மதுரை : மதுரை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நேற்று சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கரும்புகளும், தோரணங்களும் அப்பகுதியில் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக அமைந்திருந்தன.தைப்பொங்கல் பண்டிகையை வீடுகள் போலவே, மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசு மற்றும்தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடினர்.
இதன்படி மதுரை, மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் முல்லைப் பெரியாறு அணையை கட்டி மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயத்தை காத்த பென்னிகுவிக் நினைவு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் வானதி மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் சந்திரா மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து துறை மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பானைகளில் பொங்கலிட்டனர். பானை பொங்கியபோது பொங்கலோ பொங்கல், இது பென்னிக்குவிக் பொங்கல் என உற்சாகமாக வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக வழிபாடு நடத்திய மாணவிகள் கும்மி பாட்டு பாடி குலவையிட்டு, பாடல்களுக்கு நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
* மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கிழக்கு வட்டார கல்வி அலுவலர் மணிமாறன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து குழந்தைகளுக்கும் சர்க்கரை பொங்கல், கரும்பு, தேங்காய், வாழைப்பழம் வழங்கப்பட்டது.
* மதுரை மாநகராட்சி மறைமலை அடிகளார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ரூ.68.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வகத்தை கமிஷனர் சித்ரா விஜயன் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் தெற்குவாசல் பகுதியில் உள்ள மாசாத்தியார் பெண்கள் மேனிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் 189 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை கமிஷனர் சித்ரா விஜயன், பூமிநாதன் எம்எல்ஏ வழங்கினர். தொடர்ந்து கரும்பாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் கமிஷனர் உற்சாகமாக கலந்து கொண்டார்.
* மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை கமிஷனர் அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு, துணை கமிஷனர் வனிதா தலைமை வகித்தார். உதவி கமிஷனர்கள் இளமாறன், செல்வின் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
* மதுரை பாத்திமா கல்லூரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், முதல்வர் பாத்திமா மேரி, துணை முதல்வர்கள் பிந்து ஆண்டனி, வித்யா நிகிலா ராகவன், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.
தேசிய மாணவர் படை பெண்கள் பட்டாலியன் லெப்டினன்ட் கர்னல் மஞ்சு மற்றும் சுபேதார் மேஜர் நந்தன் சிங் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மாணவிகள் பொங்கல் வைத்ததுடன், உறியடி, சக்கர வண்டி ஓட்டுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். மாணவிகள் வைத்த பொங்கல், பரவையிலுள்ள செயிண்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளி மற்றும் விளாங்குடி அன்னை தெரசா முதியோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது.
* இளமனூர் அரசு மேனிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை கனகலட்சுமி தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் ஆசிரியர் சுந்தரமூர்த்தி, மகேந்திர பாபு, மதி வெங்கடேஷ் பங்கேற்றனர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. உரியடியில் மாணவி சுவேதா வென்றார். உடற்கல்வி ஆசிரியர் முத்துராசா மற்றும் விஜய் போட்டிகளை நடத்தினர். ஆசிரியை ராணி நன்றி கூறினார்.
* கால்நடை பராமரிப்புத்துறை மதுரை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், பாரம்பரிய முறைப்படி விறகு அடுப்பில் பணியாளர்கள் பொங்கல் மற்றும் உணவுகள் சமைத்தனர்.
தொடர்ந்து கோலம், இசை நாற்காலி, பானை உடைத்தல் போன்ற போட்டிகள் மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சு பணியாளர் அலுவலர் சங்க மாநில பொருளாளர் சசிகுமார், மாவட்ட தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
* மதுரை, தல்லாகுளம் பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை அலுவலகங்களில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், நீர்வளத்துறைமதுரை மண்டல கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு வைகை வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சிவபிரபாகரன், குண்டாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மொக்கமாயன், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் காமராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
* மதுரை முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலர் சரவண முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர். அலுவலக வளாகத்தில் விறகடுப்பில் பொங்கல் வைத்து, வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
* மதுரை, வில்லாபுரத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் பராமரிப்பு அலுவலகத்தில், அலுவலர் சங்க மாநில தலைவர் மா.தங்கமுத்து தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், உதவிக்கோட்ட பொறியாளர் ஆதிராஜாராம், உதவி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* திருமங்கலத்தில் உள்ள நகராட்சி அறிவுசார் மையத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு, நூலக கண்காணிப்பாளர் கவிதா தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மெக்கோ தொமுச தலைவர் முத்துக்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் ரம்ஜான் பேகம் ஜாகீர், சரண்யா ரவி, வீரக்குமார், அசாரூதின், திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிக்குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செபாஸ்டியன், சுகாதார அலுவலர்கள் சிக்கந்தர், வனஜா, சுகாதார மேற்பார்வையாளர் வில்லியம்ஸ் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். திருமங்கலம் நகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகராட்சி நுண் உரக்கூடங்களில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
* கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், அனைவரும் வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றனர். நிலைய அலுவலர் வரதராஜன் தலைமையில் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு கயிறு இழுத்தல், வாலிபால், பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று, வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
* மதுரை காந்தி மியூசியத்தில் சர்வோதய பொங்கல் விழா நேற்று மியூசிய பொருளாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மியூசிய செயலாளர் நந்தாராவ், அலுவலர்கள் நடராஜன், தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கல்வி அலுவலர் நடராஜன் தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் சுவாமிநாதன், வழக்கறிஞர் கமலானந்த், பேராசிரியர் ஜெயக்கொடி பங்கேற்றனர். யோகா மாணவர்களின், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், கராத்தே, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கத்தோலிக்க பேராயர் வாழ்த்து
மதுரை மறை மாவட்ட கத்தோலிக்க பேராயர் அந்தோணி சாமி சவரிமுத்து விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து:பொங்கல் திருநாள், இயற்கையுடன் மனித உறவு மற்றும் உழைப்பின் மகத்துவத்தை கொண்டாடும் தமிழர்களின் பாரம்பரியத் திருவிழா. இது மதத்தின் விழாவல்ல. மதங்கள், சமூக வேறுபாடுகளை கடந்து, அனைவரையும் ஒன்றிணைக்கும் மனிதநேயத் விழா.
பொங்கல், விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவதுடன், இயற்கையை போற்றும் இவ்விழா, தமிழர்களின் மொழி, பண்பாடு, பண்பாட்டுச் செழுமை மற்றும் கலாச்சார மரபின் அடையாளம்.
பகிர்வு, ஒற்றுமை, சமூக பொறுப்பு. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்றவற்றை பொங்கல் பண்டிகை கற்றுத் தருகிறது. இந்த இனிய திருநாளில், விவசாயிகள் வளமுடன் வாழவும், இயற்கை பாதுகாக்கப்படவும், தமிழ் சமூகம் முன்னேறவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
