இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளி கல்வித்துறையில் தட்டச்சர் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்து நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை உலகளவில் மேம்படுத்த நிதிநிலையில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களும், தனி நபர்களும், பெரும் நிறுவனங்களும் பங்கேற்று பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை விரைந்து மேம்படுத்திட”நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி (NSNOP) திட்டத்தை” செயல்படுத்தி வருகின்றார்.
இத்திட்டத்தின் கீழ் சென்னை திருவல்லிக்கேனி லேடிவில்லிங்டன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெர்சுசா அறக்கட்டளையின் (Virtusa Foundation) பங்களிப்பில் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகங்கள், நவீன சமையற் கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. அறிவியல் ஆய்வகங்கள் கொண்ட கட்டடம் 6,600 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆய்வகங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வாய்வகத்தில் 24 இருக்கைகள் கொண்ட இரண்டு வகுப்பறைகளுடன் மொத்தம் 120 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பள்ளியின் வளாகத்தில் 4,600 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மற்றொரு தனிக்கட்டடத்தில் சமையல் அறை மற்றும் 60 இருக்கைகள் கொண்ட உணவு அருந்தும் கூடம் ஆகியவை உள்ளன.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர். பி. சந்தரமோகன், இ.ஆ.ப., பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முனைவர். ச.கண்ணப்பன், வெர்சுசா அறக்கட்டளையின் துணை செயல் தலைவர் வெங்கடேசன் விஜயராகவன், முதன்மை தொழில் நுட்ப அலுவலர் ராம் மீனாட்சி சுந்தரம், கிருஷ்ணா எதுலா, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
The post திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி..!! appeared first on Dinakaran.