கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

சென்னை: கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். வேளாண்மை-உழவர் நலத்துறை சர்க்கரைத்துறை மானியக் கோரிக்கை 2025-2026 அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவை;

* கரும்பு பிரிதிறனை 90 சதவீதத்திற்கு அதிகரித்திடவும், கரும்புச் சக்கையில் ஏற்படும் சர்க்கரை இழப்பைக் குறைத்து சர்க்கரைக் கட்டுமானத்தை அதிகரிக்கவும், கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பழுதடைந்துள்ள இயந்திரத்திற்குப் பதிலாக நவீன கரும்பு பிரி திறன் இயந்திரம் மற்றும் மின்மோட்டார்கள் (Swing Type Fibrizor with Motors) ஐந்து கோடியே 70 இலட்சம் ரூபாய் நிதியில் நிறுவப்படும்.

கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தற்சமயம் இயங்கி வரும் கரும்பு பிரிதிறன் இயந்திரம் (Fibrizor unit) பழுதடைந்துள்ளது, மேலும் பிரிதிறனை 90 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திடவும், கரும்புச் சக்கையில் ஏற்படும் சர்க்கரை இழப்பைக் குறைத்து சர்க்கரைக் கட்டுமானத்தை அதிகரிக்கவும், 2025-26 ஆம் ஆண்டில், நவீன கரும்பு பிரிதிறன் இயந்திரம் (Swing type Fibrizor unit with Motor) ஒன்று ஐந்து கோடியே 70 இலட்சம் ரூபாய் நிதியில் நிறுவப்படும்.

* கரும்பு உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், இயந்திர அறுவடையை ஊக்குவிக்கவும் அகலப்பார் முறையில் உயர் விளைச்சல் மற்றும் உயர் சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட கரும்பு இரகங்களை நடவு செய்யும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்த விவசாயிகளுக்கு பருசீவல் நாற்றுக்கள், அகலப்பார் நடவு, ஒருபரு விதைக்கரணைகளுக்கு 50 சதவிகித மானியம் வழங்கிட இரண்டு கோடியே 66 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கரும்பு உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், இயந்திர அறுவடையை ஊக்குவித்து அறுவடைச் செலவைக் குறைக்கும் வகையில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 2025-26 ஆம் ஆண்டில் அகலப்பார் முறையில் உயர் விளைச்சல் மற்றும் உயர் சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட கரும்பு இரகங்களை நடவு செய்து, பதிவு செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியமாக எக்டருக்கு பருசீவல் நாற்றுக்கள் மற்றும் அகலப்பார் நடவு முறைக்கு ரூ. 18,625/-ம், ஒருபரு விதைக்கரணைகள் மற்றும் அகலப்பார் நடவு முறைக்கு ரூ.8,000/-ம் வழங்கப்படும். இத்திட்டம் மொத்தம் 2,000 எக்டர் பரப்பளவில் செயல்படுத்தப்படும். இதற்கென இரண்டு கோடியே 66 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* கரும்பு அரவைத் திறனை அதிகரிக்கவும், ஆலை நேர இழப்பைக் குறைத்து ஆலையின் செயல்திறனை மேம்படுத்திடவும் வேலூர் மற்றும் பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளுக்கு இரண்டு கோள்கல பல்சக்கரப் பெட்டிகள் (Planetary gear box) இரண்டு கோடியே 60 இலட்சம் ரூபாய் நிதியில் கொள்முதல் செய்யப்படும்.

வேலூர் மற்றும் பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளில் உள்ள 150 கிலோ வாட் மற்றும் 550 கிலோவாட் மின் மோட்டாரில் இயங்கும் கோள்கல பல்சக்கரப் பெட்டிகள் (Planetary gear box) செயலிழந்து உள்ளதைக் கருத்தில் கொண்டும், தொடர் கரும்பு அரவை மற்றும் கரும்புக் சக்கையில் சர்க்கரைக் கட்டுமான இழப்பை தவிர்க்கும் பொருட்டும், 2025-26 ஆம் ஆண்டில், இரண்டு கோள்கல பல் சக்கரப் பெட்டிகள் இரண்டு கோடியே 60 இலட்சம் ரூபாய் நிதியில் கொள்முதல் செய்யப்படும்.

* ஆலையின் செயல் திறன் மற்றும் சர்க்கரைத் தரத்தினை உயர்த்திட கள்ளக்குறிச்சி – 1 கள்ளக்குறிச்சி -2 சர்க்கரை ஆலைகளில் தலா 2 படிகலன் பகுதிகள் இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தானியங்கி மயமாக்கப்படும் (Pan automation)

சர்க்கரை படிகமாக்குதலில் சர்க்கரை அளவுருக்களைக் கட்டுப்படுத்தவும் நீராவியின் அளவைக் கட்டுப்படுத்தி நீர்சேர்க்கையை குறைக்கவும் “படிகலன் தானியங்கி மயமாக்குதல் அமைப்பு (Pan automation) இன்றியமையாதது. எனவே, 2025-26 ஆம் ஆண்டில், கள்ளக்குறிச்சி-1, கள்ளக்குறிச்சி-2 சர்க்கரை ஆலைகளுக்கு தலா 2 படிகலன்கள் இரண்டு கோடியே 40 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் தானியங்கி மயமாக்கப்படும்.

* சர்க்கரையின் தரம் மற்றும் நிறத்தினை உயர்த்தும் வகையில் வேலூர், சுப்பிரமணிய சிவா, திருப்பத்தூர், மதுராந்தகம், கள்ளக்குறிச்சி -2, எம்.ஆர்.கே. கூட்டுறவு மற்றும் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ஏழு புதிய கரும்பு சாறு சூடேற்றிகள் (Juice heater) இரண்டு கோடியே 35 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்படும்.

வேலூர், சுப்பிரமணிய சிவா, திருப்பத்தூர், மதுராந்தகம், கள்ளக்குறிச்சி -2, எம்.ஆர்.கே கூட்டுறவு மற்றும் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் உள்ள கரும்பு சாறு சூடேற்றி அலகுகள் 25 ஆண்டுகள் பழமையானவை. எனவே அவற்றின் செயல்பாடுகள் குறியீட்டின்படி இல்லாததால், கரும்புச்சாற்றின் வெப்பநிலையின் இலக்கை அடைய இயலாமல் சுண்டுகலனின் செயல்பாடுகள் பாதிப்படைகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு 2025-26 ஆம் ஆண்டில், ஏழு புதிய கரும்புச் சாறு சூடேற்றிகள் (Juice heater) இரண்டு கோடியே 35 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்படும்.

* சீரான தொடர் கரும்பு அரவை நடைபெறவும், நேர இழப்பைக் குறைக்கவும், பெரம்பலூர் சர்க்கரை ஆலையிலுள்ள 18 மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையத்திற்கு மேம்படுத்தப்பட்ட புதிய மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு (Digital Control System) ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் நிதியில் கொள்முதல் செய்யப்படும்.

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் இணை மின் உற்பத்தி ஆலையில் உள்ள கொதிகலன் (Boiler) மற்றும் டர்பைன் (Turbine) ஆகியவற்றை சீரான முறையில் இயக்கவும், நீராவி உற்பத்தி, மின் உற்பத்தி மற்றும் வெப்ப விநியோகம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் நிர்வகிக்கவும் நிறுவப்பட்டுள்ள மின்னணு கட்டுப்பாட்டுக் கருவி (Digital control server). தற்சமயம் செயலிழந்து, அதனால் தொடர் அரவை நிறுத்தம் ஏற்படுகிறது. இதனைச் சீர் செய்யும் பொருட்டு, 2025-26 ஆம் ஆண்டில், புதிய மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு (SPPA T3000 Digital control system) ஒன்று ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் நிதியில் கொள்முதல் செய்யப்படும்.

* கரும்பு அரவைத் திறனை அதிகரிக்கவும், ஆலை நேர இழப்பைக் குறைத்து ஆலையின் செயல்திறனை மேம்படுத்திடவும் வேலூர் மற்றும் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு மின் மோட்டாரைக் கட்டுப்படுத்தும் 550 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு மின்னியல் உபகரணங்கள் (VFD Drive- power and control modules) ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதியில் கொள்முதல் செய்யப்படும்.

வேலூர் மற்றும் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், அரவைப்பகுதியில் உருளைகளை இயக்கும் மின் மோட்டாரின் மின்னியல் தொகுதிகள் (Variable Frequency Drive – Power and control modules) செயலிழந்து உள்ளதால் ஏற்படும் சர்க்கரைக் கட்டுமான இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு, 2025-26 ஆம் ஆண்டில், 550 கிலோவாட் திறன் கொண்ட மின் மோட்டாரைக் கட்டுப்படுத்தும் இரண்டு மின்னியல் உபகரணங்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதியில் கொள்முதல் செய்யப்படும்.

* அரவைத் திறன் மற்றும் சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்தும் பொருட்டு செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பழுதடைந்துள்ள மோட்டாருக்குப் பதிலாக அதிகத் திறன் கொண்ட புதிய 1,120 கிலோ வாட் மின் மோட்டார் (Motor) ஒன்று ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை தடையின்றி செயல்படும் வகையிலும் ஆலையின் அரவைத் திறன் மற்றும் சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்தும் பொருட்டும் பழுதடைந்துள்ள மோட்டாருக்குப் பதிலாக, புதிய உயர் அழுத்த மின் சக்தியில் இயங்கும் கரும்பு அரவைப் பிரிதிறன் இயந்திரத்திற்கு (Fibrizor Motor) 1,120 கிலோவாட் திறன் கொண்ட 11KV மின் மோட்டார் (Motor) ஒன்று, 2025-26 ஆம் ஆண்டில், ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

* சர்க்கரை ஆலைகளின் அரவைத் திறனை உயர்த்த செங்கல்ராயன், செய்யாறு, கள்ளக்குறிச்சி-1, சுப்பிரமணியசிவா மற்றும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 6 எண்கள் தொடர் சுழற்சல்லடை (Continuous Centrifugal Machine) ஒரு கோடியே 2 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்படும்.

செங்கல்ராயன், செய்யாறு, கள்ளக்குறிச்சி-1, சுப்பிரமணியசிவா மற்றும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள தொடர் சுழற்சல்லடையின் (Continuous Centrifugal Machine) திறன் குறியீட்டின்படி இல்லாததால், அதிக பராமரிப்பு செலவும், அதிக சர்க்கரை இழப்பும், முழு அரவைத்திறன் அடைய இயலாத நிலையும் உள்ளதனைக் கருத்தில் கொண்டு, 2025-26 ஆம் ஆண்டில், மொத்தம் 6 தொடர் சுழற்சல்லடைகள் ஒரு கோடியே 2 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்படும்

* கரும்பு அரவை பாதிப்பு மற்றும் சர்க்கரைக் கட்டுமான இழப்பினைத் தவிர்க்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி-2, கள்ளக்குறிச்சி-1, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின், கரும்பு அரவைப் பகுதி மோட்டாரினைக் கட்டுப்படுத்த மூன்று புதிய உபகரணங்கள் (Mill DC Drive Unit) 90 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

கள்ளக்குறிச்சி 2, கள்ளக்குறிச்சி 1 மற்றும், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கரும்பு அரவைப் பகுதியில் உள்ள நேர் மின் மோட்டாரினை (Direct current Motor) இயக்க உதவும் கட்டுப்பாட்டு உபகரணங்களின் (Drive Unit) தொழில்நுட்பக் குறைபாடு (Old version) காரணமாக அடிக்கடி செயலிழப்பு ஏற்படுவதால் கரும்பு அரவை பாதிக்கப்படுவதோடு சர்க்கரைக் கட்டுமான இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு 2025-26 ஆம் ஆண்டில், ஆலைக்கு ஒன்று என்ற வீதத்தில் மூன்று புதிய மின்னியல் கட்டுப்பாட்டு உபகரணங்கள் மொத்தம் 90 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

* சர்க்கரைக் கட்டுமானத்தை அதிகரிக்கவும், ஆலையின் செயல்திறனை மேம்படுத்தவும், வேலூர் மற்றும் எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள சுண்டுகலன்களின் (Evaporator) இரண்டு கலண்டிரியாக்கள் (calendrias) 90 இலட்சம் ரூபாய் மாநில நிதியில் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்படும்.

வேலூர் மற்றும் எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள சுண்டுகலன் கலண்டிரியா (Evaporator Calendria) 25 ஆண்டுகள் பழமையானது, எனவே அதன் செயல்பாடு குறியீட்டின்படி இல்லாததால், கரும்புச்சாறு வெளியேறும் நீருடன் கலந்து சர்க்கரை இழப்பு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு, 2025-26 ஆம் ஆண்டில், சுண்டுகலன்களின் (Evaporator) உதிரி பாகமான இரண்டு கலண்டிரியாக்கள் (Calendrias) 90 இலட்சம் ரூபாய் நிதியில் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்படும்.

* சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்த 14 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மொத்தம் 20 வெப்ப பரிமாற்ற அலகுகள் (Transient heaters) 50 இலட்சம் ரூபாய் நிதியில் நிறுவப்படும்.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் செயல்பட்டுவரும் வெப்ப பரிமாற்றி (Transient heater) அலகுகள் 30 ஆண்டுகள் பழமையானவை. இதனால் உற்பத்தியாகும் சர்க்கரை நீராவியில் கரைந்து கழிவுப்பாகில் சர்க்கரை இழப்பு ஏற்படுகிறது. சர்க்கரைக் கட்டுமானமும் குறைகிறது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, 2025-26 ஆம் ஆண்டில், 14 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மொத்தம் 20 வெப்ப பரிமாற்ற அலகுகள் (Transient heaters) 50 இலட்சம் ரூபாய் நிதியில் புதிதாக நிறுவப்படும்.

* சர்க்கரை ஆலைப் பகுதிக்கேற்ற, உயர் விளைச்சல் மற்றும் அதிக சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட புதிய கரும்பு இரகங்களைத் தேர்வு செய்திட, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் மற்றும் முன்னோடி கரும்பு விவசாயிகளின் வயல்களில், தற்போது ஆய்வில் உள்ள கரும்பு இரகங்களை கொண்டு பரிசோதனை வயல்கள் அமைத்திட 28 இலட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

உயர்விளைச்சல் மற்றும் உயர் சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட சர்க்கரை ஆலைப் பகுதிக்கேற்ற சரியான கரும்பு இரகங்களைத் தேர்வு செய்து பரப்பு விரிவாக்கம் செய்யும் நோக்குடன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் மற்றும் ICAR கரும்பு இனப்பெருக்க நிறுவனம், கோயம்புத்தூர் ஆகியவற்றுடன் இணைந்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் பண்ணைகள் மற்றும் முன்னோடி கரும்பு விவசாயிகளின் வயல்களில் தலா ஒரு எக்டர் பரப்பளவில் தற்போது ஆய்வில் உள்ள கரும்பு இரகங்களைக் கொண்டு பரிசோதனை வயல்கள் அமைத்திட சர்க்கரை ஆலை ஒன்றுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் 14 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 2025-26 ஆம் ஆண்டில், மொத்தம் 28 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதியதாக வெளியிடப்பட்ட கரும்பு இரகங்களைப் பிரபலப்படுத்தவும் குறுகிய காலத்தில் விதை உற்பத்தியைப் பெருக்கிடவும் புதிய கரும்பு இரகங்களைக் கொண்டு “மாதிரி வயல்கள்” அமைத்திட 24 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

காலநிலை மாற்றங்களால் மகசூல் இழப்பு ஏற்படாத வகையில், புதிய கரும்பு இரகங்களை, புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு தலா ஒரு எக்டர் அளவில் எக்டர் ஒன்றுக்கு ரூ.35,000 செலவில் ஒவ்வொரு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலும் 5 வெவ்வேறு இடங்கள் என மொத்தம் 70 இடங்களில் மாதிரி வயல்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் புதியதாக வெளியிடப்பட்ட கரும்பு இரகங்களின் தன்மை மற்றும் புதிய தொழில் நுட்பங்களின் நன்மைகளை அறிய இயலும். மேலும் குறுகிய காலத்தில் அதிக அளவில் புதிய கரும்பு இரகங்களின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்படும். இத்திட்டத்திற்கென 2025-26 ஆம் ஆண்டில், 24 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்திடவும், தமிழ்நாட்டில் குறைந்து வரும் கரும்பு சாகுபடிப் பரப்பை அதிகரித்திடவும், உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடிப் பரப்பை அதிகரித்திடவும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்தி நலிவடைந்த நிலையிலிருந்து மீட்டெடுக்கும் நோக்குடன், 2025-26 ஆம் ஆண்டில், வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். குழுவினால் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கையின் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

The post கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: