இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பிளே கேம்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் பிளேயர்ஸ் நலச்சங்கம் ஆகியவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி, வழக்கறிஞர் அரவிந்த் வஸ்தா ஆகியோர் வாதிட்டனர்.
அவர்கள் வாதிடும்போது, காசு கொடுத்து ரம்மி விளையாடினால் அதுவும் சூதாட்டம் தான். ஆன் லைன் ரம்மியை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதனை ஒழுங்குபடுத்துவது அரசின் பொறுப்பாகும். பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் வயதை முறையாக சரிபார்க்க முடியாது என்பதால்தான் ஆதார் எண் கேட்கப்படுகிறது. மக்களை பாதுகாப்பது அரசின் கடமை. தமிழ்நாடு அரசால் ஆன்லைன் ரம்மியை ஒழுங்குபடுத்த முடியாது என்ற நிறுவனங்களின் வாதத்தை ஏற்கனவே நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. விளையாடுபவர்களின் விவரங்களை கேட்பதால் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆதார் எண் மட்டும் தான் கேட்கப்படுகிறது. கைரேகை அல்லது வேற எந்த தனிப்பட்ட தகவல்களையும் கேட்கவில்லை. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடக்கூடாது என்பதற்காகவே ஆதார் எண் கேட்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்படுவது தனி நபர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுகிறது. ரம்மி விளையாடுவதை தொழிலாக கொண்டவர்கள் 24 மணி நேரம் விளையாடினாலும் கூட அதைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. கேண்டி கிரஷ் உள்ளிட்ட விளையாட்டுகளோடு ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறு என்று நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பிறகே ஒழுங்குபடுத்தும் விதிகள் கொண்டு வரப்பட்டது என்று வாதிட்டனர். தமிழக அரசின் வாதம் நிறைவடைந்ததை அடுத்து ஆன்லைன் நிறுவனங்களின் வாதத்திற்காக வழக்கு வரும் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
The post ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனிநபர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுகிறது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் appeared first on Dinakaran.