கூட்டம் தொடங்கியதும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 27ம் தேதி இந்த மாமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். இந்திய திருநாட்டின் மத நல்லிணக்கத்திற்கும் சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995ம் ஆண்டின் வக்பு சட்டத்தினைத் திருத்துவதற்கு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்டத் திருத்த முன்வரைவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் பாஜ நீங்கலாக அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்பு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டது. இவை அனைத்தையும் மீறி நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக 232 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். இந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் எதிர்த்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 232 என்பது சாதாரணமான எண்ணிக்கை அல்ல, எண்ணிக்கை கூடுதலாகக் கிடைத்து இருக்கலாம்.
ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல; முழுமையாக திரும்பப் பெற வேண்டியது என்பதுதான் நம் கருத்து. அதைத்தான் இங்கே தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பியிருந்தோம். இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்; மதநல்லிணக்கத்தை குலைக்கும் செயல். இதனை உணர்த்தும் வகையில் கருப்புச் சின்னத்தை அணிந்து இன்றைய பேரவை நடவடிக்கைகளில் நாங்கள் பங்கெடுக்கிறோம்.
சர்ச்சைக்குரிய இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். வக்பு வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! போராடும்! போராடும்! அதில் வெற்றியும் பெறும். அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டப்பூர்வமாகவே தடுப்போம் என்று இந்த மாமன்றத்தில் உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த உரைக்கு ஆதரவு தெரிவித்து திமுக சார்பில் அமைச்சர் சா.மு.நாசர், எஸ்.பி.வேலுமணி (அதிமுக), அசன் மவுலானா (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச் செல்வன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), நாகைமாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைகுமார் (மதிமுக), அப்துல் சமது (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) ஆகியோர் பேசினர். முதல்வரின் கருத்தை ஆதரித்து வரவேற்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் பாஜவினர் முதல்வரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஆற்றிய உரைக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சிறுபான்மை இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் வக்பு சட்டத்தை திருத்த மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 27ம் தேதி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்றே மத்திய அரசுக்கு அந்த தீர்மானம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் வக்பு சட்ட திருத்த மசோதா, மக்களவையில் பெரும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கருத்தில் கொள்ளாமல், இந்தியா முழுவதும் இந்த மசோதாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துகளை கருதாமல், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு தனது கணைகளை தொடுக்கிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், அரசமைப்பு சட்டத்தை நன்றாக அறிந்தவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். இந்த அவையும் எள் முனையளவும் ஏற்றுக்கொள்ளாது.
எனவே வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி நான் கூறும் வரிகளை எம்எல்ஏக்கள் திரும்பக் கூறுவதற்கு சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முதல்வரின் கோரிக்கைக்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், “திரும்பப் பெறு, திரும்பப் பெறு, வக்பு சட்ட திருத்த முன்வடிவை திரும்பப் பெறு” என்று 3 முறை கூறினார். அதை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் மற்றும் பாமக எம்எல்ஏக்கள் வழிமொழிந்து கைகளை உயர்த்தியபடி பதில் கோஷம் எழுப்பினர். அதிமுக எம்எல்ஏக்கள் இந்த கோஷத்தில் கலந்துகொள்ளாமல் அதை கவனித்தபடி இருந்தனர்.
* சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் நூதன போராட்டம்
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். அவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்களிடம் நுழைவாயிலில் திமுக எம்எல்ஏக்கள் சிலர் கருப்பு பேட்ஜ் வழங்கினர். ஆனால் அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள், ‘‘இஸ்லாமியர்களை வஞ்சிக்காதே, இஸ்லாமியர்களின் கோரிக்கையை நிராகரிக்காதே, இஸ்லாமியர்களை இழிக்காதே” என்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
* இந்தியா முழுவதும் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துகளை கருதாமல், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஒன்றிய அரசு தனது கணைகளை தொடுக்கிறது.
* ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், அரசமைப்பு சட்டத்தை நன்றாக அறிந்தவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். இந்த அவையும் எள் முனையளவும் ஏற்றுக்கொள்ளாது.
* வக்பு வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்.
The post வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாடு போராடி வெல்லும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.