ராஜாதி ராஜ…

‘‘எவையும் எவரும் தன்னுள்ளே
ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்’’
– என்பது நம்மாழ்வார்
திருவாய்மொழி.

‘‘உலகிலுள்ள பொருள்கள் அனைத்தையும் “தான்’’ என்ற சொல்லுக்குள்ளே அடங்கி இருக்கும்படி அழித்தும், பின்னர் அவற்றை உண்டாக்கியும், உண்டாக்கிய பொருளைக் காத்தும் அவைகளுக்குள் தங்கியும் இருக்கின்ற ஒப்பற்ற காரணன் பெருமான்’’ என்று போற்றுகின்றார் நம்மாழ்வார். எல்லாம் பிரம்மத்தால் நிறைந்துள்ளது, “ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம” என்பது ஸ்ருதி வாக்கியம்.

‘‘அஹஸ்ஸம்வர்த்தகோ வஹ்நிர் அநிலோ தரணீதர:’’ என்று ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம், விஷ்ணுவை பஞ்ச பூதங்களாக விளங்குகின்றான் என்று கூறும். அஹஸ்ஸம்வர்த்தக: என்பதை பொதுவாக சூரியன் என்றாலும், அஹ: பகல் (காலம்) அதற்கு இடமான ஆகாசம், ஸம்வர்த்தக: பிரளய காலத்தில் பெருமழை பொழியும் மேகம் (நீர்), வஹ்நி: நெருப்பு, அநில: காற்று, தரணீதர: அனைத்தையும் தாங்கும் பூமியைத் (நிலம்) தாங்குபவன் என்று பெருமான் குறிக்கப்படுகிறான்.

இவ்வாறு பிரபஞ்ச சக்தியாக பெருமான் இருந்தாலும், எவருடைய வடிவத்தைப் பார்த்து எல்லா உலகங்களும் எல்லா பூதங்களும் பயந்து ஒடுங்குகின்றனவோ எவர் எதற்கும் அஞ்சுவதில்லையோ அதனால் அவர் “பீஷணம்” எனப்படுகிறார். அவருக்கு அஞ்சி காற்று வீசுகிறது. அவருக்கு அஞ்சி சூரியன் உதிக்கிறான். அவருக்கு அஞ்சியே அக்னியும் இந்திரனும் யமனும் வேலை செய்கிறார்கள்.பீஷாஸ்மாத் வாத: பவதே பீஷோதேதி ஸுர்ய: I பீஷாஸ் மாதக்னிச்சேந்த்ரச்ச ம்ருத்யுர்த்தாவதி பஞ்சம: தஸ்மாதுச்யதே பீஷணமிதி II என்பது ந்ருஸிம்ஹ பூர்வதாபிநீ உபநிஷத்.

அதனால்தான் ஸ்ரீ சிவ ஸஹஸ்ரநாமம் எம்பெருமான் சிவனை ‘‘ஓம் தர்ஷணாத் மனே நம:’’ என்று போற்றி துதிக்கிறது. அதாவது, ‘பிறர் கண்டு பயப்படக் கூடியவர்’ என்று இதன் பொருளாகும்.
சத்து, சித்து, ஆனந்தம் என்று அறியப்படும் விவரிக்க இயலாத ஆற்றலே, கடவுளின் சக்தியே சீரடியில் சாயி என்னும் ரூபத்தில் அவதரித்தது. பிரம்மத்தின் ஆனந்தம்- பேரானந்தத்தை சீரடியில் அனைவரும் அனுபவித்தனர். பக்தர்கள் விரும்பியவாறே பாபாவை வழிபட்டனர். அவ்வாறு வழிபட்டு அழைக்கும் போதெல்லாம் பாபா மறுமொழி கூறி அவர்களுக்கு ஆதரவையும் அருளையும் அளித்து வந்தார். ஒரு தாய் தன் குழந்தைகளை உதைப்பாள் என்றால், கடலானது ஆறுகளை புறக்கணிக்கும் என்றால் தாமும் தம் அடியவர்களின் நலன்களை அலட்சியம் செய்வேன் என்று உறுதிமொழி கூறினார் பாபா.

ஒருமுறை சீரடியில் பயங்கரமான புயல் காற்று வீசியது. மேகங்கள் கர்ஜித்து, மழை வெள்ளமாய் பொழியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் அவ்விடம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. சீரடியில் உள்ள அத்தனை பறவைகளும், மிருகங்களும், மனிதர்களும் இயற்கையைக் கண்டு அஞ்சி நடுங்கினர். எனவே, அத்தனைபேரும் பாபாவை வேண்டி இந்த அசாதாரண சூழ்நிலையைத் தணிக்க வேண்டினர். பாபா மசூதியிலிருந்து வெளியே வந்து அதன் வாசலில் நின்று இடிமுழக்கம் போன்ற குரலில் வானத்தை நோக்கி, ‘நிறுத்து, உன் சீற்றத்தை நிறுத்தி அடங்கிவிடு’ என்று கூறினார். சில நிமிடங்களில் மழை குறைந்து, காற்று வீசுவது நின்று, புயலும் அடங்கியது. மக்கள் மகிழ்ச்சியாக அவர்களுடைய வீட்டிற்குத் திரும்பினர். ஹும் என்ற சப்தத்தால் மழையைப் புயலை அடக்கிய முதல்வன் என்று இன்றும் பாபா போற்றப்படுகிறார்.

மற்றொரு சமயத்தில் மத்தியான நேரம் மசூதியிலுள்ள துனியிலிருந்து நெருப்பு பிரகாசமாக எரியத் தொடங்கியது. அதனுடைய ஜ்வாலை மசூதியின் விட்டத்தை அடைந்தது. மசூதியில் அமர்ந்திருந்த மக்கள் அனைவருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. தண்ணீரை ஊற்றி அதனை அணைப்பதற்கு அவர்களுக்குத் தோன்றவில்லை.

பாபாவிடம் இதனை எப்படிச் சொல்வது என்ற தவிப்பில் இருந்தனர். பாபாவிடம் கேட்பதற்கும் தைரியம் இல்லை. ஆனால், பாபா என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்தார். பாபா தம் ஸட்காவை கையில் எடுத்துக் கொண்டார். அக்னி ஜ்வாலையை நோக்கி அருகில் கையை நீட்டி ஸட்காவினால் அக்னியை அடித்தார். ‘கீழிறங்கு. அமைதியாய் இரு’ என்றார். ஒவ்வொரு அடிக்கும் ஜ்வாலை கீழிறங்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் துனி அமைதியாகவும் சாந்தமாகவும் சாதாரணமாகவும் ஆகியது. “அதி உன்னத துனீ ஜ்வாலாம் ஆக்ஞயா ஏவ நிவர்தகாய- உக்கிரமாக எரிந்த துனியின் நெருப்பை தம் ஆணையால் அடக்கியவர்” என்று ஸ்ரீ சாயி ஸஹஸ்ரநாமம் கூறும்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஹேமத்பந்த் தன்னுடைய ஸ்ரீ சாயி சத்சரிதத்தின் 11 ஆம் அத்தியாயத்தில் குறிப்பிட்டு, ‘‘நமது சாயி – கடவுளின் அவதாரமாவார். தம்முன் பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் அவர் ஆசீர்வதிக்கிறார். தினந்தோறும் பக்தியுடன் இவ்வத்தியாயத்தைப் படிப்பவர் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுவார். இதுமட்டுமன்று எப்போதும் சாயியின் மேல் பக்தியுடையவராகவும் அன்புடையவராகவும் இருந்து விரைவில் கடவுள் காட்சியைப் பெறுவார்.

எல்லா ஆசைகளும் நிறவேறியவராக, அவாவற்றவராக இறுதியில் உயர்நிலை எய்துவார்’’ என்று கூறுகிறார் (This is our sai, an Incarnation of God. He will bless any man, who will prostrate and surrender himself to HIM….. he will attain the supreme).தி கிரேட் கனாட் (The Great Canute), இங்கிலாந்து, டென்மார்க், நார்வே என்ற மூன்று இராஜியங்களும் ஒன்றாக இருந்த வடகடல் பேரரசின் (North Sea Empire) மன்னராக இருந்தார் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறார். இம்மன்னர் தான் ‘கடல் அலைகள் புராணக் கதை’ யின் (The Story of Canute and the waves) நாயகனாக விளங்குகிறார்.

‘‘எல்லாவற்றின் இறைவனாக கனாட் நிலத்தைப் பாதுகாக்கின்றார்’ (Canute Protects the land as the LORD) என்று தமது துதிபாடிகளால் துதிக்கப்படும் போது அந்தப் புகழ்ச்சியை அவர் விரும்பவில்லை. எனவே, ஒருநாள் தனது அரசவை உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றார். அங்கு தமது சிம்மாசனத்தில் அமர்ந்து கடலில் எழும் அலைகளை நோக்கி, ’ நான் அமர்ந்திருக்கும் நிலம் என்னுடையது. நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்தவர்கள்.

என் நிலத்தின் மேல் ஏற வேண்டாம். உங்கள் எஜமானராகிய என் ஆடைகளையோ, என் கைகால்களையோ நனைக்கக் கூடாது’’ என்று கட்டளையிட்டார். ஆனால், கடல் வழக்கம் போல் மேலெழுந்து அவரையும் அவர் அமர்ந்திருந்த சிம்மாசனத்தையும் நனைத்து விட்டது. அப்போது கனாட் தம் துதிபாடிகளான அரசவை உறுப்பினர்களைப் பார்த்து ‘அரசனின் ஆணை என்பது ஒன்றுமில்லாதது, பயனற்றது என்பதை அனைத்துலகும் அறியட்டும் (Let all the world know that the power of kings is empty and worthless). எந்த அரசனும் கடவுளின் நாமத்திற்கு இணையில்லை.

யாரால் வானும், மண்ணும், கடலும் முடிவற்ற ஆணைக்கு கட்டுப்படுகின்றனவோ, யாரால் கடல் எழும்புகிறதோ அவரே நம் நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் உரியவர்; சரியானவர்; அவரே புனிதமும், நீதியும் உடைய அரசர். நான் துன்பப்படும் ஒரு சாதாரண மானிடன். கடவுளோ என்றும் உள்ளவர்” (I am a mere mortal, whereas He is ever lasting) என்று கடல் அலைகளின் ஓசைகளுக்கு இடையே பெருங்குரலில் கூவினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் அரசருக்குரிய பொன் கீரிடத்தை அவர் அணியவே இல்லை, அதை கடவுளின் காலடியில் சமர்ப்பணம் செய்தார் என்று ஹண்டிங்டம் ஹென்றி (Henry of Huntingdom) தம்முடைய ‘‘Historia Anglorum” த்தில் முதன் முதலில் இக்கதையை பதிவு செய்கிறார். பின்னர் இந்நிகழ்ச்சி பற்றிய கவிதைகளை ஆங்கிலக் கவிஞர்கள் எழுதி மகிழ்ந்தனர்.

அதில் குழந்தைக் கவிஞர் ‘Paul Perro’ எழுதிய கவிதை புகழ்பெற்றது. ‘‘Not even a king can control the tide…..I’m just not as powerful as you thought”.எனவே, நிர்குணமான பரபிரம்மம் சகுணமாக சாயிநாதராக சீரடியில் அவதாரம் செய்தது. சீரடி பாபா அவரே, பற்றின்மையின் அவதாரம். முழுமனதார்ந்த தமது அடியவர்களின் உறைவிடம். அரசர்களின் அரசர். எங்கும் நிறைந்து எங்கணும் வியாபித்திருக்கிற சர்வாந்தர்யாமி. அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயக ராஜாதி ராஜ யோகிராஜ பரப்ரஹ்ம ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு சாயிநாத் மஹராஜ் கீ ஜெய்! சாயி சரணம்.

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

The post ராஜாதி ராஜ… appeared first on Dinakaran.

Related Stories: