சனிப்பெயர்ச்சி பொதுப் பலன்கள்

நாடு மற்றும் பொருளாதாரம்

குரு வீட்டிற்கு சனி மாறுவதால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரயங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். சனி பகவானுக்கு மீன ராசி நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளர்கள் அழிக்கப்படுவர். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். குரு சாரத்தில் மாறுவதால் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். அரசாங்கம் அவற்றை பறிமுதல்களும் செய்யலாம். எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். வாகனங்கள் வாங்குவோரது எண்ணிக்கை உயரும். அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

வானிலை:

இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.

ஆன்மிகம் மற்றும் கோயில்கள்

புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேளையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் சமாதானம் ஏற்படும். புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.

பொது

பல முக்கிய வழக்குகளுக்கு இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும். காலபுருஷனின் ஐந்தாமிடத்தின் பார்வையிலிருந்து சனி விலகுவதால் குழந்தை பிறப்பு அதிகமாகும்.

ஆரோக்கியம்

நோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். அதேபோன்று கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது. புதிய வைரஸ் உலகை ஆட்கொள்ளும்.

குடும்பம்

கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை சமாதானத்தில் முடியும். விவாகரத்துக்கள் குறையும். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும்.

The post சனிப்பெயர்ச்சி பொதுப் பலன்கள் appeared first on Dinakaran.

Related Stories: