாரிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். உணவுத் தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் அவை சார்ந்த துறைகளில், 25 வேளாண் மற்றும் உணவுத் தொழில் நுட்ப பட்டதாரிகளுக்கு ஆரம்பகட்ட முதலீட்டாளர் நிலையிலிருந்து நன்கு பயிற்சி பெற்ற உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோர்களாக மாற்ற மூன்று மாத தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது வணிகவளர் பயிற்சி திட்டத்தின் கீழ், ரூ.10லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* கவரிங் நகை தொழிலில் புகழ் பெற்ற சிதம்பரம் பகுதியில், லால்புரம் கிராமத்தில் கவரிங் நகை உற்பத்தியாளர்களுக்காக 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.24 கோடி திட்ட மதிப்பில் தமிழ்நாடு சிட்கோ மூலம் சிறப்பு புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். கவரிங் நகை தொழிலில் புகழ் பெற்ற சிதம்பரம் பகுதியில் கவரிங் நகை உற்பத்தியாளர்களுக்காக, நடப்பு நிதியாண்டில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், லால்புரம் கிராமத்தில் 5 ஏக்கர் அரசு நிலத்தில், தமிழ்நாடு சிட்கோ மூலம் சிறப்பு புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். மொத்த திட்ட மதிப்பான ரூ.1.24 கோடியில், நிலத்தின் மதிப்பு ரூ.0.24 கோடி மற்றும் மேம்பாட்டிற்கான செலவு ரூ.1 கோடி. இந்த தொழிற்பேட்டை கவரிங் நகை தொழில்சார்ந்த தொழில்முனைவோருக்கு புதிய தொழில்களை நிறுவுவதற்கு வசதியாக இருக்கும். இதனால் 700 வேலைவாய்ப்புகள் உருவாகும்.

* வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் ஈரோடு சிட்கோ தொழிற்பேட்டை பகுதி-II-ல், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.23 கோடி திட்ட மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு சிட்கோவினால் ஈரோடு தொழிற்பேட்டை பகுதி-II-ல், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.23 கோடி திட்ட மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மனை ஒதுக்கீடு செய்யப்படும். மொத்த திட்ட மதிப்பான ரூ.15.23 கோடியில், நிலத்தின் மதிப்பு ரூ.12.03 கோடி மற்றும் மேம்பாட்டிற்கான செலவு ரூ.3.20 கோடி ஆகும். இதன் மூலம் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த 1500 தொழில் முனைவோர்கள் பயன்பெறுவர்.

* அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பரணத்தில் ரூ.2.84 கோடி திட்ட மதிப்பில் நவீன முந்திரி பதப்படுத்தும் குழுமம் அமைக்கப்படும். அரியலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முந்திரி பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 85-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில், செந்துறை வட்டம், பரணத்தில் நவீன முந்திரி பதப்படுத்துதல் குறுங்குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.2.84 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்படும். இந்த வசதிகளை அமைப்பதன் மூலம் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில்முனைவோரின் உற்பத்தி திறன், வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மேம்படும்.

* திருச்சி முசிறி வட்டம், முசிறியில் ரூ.3 கோடி திட்ட மதிப்பில் கோரைப்பாய் குழுமம் அமைக்கப்படும். திருச்சிராப்பள்ளி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோரைப் பாய் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 75-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில், முசிறியில் ரூ.3 கோடி திட்ட மதிப்பில் கோரைப்பாய் குறுங்குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்கப்படும். இந்த வசதிகளை அமைப்பதன் மூலம் கோரைப்பாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில் முனைவோரின் உற்பத்தி திறன், வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மேம்படும்.

* ஈரோடு பெருந்துறை வட்டம், சீனாபுரத்தில் ரூ.7.77 கோடி திட்ட மதிப்பில் நெசவு குழுமம் அமைக்கப்படும். ஈரோடு மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில், பெருந்துறை வட்டம், சீனாபுரத்தில் ரூ.7.77 கோடி திட்ட மதிப்பில் நெசவு குறுங்குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்கப்படும். இந்த வசதிகளை அமைப்பதன் மூலம் நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில்முனைவோரின் உற்பத்தி திறன், வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மேம்படும்.

* மதுரை திருமங்கலத்தில் ரூ.7.97 கோடி திட்ட மதிப்பில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கான சிறு தானிய குழுமம் நிறுவப்படும். மதுரை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறு தானியங்களை கொண்டு உணவு பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 150-க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில், திருமங்கலம் வட்டம், திருமங்கலத்தில் சிறு தானிய குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.7.97 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்படும். இந்த வசதிகளை அமைப்பதன் மூலம் சிறு தானியங்களை கொண்டு உணவு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில்முனைவோரின் உற்பத்தி திறன், வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மேம்படும்.

* சென்னை மாவட்டம், பெரம்பூரில் ரூ.5 கோடி திட்ட மதிப்பில் வெள்ளி கலைப் பொருட்கள் குழுமம் அமைக்கப்படும். சென்னை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளி கலைப் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில், பெரம்பூரில் வெள்ளி கலைப் பொருட்கள் குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.5 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்படும். இந்த வசதிகளை அமைப்பதன் மூலம் வெள்ளி கலைப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில்முனைவோரின் உற்பத்தி திறன் வருவாய், மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மேம்படும்.

* திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் வட்டம், கல்லிப்பாளையம் கிராமத்தில் ஆஃப்செட் பிரிண்டிங் மற்றும் புக் பைண்டிங் குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.31.75 கோடி திட்ட மதிப்பில் நிறுவப்படும். திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினை சார்ந்த அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 120-க்கு மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில், பெருமாநல்லூர் வட்டம், கல்லிப்பாளையம் கிராமத்தில் ஆஃப்செட் பிரிண்டிங் மற்றும் புத்தக பைண்டிங் குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.31.75 கோடி திட்ட மதிப்பில் MSE-CDP திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு மானியம் ரூ.18 கோடி மற்றும் தமிழ்நாடு அரசு மானியம் ரூ.6 கோடி உதவியுடன் அமைக்கப்படும். இந்த வசதிகளை அமைப்பதன் மூலம் அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரின் உற்பத்தி திறன், வருவாய், மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மேம்படும்.

* திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பெருமாபாளையம் கிராமத்தில் அச்சு குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.29.93 கோடி திட்ட மதிப்பில் நிறுவப்படும். திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினை சார்ந்த அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில், துறையூர் வட்டம், பெருமாபாளையம் கிராமத்தில் அச்சு குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.29.93 கோடி திட்ட மதிப்பில் MSE-CDP திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு மானியம் ரூ.20.95 கோடி மற்றும் தமிழ்நாடு அரசு மானியம் ரூ.4.44 கோடி உதவியுடன் அமைக்கப்படும். இந்த வசதிகளை அமைப்பதன் மூலம் அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரின் உற்பத்தி திறன், வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மேம்படும்.

* கரூர் மாவட்டம், மணிமங்கலம் வட்டம், ஆத்தூர் கிராமத்தில் செயற்கையிழை ஆடைகள் (Synthetic Textile Clothing) குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.31.75 கோடி திட்ட மதிப்பில் நிறுவப்படும். கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினை சார்ந்த கொசு வலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பயன்படும் வகையில், மணிமங்கலம் வட்டம், ஆத்தூர் கிராமத்தில் செயற்கையிழை ஆடைகள் குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.31.75 கோடி திட்ட மதிப்பில் ஒன்றிய அரசின் MSE-CDP திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு மானியம் ரூ.18 கோடி மற்றும் தமிழ்நாடு அரசு மானியம் ரூ.6 கோடி உதவியுடன் அமைக்கப்படும். இந்த வசதிகளை அமைப்பதன் மூலம் கொசு வலை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரின் உற்பத்தி திறன், வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மேம்படும்.

* தொழில் நிறுவனத்தினர் மற்றும் தகவல் தொழில் நுட்ப தொழில் முனைவோர்களின் தற்போதைய பணியிட வசதி தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் இணை பணியிட வசதி வளாகம் (Co-Working Space Building) ரூ.23.33 கோடி திட்ட மதிப்பில் 4 இடங்களில் நிறுவப்படும். தொழில் நிறுவனத்தினர் மற்றும் தகவல் தொழில் நுட்ப தொழில் முனைவோர்களின் தற்போதைய பணியிட வசதி தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், 25 முதல் 225 அலுவலக இருக்கை வசதிகளுடன் கூடிய இணை பணியிட வசதி வளாகம் தமிழ்நாடு சிட்கோ மூலம் ரூ.23.33 கோடி திட்ட மதிப்பில் கிண்டி, அம்பத்தூர், மதுரை மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 4 இடங்களில் நிறுவப்படும். இவ்வளாகங்கள் தகவல் தொழில் நுட்ப வசதி, சிற்றுண்டி உணவகம் மற்றும் சிறிய கூட்ட அரங்கு ஆகிய வசதிகளை கொண்டிருக்கும். மேலும், புத்தொழில் (Start-up) நிறுவனங்களுக்கான பணியிட வசதி, குறுகிய கால திட்ட பணிகளுக்கான அலுவலக இட வசதி மற்றும் தகவல் தொழில் நுட்ப தொழில் முனைவோர்களுக்கான பணியிட வசதி போன்றவையும் ஏற்படுத்தி தரப்படும்.

* தொழில் முனைவோர்களின் தேவையினை கருத்தில் கொண்டு, 18 சிட்கோ தொழிற்பேட்டைகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளான சாலை, மழைநீர் வடிகால் மற்றும் தெருவிளக்கு போன்றவை ரூ.40 கோடி திட்ட மதிப்பில் நடப்பாண்டில் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டில் சிட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் 130 தொழிற்பேட்டைகளில் தொழில் முனைவோர்களின் தேவையினை கருத்தில் கொண்டு, கீழ்குறிப்பிட்ட 18 தொழிற்பேட்டைகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளான சாலை, மழைநீர் வடிகால் மற்றும் தெருவிளக்கு போன்றவை ரூ.40 கோடி திட்ட மதிப்பில் நடப்பாண்டில் மேம்படுத்தப்படும்.
1. தர்மபுரி, தர்மபுரி மாவட்டம்
2. எளம்பலூர் , பெரம்பலூர் மாவட்டம்
3. கடையநல்லூர், தென்காசி மாவட்டம்
4. திருமழிசை, திருவள்ளுர் மாவட்டம்
5. மார்தாண்டம், கன்னியாகுமரி மாவட்டம்
6. புதுக்கோட்டை (சிப்காட்), புதுக்கோட்டை மாவட்டம்
7. நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம்
8. நாமக்கல், நாமக்கல் மாவட்டம்
9. குடிமங்களம், திருப்பூர் மாவட்டம்
10. ஊட்டி, நீலகிரி மாவட்டம்
11. அரக்கோணம், இராணிப்பேட்டை மாவட்டம்
12. கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம்
13. மேட்டூர், சேலம் மாவட்டம்
14. மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டம்
15. கப்பலூர், மதுரை மாவட்டம்
16. குறிச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்
17. கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்
18. பேட்டை, திருநெல்வேலி மாவட்டம்

* காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.37.25 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி நிறுவப்படும். காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி எற்படுத்தும் வகையில் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் 1.36 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.37.25 கோடி திட்ட மதிப்பீட்டில், 82,000 ச.அடி கட்டிடப்பரப்புடன் தூண் தளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய தொழிலார்கள் தங்கும் விடுதி கட்டப்படும் திட்ட மதிப்பான ரூ.37.25 கோடியில், நிலமதிப்பு ரூ.8.25 கோடி மற்றும் கட்டுமான செலவு ரூ. 29 கோடி ஆகும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 648 தொழிலாளர்கள் பயன் பெறுவர்.

* ரூ.1.50 கோடி செலவில் குழந்தைகளுக்கான பொம்மை பொருட்கள் மற்றும் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கான கல்வி உபகரணப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உட்கட்டமைப்பு சென்னை, கிண்டியிலுள்ள டான்சி கல்வி உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்கூடத்தில் உருவாக்கப்படும். குழந்தைகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாரம்பரியமான பொம்மை பொருட்கள் மற்றும் தொடக்கப் பள்ளி, மாற்றுத் திறனாளி மாணாக்கர்கள், அங்கன்வாடி குழந்தைகள் ஆகியோருக்கான அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை சிறப்பு நோக்கமாகக் கொண்ட கல்வி உபகரணங்களை தயாரிக்கும் பணியை டான்சி மேற்கொள்ளும். இதற்காக தனிப்பட்ட சிந்தனை மற்றும் வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டு, உற்பத்திக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் சென்னை கிண்டியிலுள்ள, டான்சி கல்வி உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்கூடத்தில் சுமார் ரூ.1.50 கோடி செலவில் நிறுவப்படும்.

