ஜவளகிரி வனப்பகுதியில் தடுப்பணையில் குளியல் போட்ட ஒற்றை யானை

தேன்கனிக்கோட்டை: தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் நேற்று, ஒற்றை யானை குளித்து மகிழ்ந்தது.  கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ராயக்கோட்டை வனப்பகுதிகளில் கோடை வெயிலால் உணவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி, உணவு, தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வருகின்றன.

வனத்துறை சார்பில், யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு, வனப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தண்ணீர் தொட்டிகள் கட்டி சோலார் பேனல் மூலம் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். மேலும், வனப்பகுதியில் உள்ள தடுப்பணைகளை தூர்வாரி, மழைகாலங்களில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஜவளகிரி வனசரகம் கரிக்கால் பள்ளம் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, வனத்துறை சார்பில் தூர்வாரப்பட்டு, தற்போது தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பணையில், நேற்று ஒற்றை ஆண் யானை, நீச்சல் அடித்து குளித்து மகிழ்ந்தது. வெயிலால் நீண்ட நேரம் யானை தண்ணீரில் இளைப்பாறியது. மழைநீர் தடுப்பணையில் தேங்கியுள்ளதால் யானை, மான் உள்ளிட்ட விலங்குகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஜவளகிரி வனப்பகுதியில் தடுப்பணையில் குளியல் போட்ட ஒற்றை யானை appeared first on Dinakaran.

Related Stories: