சு.ரவி (அதிமுக): விளையாட்டு துறை அதிமுக ஆட்சியில் பொற்காலமாக விளங்கியது. நீங்கள் மாவட்ட அளவில் விளையாட்டு அரங்கம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று கூறினீர்கள். ஆனால் அந்த அறிவிப்பில் வேகம் இல்லை. நேரு விளையாட்டு அரங்கம் பொழுது போக்கு மையமாக மாறி இருக்கிறது. செஸ் போட்டி, கார் ரேஸ் போட்டிகளுக்கு அதிக பணம் செய்து நடத்தியுள்ளீர்கள். விளையாட்டுகளுக்கு கோடி கோடியாக செலவு செய்தீர்கள். அதனால், தெருக்கோடியில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களுக்கு என்ன பலன் என்பதை கேட்க விரும்புகிறேன்.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: செஸ் போட்டியில், இந்திய அளவில், தமிழ்நாட்டு வீரர்கள் யாருமே இல்லை என்பது போன்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். உலகளவில், இந்தியாவில்தான் அதிக கிராண்ட் மாஸ்டர்ஸ் இருக்கிறார்கள். அதையும் தாண்டி, தமிழ்நாட்டில் அதிகளவில் கிராண்ட் மாஸ்டர்சை உருவாக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய பெருமைக்குச் சொந்தக்காரர்கள் முதல்வரும், துணை முதல்வரும்.
அதிலும், சென்னையில் அதிக எண்ணிக்கையிலான மகத்தான செஸ் விளையாட்டு வீரர்கள், உலகத் தரத்தில் நம்பர் 1 என்ற நிலையில் இருக்கிறார்கள்.
அவ்வாறு மிகப்பெரிய அளவில் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களை உலகளவிலான வீரர்களாக உருவாக்கியவர் துணை முதல்வர்.
கே.ஏ.செங்கோட்டையன்: விஸ்வநாதன் ஆனந்த் செஸ் போட்டியில் சிறந்தமுறையில் விளையாடினார் என்பதற்காக, அவருக்கு வீடு வழங்கப்பட்டதுடன், ரூ.25 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கி வரலாறு படைத்தவர் ஜெயலலிதா என்பதை மறந்துவிடக் கூடாது.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா: அந்த செய்தியை முதலில் அவர்களுடைய கட்சி உறுப்பினருக்கு சொல்லச் சொல்லுங்கள். எங்களுக்கு நன்றாக தெரியும். இவ்வாறு விவாதம் நடந்தது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட்) பேசுகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடைகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிந்து கட்ட இயலாது என்று சொல்கிறார்கள். அரசு விளக்கம் தர வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசுகையில், முழுநேர கடைகளுக்குதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் வரக்கூடிய நிதியை பயன்படுத்தலாம், பகுதிநேரக் கடைகளுக்கு அந்த நிதியைப் பயன்படுத்த முடியாது என்று சொல்கிறார்கள். ஆனால், நான் அறிந்த வரையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை அதற்கு பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை.
ஆகவே, மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது திட்ட இயக்குநரிடத்திலோ அதுபற்றி பேசி அதை முடிவுசெய்யலாம். சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து கடைகள் கட்டுவதற்கு தடை இல்லை என்றார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பெண்ணாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி (பாமக) பேசுகையில், தர்மபுரி மாவட்டத்திற்கு வாழ்வாதாரம் தேவை. காவிரியாற்றில் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் 100 டி.எம்.சி., 150 டி.எம்.சி., தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அவ்வாறு கடலில் கலந்து வீணாகும் நீரை, நீரேற்று முறைமூலம் தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளம், குட்டைகளையும் நிரப்பினால், அது மக்களுக்கு வாழ்தாரம் தரக்கூடிய திட்டமாக அமையும் என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், உறுப்பினர் காவிரி உபரி நீரைப் பயன்படுத்துவது குறித்து கேட்டிருக்கிறார். காவிரி நதியின் உபரி நீரை வழங்கக்கோரும் பெண்ணாகரம் குறுவட்டம் மற்றும் நல்லம்பள்ளி வட்டம் ஒரு பகுதி ஆகியவற்றிலுள்ள நீர்நிலைகள் காவிரி வடிநிலத்திலும், பாலக்கோடு வட்டம், தர்மபுரி வட்டம் மற்றும் நல்லம்பள்ளி வட்டம் ஒரு பகுதி ஆகியவற்றிலுள்ள நீர்நிலைகள் தென்பெண்ணை ஆற்றின் வடிநிலத்திலும் உள்ளன. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்திலுள்ள குடிநீர் ஆதாரங்களை நீரேற்று முறையில் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் இருக்கிறது. மேலும், காவிரி உபரி நீரை உபயோகிப்பது குறித்து கர்நாடக அரசு தொடுத்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவற்றையும் கருத்திற்கொண்டு, தேவைக்கேற்ப ஆய்வு செய்து, அதற்கேற்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
பள்ளி மாணவர்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் பேருந்துகளுக்கு படிப்படியாக தானியங்கி கதவு அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
தமிழக சட்டப் பேரவையில் நேற்று திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பெருந்துறை ஜெயக்குமார் (அதிமுக) பேசியதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் பல்லகவுண்டன்பாளையத்தில் தனியார் பேருந்தில் கூட்டம் அதிகமானதால் படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்ததால், பேருந்து கவிழ்ந்து எனது தொகுதியைச் சார்ந்த 3 மாணவர்கள் இறந்துவிட்டனர். அந்த குடும்பங்களுக்கு அமைச்சர் நேரில் வந்து நிதி கொடுத்தார். இருந்தாலும், அந்தப் பேருந்துகளுக்கு கண்டிப்பாக தானியங்கி கதவு அமைக்க வேண்டும்.
அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்: இந்த பேருந்துகளுக்கெல்லாம் தானியங்கிக் கதவுகளை அமைக்கின்ற பணி தொடங்கி சென்னை மாநகரத்திலே முடிவுற்றிருக்கிறது. பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு, மற்ற பகுதிகளிலும் படிப்படியாக அதைச் செயல்படுத்துவதற்கு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
The post செஸ் விளையாட்டு வீரர்களை உலகளவிலான வீரர்களாக உருவாக்கியவர் துணை முதல்வர்: அதிமுகவுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி appeared first on Dinakaran.