வேடசந்தூர், மார்ச் 30: வேடசந்தூர் வடமதுரை சாலையில் அரசு மருத்துவமனை அருகே தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு நேற்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வந்தனர். அப்போது அந்த மெஷினில் ஏற்கனவே கார்டு ஒன்று இருந்தது. வாடிக்கையாளர்கள் அதை எடுக்க முயற்சித்த போது வெளியே வரவில்லை. மேலும் கார்டு சொருகும் இடத்தில் மேல் இருந்த பிளாஸ்டிக் விரிசலுடன் காணப்பட்டது. இதையடுத்து சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் வேடசந்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், `முதல்கட்ட விசாரணையில் கொள்ளை முயற்சி நடைபெற்றதற்கான தடயம் ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது. எனினும் சிசிடிவி பதிவுகளை கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். கார்டை வெளியே எடுப்பதற்காக ஏடிஎம் மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கார்டு வெளியே எடுக்கப்பட்ட பின்பு அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணை தொடரும்’ என்றனர். மேலும் முழு தகவல்களை தெரிந்து கொள்ளாமல், கொள்ளை என வீண் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எனவே சமூக வலை தளங்களில் பதிவிடுவோர், பகிர்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
The post ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியா? வேடசந்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.