இரண்டாம் பாசுரத்தின் தொடர்ச்சி…
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.
பையத் துயின்ற பரமனடி பாடி… என்று சொல்லும்போதே பகவன் நாம ஸ்மரணை என்று சொல்கின்ற இறைவனின் திருப்பெயரை ஓதியபடி இருத்தலையே காண்பித்துக் கொடுக்கிறாள். இதற்கு முந்தைய முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை தருவான் என்று சொன்னாள்.
உபநிஷதம் யாரை பரதெய்வம், பரமாத்மா என்று சொல்கிறதோ அந்த பரமபதநாதனை சேவிப்போம். அந்த நாராயணனே பறை தருவான். இது அவனுடைய பரம் என்கிற நிலையைக் காட்டுகின்றது. பகவானின் ஐந்து நிலைகளில் மேலான நிலையாக இருக்கக் கூடிய பரம் என்கிற நிலையை காண்பிக்கின்றது. இந்த நிலையானது கண்ணுக்கும் கருத்துக்கும் மனதிற்கும் அப்பாற்பட்டது. முதல் பாசுரத்திலேயே இந்த விஷயத்தை ஆண்டாள் காண்பித்துக் கொடுத்திருக்கிறாள்.
இப்படி பரநிலையில், பரத்துவத்தில் நித்திய சூரிகள் சேவிக்கும்படியாக அங்கேயே இருந்தால் அங்கேயே இருக்க வேண்டியதுதான். ஆனால், பெருமாள் அப்படியில்லை. இந்த சிருஷ்டியை உண்டாக்கி நம்மையெல்லாம் காப்பாற்ற வேண்டுமென்று முடிவு செய்து விட்டான். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்கிற வியூக நிலைக்கு இறங்கி வந்திருக்கிறான். அப்படி வியூக நிலைக்கு வரும்போது பாற்கடலுக்குள் பையத் துயின்றிருக்கிறான்.
அதனாலேயே, இந்தப் பாட்டில் ஆண்டாள் நமக்கு காண்பித்துக் கொடுப்பது வியூக நிலை. இந்த லீலா விபூதியை நிர்வாகம் பண்ணக் கூடிய நிலை. இதற்கு முந்தைய முதல் பாசுரத்தில் காண்பித்துக் கொடுத்தது, நித்திய விபூதியை நிலையை காண்பித்தது பரமபதநாதன். அது முக்தியை நோக்கி நகரும் முக்தாத்மாக்களுக்கு உரியது. நித்ய சூரிகள் போன்றோர் சேவிப்பார்கள். அவ்வளவுதான். ஆனால், பெருமாள் அப்படியில்லை. பெருமான் சிருஷ்டி செய்து நம்மையெல்லாம் கரையேற்ற வேண்டுமென்று முடிவெடுத்து விட்டான். அதனால், இந்த சிருஷ்டி ஸ்திதி சம்ஹார நிலையான வியூக நிலைக்கு இறங்கி வந்திருக்கிறான். அப்படி வியூக நிலைக்கு வந்தபோது அவர் எங்கிருக்கிறான் எனில், பாற்கடலுள் பையத் துயின்றிருக்கிறான்.
இன்னொன்று, பரமநிலை என்பது நமக்குத் தெரியவே தெரியாது. ஆச்சார்யார்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதை விட, பர நிலையில் உருவமாக இருப்பானா… அருவமாக இருப்பானா… அருவுருவமாக இருப்பானா… தேவி பூதேவி சமேதராக இருக்கிறான் என்றெல்லாம் ஆச்சார்யன் காண்பித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால், பரம் என்பது எல்லாவற்றையும் கடந்த நிலை. அதனால்தான் கஜேந்திரன் போன்ற பக்தன் கூப்பிட்டவுடன் எங்கிருந்து ஓடிவந்தான் எனில், வியூகம் என்கிற பாற்கடலில் இருந்து ஓடி வந்தான்.
பரமனடி பாடி… என்று ஆண்டாள் சொல்லும்போது அந்த திருவடியை பாடும்போது அவனுக்குக் கேட்கும். யாருக்குக் கேட்குமெனில், பாற்கடலில் இருப்பவனுக்கு கேட்கும். ஏனெனில், பாற்கடல் என்பது கூப்பீடு கேட்கக் கூடிய இடமாகும். கூப்பீடு கேட்கும் இடம் வியூகம் என்பார்கள். இப்படி கேட்பதற்காகவே அவன் பரநிலையிலிருந்து இறங்கி வந்து பாற்கடலில் சயனித்திருக்கிறான்.
ஒரு குருவிடம் சிஷ்யன் கேட்கிறான், ‘‘குருவே நீங்கள் பாற்கடலில் பகவான் சயனித்திருக்கிறான் என்று சொல்கிறீர்கள். அது எங்கு இருக்கிறது’’ என்று கேட்கிறான்.
அந்த குரு வெகு எளிமையாக, ‘‘ஒன்றுமில்லையப்பா. நீ ஒருவரை அழைக்கிறாய். அப்போது நீ எவ்வளவு தூரத்தில் அவர் இருந்தால் அவர் பதில் சொல்லுவார் என்று உனக்கு தெரியுமல்லவா? ’’
‘‘கூப்பிடு தூரத்தில் இருந்தால் பதில் சொல்வார் குருநாதா’’
‘‘அதேதானப்பா… திருப்பாற்கடலும் உன்னுடைய சொல் அடையும் தூரத்தில்தான் இருக்கிறது. கூப்பிடு தூரத்தில் இருக்கிறது’’ என்று பதில் சொன்னார், குருநாதர்.
‘‘அதெப்படி கூப்பிடு தூரத்தில் திருப்பாற்கடல் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்’’
‘‘ஆமாமப்பா… கூப்பிடு தூரத்தில் இருந்ததால்தான் கஜேந்திரன் கூப்பிட்டவுடன் பெருமாள் வந்து காப்பாற்றினார்’’
இதிலிருந்து என்ன தெரிகிறதெனில், நாம் கத்திக் கூப்பிட வேண்டுமென்று கூட இல்லை. நாம் மனதிற்குள்ளேயே, வாய்க்குள்ளேயே கூப்பிட்டால் போதும். கேட்டு விடும். அந்த கூப்பிடும் தூரத்தில்தான் திருப்பாற்கடல் இருக்கிறது. அதனால்தான், இங்கு தாயார் பரமனடி பாடி என்று காண்பிக்கும்போதே பாற்கடலில் பையத் துயின்ற பரமனடி பாடி என்று காண்பித்துக் கொடுக்கிறாள். ஆண்டாள் சொல்கிறாள், ஏதோ நான் சொல்கிறேன் என்று இல்லை. நிச்சயமாக நாம் பாடினால் அவனுக்குக் கேட்கும். அதனால் அவனின் நாமத்தை நாம் மனதாரப் பாடுவோம்.
பாற்கடலில் பையத் துயின்ற என்கிற வார்த்தையில் வியூகத்தின் மேன்மையைக் காண்பிக்கிறாள். அந்த வியூக மூர்த்தியை கஜேந்திரன் உள்ளிட்ட பக்தர்கள் கூப்பிட்டவுடன் வந்தான் என்பதையும் காண்பித்துக் கொடுக்கிறாள். நாம ஜபத்தின் மகிமையையும் காண்பித்துக் கொடுக்கிறாள். அப்படியே கஜேந்திரன் மட்டுமல்ல நாம் பாடினாலும் வருவான் என்று உறுதி கூறுகிறாள்.
எந்த ஒரு விரதம் பூஜையாக இருந்தாலும் சரிதான், இதை இதைச் செய்ய வேண்டும். இதை இதை செய்யக் கூடாது என்று இருக்கிறது. அதனால், நெய் உண்ணோம் பால் உண்ணோம்… என்று ஆண்டாள் கூறுகிறாள். இந்த விரதத்திற்கு நெய் உண்ணோம், பால் உண்ணோம் என்று ஆண்டாள் சொல்வது சாதாரணமாகத் தெரிகிறது.
ஆனால், இதனுடைய உள்ளுறைபொருளை பார்ப்போம் வாருங்கள். இப்போது, பரமனடி பாடி நெய்யுண்ணோம். பரமனடி பாடி பாலுண்ணோம். இதற்கு முன்னால் கூட நாங்கள் சாப்பிட்டிருக்கலாம். எப்போது இந்த விரதம் ஆரம்பிப்பதற்காக பரமனடி பாடி விட்டோமோ, எப்போது நாமத்தை பாடி தொடங்கி விட்டோமோ இனி, இந்த விரதம் பூர்த்தியாகும் வரையிலும் நெய்யுண்ணோம். பாலுண்ணோம்.
இன்னொன்று இதற்கு முன்பு சாபிட்டபோதும் சரிதான், அதாவது எப்போதுமே சாப்பிடும்போது பரமனடி பாடி விட்டுத்தான் சாப்பிட வேண்டும். இப்போது விரதமிருக்கும் போதும் பரமனடி பாடி சாப்பிடாமல் இருக்க வேண்டும். அதாவது ஒரு விஷயத்தை செய்யும்போதும் நாம ஸ்மரணையோடு அதாவது நாம ஜபத்தோடேயே செய்ய வேண்டும். ஒரு விஷயத்தை செய்யாவிட்டாலும் கூட நாம ஸ்மரணை வேண்டும். இறுதியாக எப்போதுமே நாமம் என்கிற யக்ஞத்தை, யாகத்தை ஒருவன் உள்ளுக்குள் நடத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இன்னும் கொஞ்சம் உள்ளார்ந்து கவனிக்க வேண்டும். பாலுண்ணோம் என்பதை பார்க்கலாம். பால் என்பது பசுவிடமிருந்து கறக்கப்படுகின்றது. அந்தப் பால்தான் தயிராகி, வெண்ணெயாகி, நெய்யாகிறது. பால் என்பது ஜீவாத்மாவின் பக்குவப்படாத நிலை. பிறகு பக்குவப்படும்போது தயிராகி, வெண்ணெயாகி, நெய்யாகின்றது. இங்கு நெய் என்பது பக்குவப்பட்ட ஜீவாத்மா. நெய் மோட்சத்தில் விருப்பமுடைய ஆத்மா. பால் என்பது பக்குவமற்ற நிலை.
இங்கு ஆண்டாள் நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று சொல்லும்போது நமக்கு, இன்னும் சூட்சுமமாக பால் என்பது ஒரு நாளில் கெட்டுப் போய்விடும். தயிர் ஓரிரெண்டு நாட்கள் இருக்கும். வெண்ணெய் மாதக் கணக்கில் இருக்கும். நெய்யானது வருடக் கணக்கில் இருக்கும். பக்குவம் கூடக் கூட திரிந்து போகக் கூடிய தன்மை, கெட்டு போகக் கூடிய தன்மை குறைய ஆரம்பித்து விட்டது. உயர்ந்த நிலையை அடைய அடைய மிகமிக சுத்தமாக ஆகி விடுகின்றது. கெட்டே போகாத நிலைக்குச் சென்று விடுகின்றது. அதற்கு அடுத்து அதன் மதிப்பும் கூடுகின்றது. பாலின் விலைக்கும், தயிரின் விலைக்கும், நெய்யின் விலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளனவே. இந்த ஜீவாத்மாவின் பக்குவ நிலையையே பால் முதல் நெய் வரையில் இந்த வரியானது நமக்கு காண்பித்துக் கொடுக்கிறது.
(தொடரும்)
The post திருப்பாவை எனும் தேனமுதம் appeared first on Dinakaran.