பன்னிரண்டாம் பாவத்தில் மறைந்திருக்கும் ரகசியங்கள்

ஒருவருடைய ஜாதகத்தின் ராசி சக்கரம் 12 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருப்பதை நாம் அறிவோம். இந்த பாகங்கள் ஒவ்வொன்றும் ஏறக்குறைய 30 பாகைகள் அளவைக் கொண்டதாக இருக்கும். 12 பாகங்களுக்கும் சேர்த்து 360 பாகைகள் அதாவது ஒரு முழு வட்டமாக அமையும். மேல்நாடுகளில் ராசி சக்கரம் வட்டமாகவே இருக்கும். ஆனால் நம்முடைய ஜோதிடத்தில் அதை 12 கட்டங்களாக அமைத்துக் கொள்கிறோம். வட்டம் என்பதில் ஒரு தத்துவம் உண்டு.
ஒன்றாம் பாவம் லக்னம் என்றால் 12 ஆம் பாகம் விரய பாவம். தூக்கத்தைக் குறிப்பது பன்னிரண்டாம் பாவம். ஒருவனுடைய பிறப்பானது கர்மத்தின் அடிப்படையில் உருவாகிறது. லக்னத்தில் ஆரம்பித்து 11 கட்டங்களில் அவன் செய்கின்ற பல்வேறு செயல்கள், உறவு நிலைகள், செலவுகள், சேமிப்புக்கள், எல்லாமே பரிசீலிக்கப்பட்டு 12-ஆம் கட்டத்தில்தான் நிகரக் கணக்கு (Balance Sheet) தெரிகிறது. அவனுக்கு மறு பிறப்பு உண்டா இல்லையா என்கின்ற கணக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

வினைகள் தொலைந்து போனாலும், கழிந்து போனாலும் 12-ஆம் பாவத்தோடு ஒருவனுடைய வாழ்க்கை முடிந்துவிடுகிறது. ஆனால், வரவேண்டியதாகவோ கொடுக்க வேண்டியதாகவோ இருந்தாலும் (புண்ணியம், பாவம்) அடுத்த பிறவி ஏற்பட்டு, ஒன்றாம் பாவம் (லக்கினம்) புதிதாக உருவெடுக்கிறது. எனவேதான் ஆன்மிகத் தத்துவத்தோடு ஜோதிட தத்து வத்தை இணைத்துப் பார்க்கின்றோம்.

இன்னொரு விஷயம், 12-ஆம் இடத்தை ஏன் சயனஸ்தானம் என்று சொன்னார்கள்? லக்கினத்தை உதயம் என்று சொல்வார்கள். அதாவது காலை என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த உதயத்தில்தான் ஒருவன் விழிக்கிறான். அதற்குப் பிறகு அவனுக்குப் பல்வேறு பணிகள் அடுத்து வரும் பதினோராம் பாவம் வரை இருக்கிறது. 11 ஆம் பாவம் வரை செய்த செயல்களால் களைத்துப் போனவன் பன்னிரண்டாம் பாவத்தில் சயனம் என்று ஓய்வுகொள்கின்றான்.
ஓய்வு பெற்றவன், மறுபடியும் புத்துணர்ச்சியோடு அடுத்த நாள் காலை லக்ன பாவத்தில் உதயமாகிறான். இது ஒரு நாளுக்கும் பொருந்தும். ஒரு பிறவிக்கும் பொருந்தும்.

நாள் என்றால் தூக்கம் (12), விழிப்பு (1)
பிறவி என்றால் மரணம் (12) ஜனனம் (1)
12 ஆம் பாவம் மோட்ச ஸ்தானம். மறுபடி ஒரு பிறவி கிடையாது. ஆனால், அதில் வினைகளின் தொகுப்பு மிச்சம் இருந்தால், அவன் சற்று தூங்கி ஓய்வெடுத்து, மறுபடியும் அவன் ஒன்றாம் பாவத்தோடு இணைந்து செயல்பட வேண்டும் என்கிற நியதியைத்தான் ராசிச் சக்கரம் காட்டுகின்றது. பன்னிரண்டாம் பாவம் ஒருவன் தூக்கத்தைக் குறிக்கிறது என்று சொன்னேன். அதே ஜோதிட சாஸ்திரம் 12ம் பாவம் ஒருவனுடைய மரணத்தையும் குறிக்கிறது என்று சொல்லி வைத்தார்கள். தூக்கமும் மரணமும் ஒன்றா என்றால் வள்ளுவப் பெருந்தகை இதற்குப் பதில் சொல்லுகின்றார்.

``உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு’’
– என்பது திருக்குறள் 339-ன் வரிகள்.

அதாவது, சாவு என்பது உறங்குவது போலவும், பிறப்பு என்பது உறங்கி விழிப்பது போலவும் இருக்கும். எனவேதான் தற்காலிக தூக்கத்திற்கும் நிரந்தர தூக்கத்திற்கும் 12 ஆம் பாவத்தைச் சொல்லி வைத்தார்கள். அது விரய பாவம் என்றும் சொன்னார்கள். காரணம் அது செலவைக் குறிக்கக்கூடிய இடம். பொதுவாகவே, 6, 8, 12ம் பாவங்களைக் குறித்து நாம் எதிர்மறையாகவே கருதிக் கொண்டிருக்கிறோம். 12-ஆம் பாவத்தில் அடங்கியுள்ள எண்ணற்ற நல்ல விஷயங்களை நாம் தெரிந்துகொண்டால், அந்த பாவம் குறித்த அச்சம் இருக்காது. நம்முடைய வாழ்வுக்கு எல்லா பாவங்களுமே முக்கியம். உதாரணமாக, நமது உடம்பில் ஒன்பது வாசல்கள் இருக்கின்றன.

“ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பது வாசல்,
தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன்’’
– என்பது திருமங்கையாழ்வார் பாசுரம்.

ஒன்பது வாசல் என்று அழகாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். நாம் வாயால் உண்கின்றோம். காதால் கேட்கிறோம். மூக்கால் சுவாசிக்கிறோம். கண்களால் பார்க்கின்றோம். ஆனால் இவைகள்தான் முக்கியமா? நமக்கு வேண்டாதவற்றை, உடம்புக்குக் கேடு செய்கின்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதற்கு இரண்டு வாசல்கள் இருக்கின்றன. மீதி இருக்கும் ஏழு வாசல்களையும் காப்பது இந்த இரண்டு வாசல்கள்தான் என்பதை நாம் மனதில் கொண்டால், அதனுடைய முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள முடியும்.

வாயால் சுவையாக அனுபவிக்கும் உணவை, குடல் சக்கையாக்கி வெளியேற்றம் செய்யாவிட்டால், மொத்த உடம்பும் பாதிக்குமே!

ஆக அங்கே வெளியேறும் இடம் ஒன்று வைக்க வேண்டும். அதை செலவு விரையம் என்று சொல்லலாம். அதேதான் பன்னிரண்டாம் பாவமும் செய்கிறது. அதனால்தான் அதை விரயஸ்தானம் என்று சொன்னார்கள்.

இந்த 12 ஆம் பாவம் அமையும் நிலையை பொறுத்து ஒரு ஜாதகரின் பிறப்பு, இறப்புச் சுழற்சி, விடுதலை முதலியவற்றைத் தெரிந்து கொள்ள முடியும். அதோடு இந்த 12 ஆம் பாவத்தை மறைவு ஸ்தானம் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்வார்கள். காரணம், பஞ்சம ஸ்தானத்தின் (5ம் இடம்) விளைவுகளையோ, பாக்கியஸ்தானத்தின் (9ம் இடம்) விளைவுகளையோ தெரிந்து கொள்வது போல, விரய ஸ்தானமான 12-ஆம் இடத்தின் ரகசியங்களை அவ்வளவு எளிதாக தெரிந்துகொள்ள முடியாது. அது பல ரகசியங்களை தனக்குள் மறைத்து வைத்திருக்கும் என்பதால், அதை ரகசிய ஸ்தானம் என்றும், மறைவு ஸ்தானம் என்றும் வைத்தார்கள். இந்த பாவத்தில் உள்ள சில நல்ல விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு ஜாதகர் வெளிநாடு செல்வாரா? வெளிநாட்டு வேலை அமையுமா? அல்லது வெளி மாநிலங்கள் போன்ற இடத்தில் வேலை அமையுமா? இட மாற்றங்கள் ஏற்படுமா?, இதுவரை சம்பாதித்த மொத்த பணத்தை எந்த இடத்தில் ரகசியமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்? அவர் ஒரு தொழில்தான் செய்கிறாரா? ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களைச் செய்கிறாரா? என்பதையெல்லாம் 12 ஆம் பாவத்தின் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும்.

இப்பொழுது சிலர் தங்களுடைய நிறுவனத்தின் கீழ் பல்வேறு கிளைத் தொழில்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களை செய்ய வேண்டும் என்று சொன்னால் 12 ஆம் இடம் சுப பலத்தோடு இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல 11 பாவங்களும் அலைச்சல், மகிழ்ச்சி, அனுபவம், துக்கம் முதலிய பல்வேறு விஷயங்களை குறிப்பிடுகிறது. ஆனால் 12 ஆம் பாவம் அமைதியையும் நிம்மதியான தூக்கத்தையும் குறிக்கிறது.

நிம்மதியான தூக்கம் தூங்கி எழுந்தால், மனம் தெளிவாக இருக்கும். செயல்களில் ஊக்கம் பிறக்கும். அந்த ஊக்கமானது வெற்றியைத் தரும். இப்பொழுது சொல்லுங்கள், பன்னிரண்டாம் பாவம் என்பது நாம் விரும்பக்கூடிய பாவமா? அல்லது வெறுக்கக்கூடிய பாவமா? அணுகித் தெரிந்து கொள்ள வேண்டிய பாவமா அல்லது அச்சத்தோடு விலக்க வேண்டிய பாவமா?

The post பன்னிரண்டாம் பாவத்தில் மறைந்திருக்கும் ரகசியங்கள் appeared first on Dinakaran.

Related Stories: