தூத்துக்குடி, ஏப். 2: தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப் பணிக்காக மெர்க்கன்டைல் வங்கி சார்பில் வழங்கப்பட்ட வாகனத்தை கனிமொழி எம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மையானதாகவும், மாசில்லாததாகவும் பராமரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சியும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும் இணைந்து வங்கியின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் வாங்கியுள்ள பாதாள சாக்கடை நீர் அகற்றும் வாகனத்தை மாநகர மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்பி கலந்து கொண்டு வாகன இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாட்டில் உள்ள சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை மேன்ஹோல்களில் அடைப்புகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த முடியும். மேலும் ஏற்கனவே இது போன்ற 12 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் திட்ட இயக்குநர் வின்சன்ட் மெனச்சரி, மாநகராட்சி துணை பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் உள்பட மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணிக்காக டிஎம்பி வழங்கிய வாகனம் appeared first on Dinakaran.