தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்; பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் கடிதம்

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து உங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யும்போது, தமிழ்நாடு போன்ற மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மார்ச் 5ம் தேதி நடத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்கள் தொகையைக் குறைத்த மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. அதற்கேற்ற வகையில் ஒன்றிய அரசு உரிய அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு மாற்றக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. மேலும், ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்று நமது உரிமைகளை மீட்டெடுக்கத் தீா்மானிக்கப்பட்டது. அந்த வகையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயமான மறுசீரமைப்பைப் பெற, தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை அழைத்துச் சென்று பிரதமா் மோடியைச் சந்திக்கவிருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களுடன் எங்கள் சமீபத்திய விவாதங்களிலிருந்து உருவான எல்லை நிர்ணயம் குறித்த ஒரு மனுவை கொடுக்க விரும்புகிறேன். கடந்த மார்ச் 22 அன்று, சென்னையில் ‘நியாயமான எல்லை நிர்ணயம்’ குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது.

இது இந்தியா முழுவதும் உள்ள முதல்வர்கள், துணை முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியத் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டமாகும்.
தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதால், 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும், தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த எங்களின் கவலைகள் மற்றும் கருத்துகளை மனுவாக அளிக்க வேண்டும்.

மேலும், சென்னையில் நடைபெற்ற நியாயமான தொகுதி மறுசீரமைப்பு நிர்ணயத்திற்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து தமிழகத்தின் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுடன் சேர்ந்து, உங்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும். முன்னர் குறிப்பிட்டது போல, நாட்டின் கூட்டாட்சிக்கும், தமிழ்நாட்டின் உரிமைக்கும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தை எதிர்த்து ஒற்றை நோக்கத்தோடு கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் எங்களின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க நாங்கள் அவசரமாக உங்களை சந்தித்து ஆலோசனை நடத்த நேரம் கோருகிறோம். உங்கள் விரைவான பதிலுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

‘மோடியின் பதிலுக்கு காத்திருக்கிறோம்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, சென்னையில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் தீர்மானங்களை, பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தங்களிடம் நேரில் அளித்து, தொகுதி மறுவரையறை தொடர்பான எங்கள் கவலைகளை தெரிவிக்க நேரம் கேட்டிருந்தோம். ஏற்கனவே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த முக்கியப் பிரச்னையில் எங்களது ஒன்றுபட்ட நிலைப்பாட்டைத் தெரிவிக்க தங்களை உடனடியாகச் சந்திக்கக் கோருகிறோம். தங்களது விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.

The post தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்; பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: