இந்த வார விசேஷங்கள்

29-3-2025 – சனி மன்னார்குடி ராஜகோபாலசுவாமி வைரமுடி சேவை

ஸ்ரீ வித்யா ராஜகோபாலசுவாமி கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டின் மன்னார்குடி நகரில் அமைந்துள்ள திருமால் ஆலயமாகும் இங்குள்ள மூலவர் ராஜகோபாலசுவாமி. இந்தக் கோயில் 9.3 ஹெக்டேர் (23 ஏக்கர்) பரப்பளவில் பரந்து விரிந்தது. தட்சிண துவாரகை (தெற்கு துவாரகை) என்று அழைக்கப்படுகிறது. இது வைணவ மரபின் 108 அபிமான க்ஷேத்திரங்களில் முதன்மையானது என்று கருதப்படுகிறது. இங்கு பிரசித்தி பெற்ற பங்குனி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய தினம் காலை வைரமுடி சேவை சிறப்பாக நடைபெறும். பகல் பத்து நான்காம் நாள், கைசிக ஏகாதசி போன்ற சில நாட்கள் மட்டும் வைர முடியோடு ராஜகோபால சுவாமி காட்சி தருவார். இன்று இரவு தங்கக் கருட வாகனம் இரட்டைக் குடை சேவையில் வைகுண்ட நாதனாக காட்சி தருவார். ஏப்ரல் 3ஆம் தேதி வியாழக்கிழமை கல்யாண திருக்கோலத்தில் தேர். பிற்பகல் 2 மணிக்கு திருத்தேர் வடம் பிடிப்பார்கள். அன்று இரவு 7:30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும்.

29-3-2025 சனி தாயமங்கலம் முத்துமாரியம்மன் விழா

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோயிலில் வருடம்தோறும் நடைபெறும் பங்குனி பொங்கல் விழா இன்று தொடங்குகிறது.
பொதுவாக கோயில்களில் காலையில் கொடியேற்றம் நடக்கும். ஆனால் இன்று 10:20 மணிக்கு கோயில் கொடியேற்றம் நடைபெறுகிறது தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும். விழாவின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் தீச்சட்டி, கரும்புத் தொட்டில்,ஆயிரங்கண் பானை,முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி வருகின்றனர்.ஏப்ரல் 5ம் தேதிபொங்கல் வைபவம், ஆறாம் தேதி தேரோட்டம், ஏழாம் தேதி பால்குட ஊர்வலம், ஊஞ்சல் உற்சவம், புஷ்பா பல்லக்கு எட்டாம் தேதி தீர்த்தவாரி என சிறப்பாக நடக்கும்.

30-3-2025, ஞாயிறு தெலுங்கு வருடப்பிறப்பு

தெலுங்கு, கன்னட மக்களின் வருடப் பிறப்பு யுகாதி. பங்குனி வளர் பிறையில் ரேவதி அஸ்வினி முதலிய நட்சத்திரங் களில் சந்திரன் பிரகாசிக்கும்பொழுது யுகாதி பிறக்கிறது. திருமலையில் யுகாதி ஆஸ்தானம் அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெறும். கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கும். மூலவர் சந்நதி முதல் கொடிமரம், ரங்கநாதர் மண்டபம் உட்பட கோயில் முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்வர். பின்னர் பச்சைக்கற்பூரம், குங்குமம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட மூலிகைப் பொருட்களைக்கொண்டு தயாரித்த கலவையை கோயில் சுவரில் தெளித்து மூலவருக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து சிறப்புப் பூஜைகள் நடக்கும். தங்கக் கதவு அருகே தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி காலை 6 மணிக்கு விஸ்வ சேனாதிபதியுடன் இணைந்து ஆனந்த நிலையத்தைச் சுற்றி வலம் வந்து கொலு வைக்கப்படுவார். வருட பஞ்சாங்கத்தை கோயிலின் அர்ச்சகர்கள் வாசிப்பர். யுகாதி அன்றைக்கு காலையில் எழுந்து எண்ணெய்க் குளியல் முடித்து, புத்தாடை அணிவார்கள். வண்ணக்கோலங்களால் வீட்டை அலங்கரிப்பார்கள். மாவிலைத் தோரணம் கட்டுவார்கள். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்குவார்கள். வேப்பம் பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய், மாவடு என்று ஆறு பொருட்கள் கலந்திருக்கும். அன்றைக்கு போளி, பால் பாயாசம், புளியோதரை முதலியவற்றை விசேஷமாகச் செய்வார்கள். யுகாதி தினத்தன்று ஒரு ஜோதிடரை வீட்டிற்கு வரவழைத்து, அந்த வருடத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படி இருக்கிறது என்பது கணிக்கப்படும்.கோவில்களில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச் சிகளும் நடக்கும். இன்று ராமாயணம் கேட்டால் புத்தாண்டு சுபிட்சமாக அமையும் என்பது நம்பிக்கை.

30-3-2025 ஞாயிறு வசந்த நவராத்திரி

ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆனி, ஆடி மாதத்தில் வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி. தை மாதத்தில் வருகின்ற நவராத்திரி சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் வருகின்ற நவராத்திரி வசந்த நவராத்திரி. புரட்டாசியில் வருவது சாரதா நவராத்திரி. சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் மிக முக்கியமான நவராத்திரிகள். இவை இரண்டும் எமனின் இரண்டு தாடைகள் என்று சொல்லுவார்கள். இதில் அகப்படாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் இந்த இரண்டு நவராத்திரிகளும் கொண்டாடப்பட வேண்டும். அம்பாளை விசேஷமாகப் பூஜிக்க வேண்டும். இதன் மூலமாக நீண்ட ஆயுள் பெறலாம். வசந்த காலத்தில் கொண்டாடப்படுவதால் வசந்த நவராத்திரி என்கிற பெயர் வசந்த நவராத்திரி பூஜைகள் பகலிலேயே நடைபெறுகின்றன. மேரு என்கிற சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயங்களில் அவசியம் இந்த வசந்த நவராத்திரியைக் கொண்டாடுவார்கள். ராஜமாதங்கி (ராஜ சியாமளா) தேவியை இந்த வசந்த நவராத்திரியில் பிரத்யேகமாக பூஜிப்பார்கள். இந்த நவராத்திரி உற்சவத்தில் கலச பூஜை செய்து அம்பாளை வணங்குவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

30-3-2025, ஞாயிறு சிவகாசி மாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில்கள் பரவலாக காணப்படும் நிலையில், சிவகாசியில் உள்ள மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா, அக்னி சட்டி எடுக்கும் நிகழ்வு, தேரோட்டம் என விமர்சையாக நடைபெற உள்ளது. இக்கோயில் திருவிழாவில் பக்தர்கள் பொங்கல் இடுதல், அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், கயிறு குத்துதல், அலகு குத்துதல், பறவைக்காவடி
எடுத்தல் என பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

31.3.2015 திங்கள் மதுரை பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில் உற்சவம் ஆரம்பம்

மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மதுரை நகரில் தெற்கு மாசிவீதியில் அமையப்பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். மதுரை சௌராஷ்டிர சபையினரால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது. பக்தர்கள் மனதில் பிரசன்னமாகி, அதன்பின் எழுப்பப்பட்ட கோயில் என்பதால் சுவாமி, ‘‘பிரசன்ன வெங்கடேசர்” என்று பெயர் பெற்றார். மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசர், நின்ற கோலத்தில் தேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில் பள்ளிகொண்ட பெருமாள், நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவர், பாண்டு ரங்கன், ரகுமாயி தாயார், ராமர், வைஷ்ணவ விக்னேசுவரர், கருடாழ்வார், சுதர்சனர், அஞ்சலி ஆஞ்சநேயர், நடனகோபால நாயகி சுவாமி மற்றும் ஆண்டாள் ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். இங்கு இன்று உற்சவம் ஆரம்பம்.

1.4.2025 செவ்வாய் தொட்டியம் காளியம்மன் ரதம்

மதுரகாளியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தொட்டியம் எனும் ஊரில் அமைந்துள்ள திருக்கோயிலில் மூலவராக மதுரகாளியம்மன் உள்ளார். வெண் குதிரை வாகனம் பலிபீடத்திற்கு அருகேயே உள்ளது. மதுரை வீரன் சந்நதியும் இத்தலத்தில் உள்ளது. மதுரகாளியம்மனுக்கு நடைபெறும் திருவிழாவும், தேரோட்டமும் முக்கியமானவையாகும். தை மாதம் இரண்டாம் தேதி முகூர்த்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து திருவிழா ஏற்பாடுகள் தொடங்கி, பங்குனி மாதம் தேரோட்டம் முடியும் வரை தொட்டியம் அமர்க்களப்படும். இந்த விழாவின்
முக்கியமானது இரட்டைத் தேரோட்டம். பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் 32 அடி உயரம் கொண்ட பெரிய தேர், 30 அடி உயரம் கொண்ட சிறிய தேர், இரண்டும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வரும். தமிழகத்திலேயே தோளால் தூக்கிச் செல்லப்படும் மிக உயரமான தேர் இதுவாகத்தான் இருக்கும். இரண்டு தேரும் ஒரே நேரத்தில் வீதிவலம் வருவதால், சுமார் 200 பேர் தேரைச் சுமந்து செல்கின்றனர்.

1.4.2025 செவ்வாய் சக்தி கணபதி விரதம்

பங்குனி மாதத்தின் வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினத்தை, சக்தி சதுர்த்தி என்பார்கள். இந்த நாளில், ஆலயங்களில் உள்ள விநாயகருக்கு, சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். இதேபோல், பிள்ளையாருக்கு வீட்டில் இருந்தபடியே பூஜைகள் செய்யலாம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு பகை, கடன், நோய் முதலியவை விலகி, நல்ல நட்பு கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம்
ஏற்படும். ஆரோக்யமான வாழ்வு கிடைக்கும். காலையில் எழுந்து நீராடி, விநாயகருக்கு விளக்கேற்றி, அறுகம்புல் மற்றும் வாசனை மலர்களை வைத்து பூஜிக்க வேண்டும். மாலை வரை உபவாசம் இருந்து, மாலைவேளையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று, சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டு, அதன் பிறகு உணவு உண்ண வேண்டும். சக்தியையும் கணபதியையும் சேர்த்து வணங்கினால் உடல்
ஆரோக்கியம் பெருகும்.

3.4.2025 வியாழன் சிவநேச நாயனார் குருபூஜை

அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிவனேச நாயனார் ஒருவர். காளர்மரபில் அவதரித்தவர். அறுவையார் குலத்தில் (சாலியர்) பிறந்த இவர் சிவனடியார்கள் மீது நேசம் மிக்கவர் என்பதால் இவருக்கு சிவநேசர் என்கின்ற திருநாமம். நெசவுத் தொழிலை செய்துவந்தார். அதில் கிடைத்த பணத்தை சிவனடியார்களுக்குச் செலவிட்டுவந்தார். அதுமட்டுமில்லை. தானே அவர்களுக்கு தேவையான ஆடைகளையும் நெய்து கொடுத்தார். தாம் செய்கின்ற தொழிலின் மூலமாகவே தம்முடைய இறை
பக்தியையும் இறையடியார்கள் நேசத்தையும் காட்டமுடியும் என்பதை உறுதியோடு கடைப்பிடித்தவர், சிவநேச நாயனார். இந்த உள்ள உறுதியால் சிவனருள் பெற்று சிவ ஜோதியில் கலந்தார் அவருடைய குரு பூஜை, பங்குனி மாதம் ரோகிணியில்.அதாவது இன்று.

4.4.2025 வெள்ளி சந்தான சப்தமி

திதிகளில் ஏழாவது திதி புனிதமானது. சப்தமி என்று பெயர். சூரிய வழிபாட்டிற்கு சிறப்பானது. பங்குனியில் வளர்பிறை சப்தமி திதி சந்தான சப்தமி என்று வழங்கப்படுகிறது. அன்று வெள்ளிக்கிழமை சேர்ந்திருந்தால் கமலா சப்தமி என்று மஹாலஷ்மி வழிபாட்டிற்கும் உரியதாகிறது. இந்த நாளில் சூரிய பகவானையும், மஹாலட்சுமியையும் வணங்கினால், சந்தான விருத்தி உண்டாகும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் அவசியம். இந்த நாளில் விரதம் இருக்க வேண்டும். கண்நோய்கள் தீரும்.கண்கள் ஒளிபெறும்.

5.4.2025 சனி கணநாத நாயனார் குருபூஜை
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் கணநாத நாயனார். அந்தணர் குலத்தில் பிறந்தவர். இவர் சீர்காழியில் ஆளுடைப் பிள்ளையார் அவதரித்த திருஞான சம்பந்தரிடம் எல்லையற்ற அன்பு கொண்டவர். சிவனடியார்களிடம் உருகி உருகி அவர்களுக்கு வேண்டியதை செய்து தருவார். எப்போதும் வாயில் சிவநாமம் ஜெபித்துக் கொண்டு சிவ சிந்தனையோடு இருப்பார். சீர்காழி தோணியப்பரிடம் அகலாத அன்பு கொண்டவர். இந்த அன்பின் காரணமாக நல்லதோர் சிவ வாழ்வு வாழ்ந்து சிவஜோதியில் கலந்தார். 

விஷ்ணுபிரியா

29.3.2025 சனிக்கிழமை அமாவாசை
1.4.2025 செவ்வாய்க்கிழமை கார்த்திகை
1.4.2025 செவ்வாய்க்கிழமை சதுர்த்தி
1.4.2025 செவ்வாய்க்கிழமை
முத்துசாமி தீட்சிதர் ஜெயந்தி
2.4.2025 புதன்கிழமை திருநெல்வேலி நெல்லையப்பர் புறப்பாடு
2.4.2025 புதன்கிழமை திருமங்கலக் குடி, திருவாலங்காடு, பனங்குளம்,
பங்குனி உத்திரம் திருக்கொடி ஏற்றம்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: