ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் சுயாட்சி காப்பாற்றப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

மதுரை: மாநில சுயாட்சிதான் திமுகவின் உயிர்க் கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று காலை கோலாகலமாக துவங்கியது. மாநாட்டின் கொடியை கட்சி மூத்த தலைவர் பிமன் பாசு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து, பொதுமாநாடும், பிரதிநிதிகள் மாநாடும் நடந்தது. திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக்சர்க்கார், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாஆகியோர் பேசினர். மாநாட்டில் 2வது நாளாக இன்று மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், ‘கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; எங்கும் சிவப்பு நிறைந்திருப்பதை பார்த்து முதல் நபராக நான் மகிழ்ச்சி அடைகிறேன். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என நினைத்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணம் எக்காலத்திலும் ஈடேறாது. மாற்றத்துக்கான நமது பயணம் மிகவும் நீண்டது. பெரியாரில் தொடங்கி திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் கொள்கை உறவு உள்ளது. தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என அடையாளப்படுத்திக் கொண்டவர் கலைஞர்.

கூட்டாட்சி என்றாலே ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜியாக இருக்கிறது. ஒன்றிய அரசால் அதிகம் பாதிப்பு அடைவது நானும், கேரள முதல்வரும்தான். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எனக்கு மூத்த சகோதரர். மாநில சுயாட்சிதான் திமுகவின் உயிர்க் கொள்கை. மாநிலங்களை அழிக்கின்ற பாசிச ஆட்சியாக ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடு உள்ளது. பல்வேறு பரிணாமங்களில் வரக் கூடிய பாசிசத்தை நாம் வீழ்த்தியாக வேண்டும். தொடர் பரப்புரை மூலம் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும். நீதிபதிகள் சர்க்காரியா, பூஞ்சி கமிஷன் அளித்த பரிந்துரைகளை நிறைவேற்ற மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? 3வது முறையாக பிரதமராகி உள்ள மோடி பதிலளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் முழுநேர அரசியல்வாதியாக ஆளுநர்களை பாஜக செயல்பட வைக்கிறது. ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் சுயாட்சி காப்பாற்றப்படும். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது. அரசியல் சட்ட உரிமைகளை பறிக்கும் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக; மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதினால்தான் கூட்டாட்சி மலரும். இணைந்து போராடுவோம்; பாசிசத்தை வீழ்த்துவோம் என்று கூறினார்.

The post ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் சுயாட்சி காப்பாற்றப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: