தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 263 பேருக்கு பணி நியமன ஆணை

கரூர், மார்ச் 30: கரூர், ஜெய்ராம் வித்யா பவன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் இளைஞர்களுக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார்.

இம்முகாமில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தொழில் துறை வளர்ச்சி மேம்பாடு அடையச்செய்யும் நோக்கோடு உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும், தொழில்துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் சென்று பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் பல லட்சக்கணக்கான நபர்களுக்கான வேலைவாய்ப்பினை பெற்று தந்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர், படித்த இளைஞர்கள் மற்றும் மகளிர் முன்னேற வேண்டும் என்ற உணர்வோடும் அக்கறையோடும் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கடந்த 3 ½ ஆண்டுகளில் பல்வேறு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் மாநில அளவில் 2.65 லட்சம் நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றையதினம் கரூர் மாவட்டத்திலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு -தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடந்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூர் ஜெய்ராம் வித்யா பவன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 141 முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில் கலந்துகொண்ட 1832 நபர்களில் 263 பேருக்கு முதல் கட்டமாக உடனடி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் 196 நபர்களை வேலையளிக்கும் நிறுவனங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளார்கள்.என்றார்.
இதனை தொடர்ந்து, வருவாய்த் துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பாக சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.49450- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களும், மகளிர் திட்டத்தின் மூலம் 43 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 520 உறுப்பினர்களுக்கு ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் வங்கிக்கடனுதவிகளும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் மறுவாழ்வு நிதி நலத்திட்டத்தின் கீழ் 09 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 549 பயனாளிகளுக்கு ரூ.4.55 கோடி மதிப்பீட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.

முன்னதாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு அடுத்து என்ன படிக்கலாம்? மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள். பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் உள்ள 55 அரசு பள்ளிகளில் இருந்து 700 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), துணை மேயர் சரவணன், உதவி இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு ராதிகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம், வருவாய் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சக்திபாலகங்காதரன், ஜெய்ராம் கல்வி அறக்கட்டளை தலைவர் ராமசாமி, மண்டலக்குழு தலைவர்கள் கணகராஜ், ராஜா, சக்திவேல், அன்பரசு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 263 பேருக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.

Related Stories: