இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 26 சதவீத வரி விதிப்பு: டிரம்ப் அறிவிப்புக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம்


வாஷிங்டன்: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 26 சதவீத வரி விதித்தது. இது வர்த்தக போராக மாறலாம் என்பதால் உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஏப்ரல் 2ம் தேதி (இன்று) முதல் ரெசிப்ரோக்கல் (ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது விதிக்கும் வரி) வரியை அமல்படுத்த போவதாக அறிவித்திருந்தார். இது சர்வதேச அளவில் வணிக போரை தொடங்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிடையே இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் அதிபர் டிரம்ப் நிருபர்களை சந்தித்தார். அப்போது, அமெரிக்க வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். இது எங்கள் பொருளாதார சுதந்திர பிரகடனம். இன்றைய நாள், அமெரிக்க வரலாற்றில் என்றென்றும் நினைவு கூரப்படும்.

வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் நம் நாட்டிற்குள் மீண்டும் வரும். வெளிநாட்டு தயாரிப்பு ஆட்டோமொபைல்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. உலக நாடுகள், அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் அதே அளவு வரியை நாமும் விதிக்க போகிறோம். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற போகிறோம்’ என்றார். மேலும் உலகில் எந்த நாட்டிற்கு எவ்வளவு வரி விதிக்க போகிறோம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அந்த பட்டியலில் பல்வேறு நாடுகளின் பெயர்களும் அந்நாட்டிற்கு எவ்வளவு சதவிகிதம் வரி என்பது குறித்த விவரம் இடம் பெற்றிருந்தது. இந்தியாவுக்கு 26% இறக்குமதி வரி வசூலிக்கப்படும் என்றும் உலக நாடுகள் மீதான வரியில் சலுகை காட்டியுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். அதே நேரத்தில், இது முழுமையாக பரஸ்பர வரி இல்லை, உலக நாடுகள் வசூலிப்பதில் சுமார் 50% வரியை மட்டுமே அறிவித்துள்ளது.

அமெரிக்க இறக்குமதிகளுக்கு, இந்தியா 52 சதவீத வரியை விதிக்கிறது, நாங்கள் 26 சதவீதம் மட்டுமே விதித்துள்ளோம்’ என்றும் கூறினார். இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா வந்தபோது, ‘மோடி எனது சிறந்த நண்பர். ஆனால் மிகவும் கடுமையான வரிகளை இந்தியா நம் மீது விதிக்கிறது. அமெரிக்காவை இந்தியா சரியாக நடத்தவில்லை’ என்றும் டிரம்ப் கூறியிருந்தார். அந்தந்த நாடுகளின் வரிக்கு ஏற்ப அமெரிக்கா விதித்துள்ள வரிகளை எதிர்கொள்ளப்போகும் நாடுகளின் விவரம்: சீனா 34 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20, தென் கொரியா 25, இந்தியா 26, வியட்நாம் 46, தைவான் 32, ஜப்பான் 24, தாய்லாந்து 36, சுவிட்சர்லாந்து 31, இந்தோனேசியா 32, மலேசியா 24, கம்போடியா 49. ஐக்கிய இராச்சியம் 10, தென்னாப்பிரிக்கா 30, பிரேசில் 10, வங்கதேசம் 37, சிங்கப்பூர் 10, இஸ்ரேல் 17, பிலிப்பைன்ஸ் 17, சிலி 10, ஆஸ்திரேலியா 10, பாகிஸ்தான் 29, துருக்கி 10, இலங்கை 44, கொலம்பியா 10. குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் அதிகபட்சமாக 49 சதவீதம் வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து வரியும் வரும் ஏப்ரல் 9ம் தேதி 12.01 மணி முதல் அமலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்புக்கு உலக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்: இந்த நியாயமற்ற வரிகளுக்கு மிக பெரிய விலையை அமெரிக்க மக்கள்தான் செலுத்த போகிறார்கள். இதற்காக நாங்கள் எந்த ஒரு வரியையும் விதிக்கப்போவது இல்லை. அப்படி நாங்களும் வரியை அறிவித்தால் எங்கள் நாட்டிலும் விலை அதிகரிக்கும். வளர்ச்சி குறையும்.. எனவே அதை செய்ய போவதில்லை. கனடா பிரதமர் மார்க் கார்னி: ஸ்டீல், அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல்கள் மீதான அமெரிக்க வரிகள் பல லட்சம் கனடா மக்களை கடுமையாக பாதிக்கும். இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம். அதுவும் வெகு சீக்கிரமாக நடவடிக்கை இருக்கும்.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்: இந்த வர்த்தக போர் யாருக்கும் நன்மையை தராது. நாங்கள் அனைத்திற்கும் தயாராகவே இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் சமாளிப்போம். தேவை என்றால் பதிலடியும் தருவோம். அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு இரு தரப்பையும் பாதிக்கும் என ஜெர்மனி கவலை தெரிவித்துள்ளது. அதேபோல ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், “நாங்கள் எங்கள் நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் பாதுகாப்போம். சர்வதேச வணிகத்திற்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அதேநேரம் எங்கள் தொழிலாளர்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என்றார். ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன்: நாங்கள் ஒரு வர்த்தக போரை விரும்பவில்லை.

அமெரிக்காவுடன் சேர்ந்து வர்த்தகம் செய்ய விரும்புகிறோம். அப்போதுதான் எங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வை உறுதி செய்ய முடியும். மேலும், இந்த வரிகளுக்கு ஏப்ரல் மாத இறுதிக்குள் பதிலடி கொடுக்கும் என என்று பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். டிரம்பின் இந்த வரி விதிப்பால் 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் கணிசமாக பாதிக்கப்படும். ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஸ்டீல் மற்றும் அலுமினியம் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இந்த வரி அறிவிப்பை அந்த துறையை கடுமையாக பாதிக்கும். டிரம்பின் அறிவிப்புக்கு உலக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இது வர்த்தக போராக மாற வாய்ப்பு உள்ளதாக உலக வர்த்தக தலைவர்கள் கணிக்கின்றனர்.

The post இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 26 சதவீத வரி விதிப்பு: டிரம்ப் அறிவிப்புக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: