அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், வரி விவகாரத்தில் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். மற்ற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவு வரி அந்தந்த நாடுகள் மீதும் விதிக்கப்படும் என்கிற பரஸ்பர வரி விதிப்பு முறையை ஒருமாத காலக்கெடுவுடன் கடந்த மாதம் அறிவித்தார். இந்த கெடு முடிவடைந்து, டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு முறை இன்று அமலுக்கு வர உள்ளது. இது உலகளாவிய வர்த்தக போருக்கு வழிவகுக்கக் கூடிய அபாயகரமான வரி விதிப்பாக பார்க்கப்படுகிறது. இந்த பரஸ்பர வரியால் இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் இருந்தே இந்தியாவின் வரி விதிப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார். வரிகளின் ராஜா என இந்தியாவுக்கு பெயர் சூட்டினார். அதிபரான பிறகும், உலகிலேயே அதிகமான வரி விதிக்கும் நாடு இந்தியா என குற்றம்சாட்டினார். இதனால், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, வரி தொடர்பாக அதிபர் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பரஸ்பர வரியை தவிர்க்க சில அமெரிக்க பொருட்களுக்கான வரியை இந்தியா குறைத்தது. அமெரிக்காவின் மோட்டார் பைக்குகளுக்கான வரி 50 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், போர்பன் விஸ்கிக்கு 150 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாகவும் குறைப்பதாக அறிவித்தது.
அதுமட்டுமின்றி, பரஸ்பர வரியிலிருந்து விலக்கு பெற இந்தியா உயர்மட்ட குழு அமெரிக்காவுடன் கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த தீர்க்கமான முடிவும் எட்டப்படவில்லை. எனவே பரஸ்பர வரியிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையே, பரஸ்பர வரி தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லிவிட் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘துரதிர்ஷ்டவசமாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிக நீண்ட காலமாக நமது நாட்டை கொள்ளையடித்து வருகின்றன. அதன் மூலம், அவர்கள் அமெரிக்க தொழிலாளர்கள் மீதான வெறுப்பை மிகவும் தெளிவாகக் காட்டியுள்ளனர். குறிப்பாக, அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு நியாயமில்லாத வரி விதிப்புகள் பின்பற்றப்படுகின்றன.
அமெரிக்க பால் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 50 சதவீத வரி விதிக்கிறது. அமெரிக்க அரிசிக்கு ஜப்பான் 700% வரி விதிக்கிறது. அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு இந்தியா 100% வரியும், அமெரிக்க வெண்ணெய் மற்றும் சீஸ் மீது கனடா 300% வரியும் விதிக்கிறது. இது அமெரிக்கப் பொருட்களை மேற்கண்ட நாடுகளின் சந்தைகளில் இறக்குமதி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது. இது கடந்த பல தசாப்தங்களாக பல அமெரிக்கர்களை வணிகத்திலிருந்தும் வேலையிலிருந்தும் வெளியேற்றியுள்ளது. எனவே இது திருப்பி அடிக்கும் நேரம். அமெரிக்க மக்களுக்கு நியாயமான இந்த வரி ஏப்ரல் 2ல் அமலாகிறது. இது குறித்த அறிவிப்பை அதிபர் டிரம்பே அறிவிப்பார்’’ என்றார்.
இதனால் இந்தியாவைப் போலவே இந்திய விவசாய பொருட்களுக்கு 100 சதவீத வரியை விதிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது அமெரிக்காவுக்கான இந்திய உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். தற்போது இந்தியா அரிசி, இறால், தேன், காய்கறி சாறுகள், ஆமணக்கு எண்ணெய் மற்றும் மிளகு ஆகியவற்றை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. மொத்தம் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாய பொருட்கள் வர்த்தகம் நடக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்கா பாதாம், வால்நட், பிஸ்தா, ஆப்பிள் மற்றும் பருப்பு வகைகளை இந்தியாவுக்கு அனுப்புகிறது. இந்தியா, அமெரிக்கா இடையே கடந்த 2024ல் ரூ.11 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.
இதில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.7.5 லட்சம் கோடி. மருந்துகள், ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், ஆட்டோமொபைல்கள், உணவுப் பொருட்கள் போன்றவை இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளாக உள்ளன. இவை அனைத்திற்கும் வரி அதிகரிக்கும் பட்சத்தில், இந்தியா ஆண்டுதோறும் ரூ.60 ஆயிரம் கோடி இழப்பை சந்திக்க நேரிடும். இதுவரை டிரம்பின் பரஸ்பர வரி குறித்து விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அந்த விவரங்கள் அதிபர் டிரம்புக்கு மட்டுமே தெரியும் என அமெரிக்க அதிகாரிகள் கூறி உள்ளனர். எனவே பரஸ்பர வரியில் என்னென்ன அறிவிப்புகளை டிரம்ப் வெளியிடப் போகிறார் என்பது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
‘இந்தியா தனது வரிகளை கணிசமாகக் குறைக்கும்’
பரஸ்பர வரிக்கான இறுதிகட்டம் எட்டியிருக்கும் நிலையில், தனது ஓவல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், ‘‘பல ஆண்டுகளாக அமெரிக்கா மீது நியாயமற்ற முறையில் வரி விதித்து வருவதால், இனி பல நாடுகளும் தங்கள் வரிகளைக் குறைப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே கார்களுக்கான வரியை 2.5 சதவீதம் குறைத்துள்ளது. இது 2 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரி இதைவிடக் குறைவு. சிறிது நேரத்திற்கு முன்பு, இந்தியாவும் அதன் வரிகளை கணிசமாகக் குறைக்கப் போகிறது என்று கேள்விப்பட்டேன். இந்தியாவும் தனது வரிகளை கணிசமாக குறைக்கும். ஏன் இதை யாரும் நீண்ட காலத்திற்கு முன்பே செய்யவில்லை’’ என்றார்.
பழிவாங்குவோம்
பரஸ்பர வரி குறித்து ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான்டெர் லேன் நேற்று தனது உரையில், ‘‘இந்த மோதலை ஐரோப்பா தொடங்கவில்லை. நாங்கள் பழிவாங்க விரும்பவில்லை. ஆனால் தேவைப்பட்டால் பழிவாங்குவதற்கான வலுவான திட்டம் எங்களிடம் உள்ளது. அதை பயன்படுத்துவோம். வர்த்தம் முதல் தொழில்நுட்பம் வரையிலும் பல துருப்பு சீட்டுகளை நாங்கள் கொண்டுள்ளோம். பதிலடி தருவோம்’’ என்றார். ஏற்கனவே கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு போட்டியாக அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரியை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லா வரிகளும் இன்று அமலாகிறது
பரஸ்பர வரியை தவிர, கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிப்பும் இன்று அமலுக்கு வருகிறது. கடந்த மார்ச் மாதமே இந்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப், ஒரு மாத காலம் அவகாசம் வழங்கினார். இந்த அவகாசம் இன்றுடன் முடிகிறது. மேலும், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அத்தனை கார்களுக்கும் 25 சதவீத வரி விதிப்பும் இன்று அமலுக்கு வர உள்ளது. இதற்கான வரிகள் நாளை முதல் வசூலிக்கப்படும். வெனிசுலா நாட்டிடம் கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் அத்தனை நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கும் விதிக்கப்பட்ட 25 சதவீத வரியும் இன்று அமலாகிறது.
இந்த வரி விதிப்புகள் மூலம் அமெரிக்காவுக்கு ரூ.50 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்களுக்கான 25 சதவீத வரி மூலம் மட்டும் ரூ.8.5 லட்சம் கோடி கிடைக்கும் என கூறப்படுகிறது. இதைத் தவிர சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 10 சதவீதம் வரி உள்ளிட்ட சில வரிகள் ஏற்கனவே மார்ச்சில் அமலுக்கு வந்துள்ளன. டிரம்பின் இந்த வரிகளுக்கு பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியம், கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கான வரியை அதிகரித்துள்ளன. இதன் மூலம் உலகளாவிய வர்த்தக யுத்தத்தை டிரம்ப் இன்று தொடங்கி வைக்கப் போகிறார்.
இந்திய பங்குச்சந்தையில் ரூ.3.44 லட்சம் கோடி இழப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பங்குச்சந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை இந்திய பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 76,882 புள்ளிகளுடன் சரிவுடனேயே துவங்கியது. அதிகபட்சமாக 75,912 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தக இடையில் அதிகபட்சமாக 1,501 புள்ளிகள் சரிந்தது. முடிவில் 1,390 புள்ளிகள் சரிந்து 76,024 ஆக இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 254 புள்ளிகள் சரிந்து 23,166 புள்ளிகளாக இருந்தது.வங்கி, ரியல் எஸ்டேட், ஐடி, நுகர்வோர் பொருட்கள், நிதிச்சேவைகள் சார்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.3.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. டிரம்ப் நடவடிக்கைகளால் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதால் விங்கம் விலையும் உச்சத்தை எட்டியது. கடந்த 6 நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. 28ம் தேதி ஆபரண தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ.840 அதிகரித்தது. பின்னர் 31ம் தேதி ரூ.720 உயர்ந்தது. நேற்று சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.68,080 ஆனது. 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பரஸ்பர வரி விதிப்பு முறை இன்று முதல் அமல் இந்திய விவசாய பொருட்களுக்கு 100% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி முடிவு appeared first on Dinakaran.