* மாநிலத்தில் 2-ஆம் மற்றும் 3-ஆம் நிலை நகரங்களில் 9000 பயனாளிகளுக்கு திறனுடன் கூடிய தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி திட்டம் ரூ.2.7 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மூலம் மாநிலத்தில் 2-ஆம் மற்றும் 3-ஆம் நிலை நகரங்களில் உள்ள 9000 பயனாளிகளுக்கு திறனுடன் கூடிய தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி திட்டம் ரூ.2.7 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தொழில்முனைவு, புத்தாக்கம், மின்-வணிகம், மின்னனு சந்தைப்படுத்துதல், அடுமனைப் பொருட்கள் தயாரித்தல், ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வாய்ப்புகள் போன்ற பயிற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும்.

* புத்தாக்க பற்றுச் சீட்டு (IVP) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை பற்றுச்சீட்டு “அ”-விற்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், பற்றுச்சீட்டு “ஆ”-விற்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் / புத்தொழில் நிறுவனங்களின் புத்தாக்க திறனை மேம்படுத்துவதற்காக புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் (IVP) பற்றுச்சீட்டு “அ” மற்றும் பற்றுச்சீட்டு “ஆ”-வின் கீழ் உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை பற்றுச்சீட்டு “அ”வின் கீழ், ஆராய்ச்சி மற்றும் மாதிரி தயாரிப்பிற்கு
ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், பற்றுச்சீட்டு “ஆ”வின் கீழ் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு ரூ.5லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

* இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவிற்க்கான சிந்தனையை ஊக்குவிக்க, தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டமானது (TNYIEDP), 2000 உயர்கல்வி நிறுவனங்களில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் “நிமிர்ந்து நில்” என்கிற பெயரில் செயல்படுத்தபடும். 2000 உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் 6 இலட்சம் மாணவர்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்கி அதன்மூலம் 1000 இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிட “தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டமானது (TNYIEDP)” ரூ.19 கோடி மதிப்பீட்டில் “நிமிர்ந்து நில்” என்கிற பெயரில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் விவசாயம், ஃபின்டெக் (FinTech), சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்கள் ஆகியவை உட்பட பல்வேறு துறைகளை மையமாகக் கொண்டு 2025-26 ஆம் நிதியாண்டு முதல் 2029-30 ஆம் நிதியாண்டு வரை ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 கிராமங்களில், அனைவரையும் உள்ளடக்கிய தொழில்முனைவு வளர்ச்சி, ஊரக பகுதிகளில் புத்தாக்கம், நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றினை மையமாகக் கொண்டு 100 புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கும் “கிராமம் தோறும் புத்தொழில்” திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் வாயிலாக கீழ்க்காணும் முன்னெடுப்புகள் செயல்படுத்தப்படும்.
(1) புதுயுக தொழில்முனைவோர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
(2) தொழில்நுட்ப உதவியோடு பாரம்பரிய தொழில் துறைகளில் புத்தாக்க யுக்திகளை செயல்படுத்துதல்.
(3) சந்தைக்கேற்ற தீர்வுகளை உருவாக்குதல்.
(4) நவீன தொழில்முனைவு பண்பாட்டினை பரவலாக்குதல். மேலும், தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித்திட்டத்தின் கீழ் பயன்பெற வழிவகை செய்யப்படும்.

* பெருநிறுவனங்களில் பணியாற்றும் நபர்களில் புத்தொழில் முனைவு ஆர்வமும் மற்றும் உரிய அனுபவமும் கொண்ட திறன் வாய்ந்த பணியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான ஆதரவினை வழங்கும் Next Leap – தொழில் விரைவாக்கப் பயிற்சி திட்டம் ரூ.1 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். பெரு நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களில் புத்தொழில் முனைவு ஆர்வம் கொண்ட நபர்களுக்கு முறையான வழிகாட்டுதல்கள்,தொடர்புகள், உத்திகள் போன்ற புத்தொழில் தொடங்குவதற்கான முழுமையான ஆதரவுகளை வழங்கும் விதமாக இம்முன்னெடுப்பு அமையும். புத்தொழில் மற்றும் தொழில்முனைவு மேம்பாடு சார்ந்து செயல்படும் தொழில் துறை அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் பயன்பெற முன்னரே வரையறுக்கப்படட அளவுகோல்கள் அடிப்படையில் தகுந்த
100 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான ஆதரவு வழங்க ஏதுவாக Next Leap – தொழில் விரைவாக்கப் பயிற்சி திட்டம் தொடங்கப்படும்.

* மாநிலத்தின் உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மாணாக்கர் மற்றும் பேராசியர்களுக்கான புத்தொழில் செயல்பாடுகளை மதிப்பிட்டு தரவரிசைப்படுத்தும் திட்டம் தொடங்கப்படும். கல்வி நிறுவனங்களின் புத்தொழில் திட்டங்கள், மாணாக்கர் மற்றும் பேராசிரியர்களை தொழில்முனைவில் ஈடுபட எடுக்கப்படும் முன்னெடுப்புகள் மற்றும் அந்நிறுவனங்களில் உள்ள தொழில்வளர் காப்பகங்களில் மாணாக்கருக்கான செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு ஆண்டு தோறும் தரவரிசை பட்டியல் TANSCHE உடன் இணைந்து வெளியிடப்படும்.

* தமிழ்நாட்டில் புத்தாக்க தொழில்முனைவினை ஊக்கபடுத்த ‘வென்ச்சர் பில்டர் (Venture Builder)’ திட்டம்” ரூ.50 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும். புதிய புத்தொழில் நிறுவனங்களை உருவாக்குதல், அதிக திறன் கொண்ட புத்தொழில் நிறுவனங்களை அடையாளம் கண்டு அதன் வளர்ச்சிக்கு உதவுதல், நேரடி வழிகாட்டுதலை வழங்குதல், நிதி மற்றும் சந்தை அணுகலை எளிதாக்குதல் ஆகிய செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் venture builder அமைப்புகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு இத்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும். இந்த முயற்சி புத்தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையவும், முதலீடுகளை ஈர்க்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும், இந்தியாவின் முன்னணி புத்தாக்க மற்றும் புத்தொழில் மையமாக தமிழ்நாட்டினை நிலைநிறுத்தவும் உதவும். இதன் மூலம் 20 venture builder எனப்படும் புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கும் அமைப்புகளுக்கு ஆதரவளித்து அதன் வாயிலாக ஆண்டுக்கு 500 புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவவேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரூ.50 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

* கல்வி நிலையங்கள், தொழில்துறை மற்றும் தொழில் முனைவோர்களை இணைக்கும் விதமாக ரூ.50 லட்சம் செலவில் தமிழ்நாடு தொழில்நுட்ப பரிமாற்ற மையம் அமைக்கப்படும். கல்வி நிறுவனங்களில் கண்டுபிடிக்கப்படும் புத்தாக்க தீர்வுகளை நடைமுறை உலகில் செயல்முறைப்படுத்த இம்மையம் உதவும். ஆய்வில் கண்டறியப்பட்ட புத்தாக்கத் தீர்வுகளுக்கான உரிமங்களை வாங்கி அதனை வணிகரீதியாக சந்தைப்படுத்தும் தொழில்முனைவோர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். அவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை எட்டினால், அவர்கள் செலுத்திய உரிமத்தொகையில் 50 சதவீத தொகை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

* விண்வெளித் தொழில்நுட்பம், கடல்சார் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தகுந்த ஆதரவு வழங்கும் விதமாக தூத்துக்குடியில் புதிய வட்டார புத்தொழில் மையம் அமைக்கப்படும். கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் மதுரை, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், ஓசூர், கோயமுத்தூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. வரும் நிதி ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வட்டார புத்தொழில் மையம் நிறுவப்பட உள்ளது. அந்தப்பகுதியில் கடல்சார் தொழில் நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், துறைமுகம் சார்ந்த புத்தொழில் முயற்சிகளுக்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அந்தத்துறைகளில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களில் சிறப்பு கவனம் செலுத்தும் விதமாக இந்த மையம் நிறுவப்பட உள்ளது. இந்த முன்னெடுப்பு மேற்கூறிய துறைகள் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதுடன், தமிழ்நாட்டின் புத்தாக்க சூழமைவினை மேம்படுத்தவும் உதவும்.

The post சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் appeared first on Dinakaran.

Related Stories: