சில்லி பாய்ன்ட்…

* முதல் 3 பந்து சிக்சர்: கலக்கல் கம்மின்ஸ்
ஐதராபாத்தில் நடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக களமிறங்கிய பேட் கமின்ஸ், 17வது ஓவரின் 5வது பந்தை முதலில் எதிர்கொண்டார். அதை சிக்சருக்கு விரட்டிய அவர் கடைசி பந்தையும் சிக்சருக்கு விரட்டினார். அடுத்ததாக ஆவேஷ் கான் வீசிய ஓவரின் முதல் பந்தையும் சிக்சருக்கு துரத்தினார் கம்மின்ஸ். அடுத்த பந்தில் அவர் அவுட்டானார். தான் சந்தித்த முதல் மூன்று பந்துகளையும் சிக்சராக விளாசி பேட் கம்மின்ஸ் நடப்பு தொடரில் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன், 2024ல் மும்பையில் நடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி வீரர் எம்.எஸ்.தோனி, தான் ஆடிய முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு விரட்டி சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில், 2023ம் ஆண்டில் நிக்கோலஸ் பூரன், 2021ம் ஆண்டில் சுனில் நரைன் இடம்பெற்றுள்ளனர்.

* ஷர்துல் வசம் ஊதா தொப்பி
ஐதராபாத்தில் நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 26 பந்துகளில் 70 ரன் விளாசிய லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன், அதிக ரன் குவித்த வீரராக உருவெடுத்து ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்தினார். அதேபோல், லக்னோ அணி வீரர் ஷர்துல் தாக்குர், 2 போட்டிகளில் ஆடி 6 விக்கெட் வீழ்த்தியதால், அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார். 2வது இடத்தில் சென்னை பந்து வீச்சாளர் நுார் அகமது (4 விக்கெட்) உள்ளார். இந்த தொப்பிகள், ஒவ்வொரு போட்டிகளில் வீரர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப அவ்வப்போது கைமாறிக் கொண்டே இருக்கும்.

* ஃபிப்டி அடிப்பதில் பூரன் கெட்டி
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன், 26 பந்துகளில் 70 ரன் குவித்தார். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அவர் 18 பந்துகளில் அரை சதம் விளாசி சாதனை படைத்தார். ஐபிஎல் போட்டிகளில் 20 பந்துகளுக்குள் 4வது முறையாக அவர் அரை சதம் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணியின் டிராவிஸ் ஹெட், டெல்லி அணியின் ஜேக் பிரேசர் மெக்குர்க், 20 பந்துகளுக்குள் 3 அரை சதம் விளாசி 2ம் இடத்தில் உள்ளனர். இந்த இரு வீரர்களும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள்.

* தோற்பதில் சாதித்த ரியான் பராக்
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக, கேப்டனாக பொறுப்பேற்று ஆடிய முதல் இரு போட்டிகளிலும் தொடர் தோல்வியை தழுவிய முதல் கேப்டன் என்ற எதிர்மறை சாதனையை ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் நிகழ்த்தி உள்ளார். ராஜஸ்தான் அணிக்கு தலைமை தாங்கியோரில் மிக இளவயது கேப்டனும் அவரே. 23 வயதில் இந்த பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயமடைந்துள்ளதால், முதல் 3 போட்டிகளுக்கு மட்டும், அசாமை சேர்ந்த ரியான் பராக் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Related Stories: