திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான சிறப்பு வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நன்கொடையாளர்களுக்கு பல்வேறு சேவைகள், வசதிகள் செய்து தரப்படுகிறது. அதன்படி ரூ.1 கோடி நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சிறப்பு வசதி வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதில் தற்போது மேலும் 2 அறக்கட்டளைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வசதிகளை விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள அறிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளிக்கும் பக்தருக்கு ஒரு வருடத்தில் 3 நாட்கள் சுப்ரபாத சேவை, 3 நாட்கள் விஐபி தரிசனம், 4 நாட்கள் சுபதம் நுழைவாயில் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். அவர்கள் தங்களுடன் 4 பேரை அழைத்து வரலாம். இவர்களுக்கு 10 பெரிய லட்டுகள், 20 சிறிய லட்டுகள், 1 சால்வை, 1 ரவிக்கை, மகா பிரசாதம் எனப்படும் தீர்த்த பாக்கெட்டுகள் 10 வழங்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை வேதாசீர்வாதம் செய்யப்படும். இத்துடன் ரூ.3,000 வாடகையுடன் கூடிய தங்கும் அறைகள் 3 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் வாழ்நாளில் ஒருமுறை, நன்கொடையாளர் அலுவலகத்தில் பொருத்தமான சான்று காண்பித்து பெருமாள் உருவம் பதித்த 5 கிராம் தங்க டாலர் மற்றும் 50 கிராம் வெள்ளி டாலர் ஆகியவற்றை இலவசமாக பெறலாம்.
நன்கொடையாளர்கள் தேவஸ்தானத்தின் எஸ்.வி. பிராணதானம், எஸ்.வி. வித்யாதானம், பர்ட், வெங்கடேஸ்வரா அன்னதானம், வெங்கடேஸ்வரா சர்வ ஷ்ரேயஸ், பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி (சிம்ஸ் மருத்துவமனை), வாணி மற்றும் வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (எஸ்விபிசி) ஆகிய அறக்கட்டளைகளில் ஏதாவது ஒன்றுக்கு நன்கொடை தொகையை அளித்து இந்த வசதிகளை பெறலாம். மேலும் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வெங்கடேஸ்வரா கோ-சம்ப்ரக்ஷணம், ஸ்ரீவெங்கடேஸ்வரா வேத பரிரக்ஷன் அறக்கட்டளைக்கும் நன்கொடை அளிக்கலாம்.
நன்கொடையாளர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.ttdevasthanams.ap.gov.in என்ற வெப்சைட் மூலம் நன்கொடை வழங்கலாம். ஆப்லைனில் TTD, E.O. என்ற பெயரில் டிடி அல்லது காசோலைகளை திருமலையில் உள்ள நன்கொடையாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.4.51 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 58,864 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,784 பேர் தலைமுடி காணிக்ைக செலுத்தினர். உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.4.51 ேகாடி கிடைத்தது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் 12 மணிநேரம் காத்திருந்து தரிசிப்பார்கள். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.