பெரம்பலூர், ஏப்.4: பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய சிற்றுந்து சேவை திட்டம்-2024 கீழ் ஒரு வழித் தடத்திற்கு மேல் விண்ணப்பித்த நபர்களுக்கு குலுக்கல் முறையிலான தேர்வு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 11 வழித்தடங்களுக்கு விண்ணப்பம் செய்த 39 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய சிற்றுந்து சேவை திட்டம்-2024 கீழ் தமிழ்நாடு முழுவதும் சிற்றுந்து சேவைகள் இயக்கப்படவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்கப்படவுள்ள 16 வழித் தடங்களில் ஒரு வழித் தடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்த வழித் தடங்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்வு, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கும் பேருந்து சேவையினை வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் சிற்றுந்து சேவை திட்டம்-2024 என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என அரசால் அறிவிக்கப் பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க 16 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு கடந்த பிப்-12 மற்றும் பிப்- 19 ஆகியத் தேதிகளில் பெரம்பலூர் மாவட்ட அரசிதழில் வெளியிடப் பட்டது.
இந்த வழித் தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரும்புபவர்கள் அரசிதழில் தெரிவிக்கப் பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி வருகிற 31க்குள் பரிவாகன் (www.parivahan.gov.in < //www.parivahan.gov.in/ >) என்ற இணையதளம் வாயிலாக பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவ்வாறாக 16 புதிய வழித் தடங்களுக்கு 44 விண்ணப் பங்கள் பெறப்பட்டது. இதில் 5 வழித்தடங்களுக்கு ஒரு நபர்கள் மட்டுமே விண்ணப் பித்திருந்தனர். மீதம் உள்ள 11 வழித் தடங்களுக்கு 39 விண்ணப்பங்கள் வரப் பட்டிருந்த நிலையில் ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்ததால் தமிழக அரசின் அரசாணை எண் 33 உள் (போக்குவரத்து-1) நாள் 23.10.2025-ன்படி ஒரு வழித் தடத்திற்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் குலுக்கல் முறையில் ஒருவரை தேர்வு செய்யும் நிகழ்வு கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் அனைத்து விண்ணப்பதாரர்கள் முன்னிலையில் நடைபெற்றது. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் பட்ட நபர்களுக்கு புதிய சிற்றுந்து சேவைத் திட்ட செயல்முறை ஆணை மாவட்டக் கலெக்டரால் வழங்கப்பட்டது.
மேலும் தமிழக அரசால் பொதுமக்களுக்கு புதிய சிற்றுந்து சேவை திட்டம் வருகிற மே 1 முதல் நடை முறைப்படுத்த உள்ளதால் இது தொடர்பான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவ மற்றும் விண்ணப்பதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post பெரம்பலூரில் 11 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை திட்டத்திற்கு குலுக்கல் முறையில் நபர்கள் தேர்வு appeared first on Dinakaran.