காரைக்குடி, மார்ச் 30: காரைக்குடி அருகே தி.சூரக்குடி ஊராட்சியில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்க வேண்டிய 4,034 கோடியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிமேகலை வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, பேரூராட்சி தலைவர் ராதிகா, முன்னாள் ஊராட்சி தலைவர் பொறியாளர் முருகப்பன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை, துணைமேயர் நா.குணசேகரன் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், 100 நாள் வேலை திட்டம் கிராமப்புற மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. பெண்களிடம் பணப்புழக்கம் வந்து குடும்ப செலவுகளுக்கு பயன்படுத்தி வந்தனர். பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் படிப்படியாக இத்திட்டத்திற்கான நிதியை குறைத்து கொண்டே வந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த போது இத்திட்டம் உள்ளடங்கிய ஊராக வளர்ச்சித்துறை அமைச்சராக நான் ஒன்றரை ஆண்டுகள் கவனித்தேன்.
அப்போது கூட ஒன்றிய அரசு பல்வேறு முட்டுக்கட்டை போட்டது. முதல்வர் பல முறை கடிதம் எழுதியும், நானும் பல முறை சந்தித்து போராடி இதற்கான நிதியை பெற்று வந்தோம். இந்தியாவில் தொகுதி சீரமைப்பை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிய அரசு ஏற்கனவே விடுவிக்க வேண்டிய தொகையை இன்னும் வழங்காமல் உள்ளனர். மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி என கூறி 5000 கோடி நிதியை தராமல் உள்ளனர். அதேபோல் 100 நாள் வேலை திட்டத்திற்கு 4034 கோடி நிதியை நிறுத்தி உள்ளனர். ஒன்றிய மோடி அரசிடம் நாம் பிச்சை கேட்கவில்லை.
நிதிபகிர்வில் நமக்கு ஒதுக்க வேண்டிய நிதியை தான் கேட்கிறோம். முதல்வரின் கட்டளையின்படி ஒன்றிய அரசை கண்டித்து மாவட்டத்தில் 25 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனை உணர்ந்த ஒன்றிய பாஜக அரசு 100 நாள் வேலைதிட்டத்திற்கு உரிய நிதி, கல்விக்காக தர வேண்டிய நிதி மற்றும் ஒன்றிய அரசு இணைந்து நடத்தும் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை வழங்க வேண்டும். இல்லையெனில் ஒன்றிய அரசை கண்டித்து இன்னும் எழுச்சிமிக்க போராட்டத்தை மக்கள் நடத்துவார்கள் என்றார்.
இதில் திமுக நிர்வாகி பள்ளத்தூர் சிவசங்கர், ஒன்றிய துணைச்செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய பொருளாளர் பாண்டி, ஆதிதிராவிடர் அணி கொத்தமங்கலம் சேது, பேரூர் செயலாளர் அசோக், சுற்றுச்சூழல் அணி காஞ்சனா உள்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாட்டிற்கான நிதியை கேட்கிறோம் ஒன்றிய அரசிடம் பிச்சை கேட்கவில்லை: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேச்சு appeared first on Dinakaran.