யாக பூஜைகள் இன்று தொடக்கம்; திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஏப்ரல் 4ல் குடமுழுக்கு: மரகத நடராஜரை 4 நாள் தரிசிக்கலாம்


ராமநாதபுரம்: திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வரும் ஏப்ரல் 4ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. யாகசாலை பூஜை இன்று மாலை தொடங்குகிறது. இதையொட்டி, ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் மரகத நடராஜர் சன்னதி, நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற, மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜர் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார். கோயில் பிரதான ராஜகோபுரம் மற்றும் உள், வெளி வளாகத்திலுள்ள 25 விமான கோபுரங்களுக்கு வருகிற ஏப்ரல் 4ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இதற்காக கோயில் வளாக பந்தலில் 100 அக்னி குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழாவில் இன்று மாலை கணபதி ஹோமம், கோ பூஜையுடன் யாக சாலை பூஜைகள் துவங்க உள்ளது. தொடர்ந்து நாளை (ஏப்.1)ம் தேதி காலையில் முதல் கால யாகசாலை பூஜை நடைபெறும். இதையடுத்து 6 கால பூஜைகள் நடத்தப்பட்டு ஏப்.4ம் தேதி காலை 9 மணி முதல் 10.20 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

மரகத நடராஜர்
இந்தக் கோயிலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்தப்படும் நிலையில், பச்சை மரகத நடராஜர் சன்னதியில் மூலவர் அமைந்துள்ள பீடத்திற்கு கீழ் பகுதியில் புதிய உலோகங்கள் பதித்து மருந்து சாத்துதல் வைபவம் நடைபெற உள்ளது. இதனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் மரகத நடராஜர் சன்னதி நாளை (ஏப்.1) மதியம் 1 மணியளவில் சைவ நெறி ஆகம விதிகளுக்குட்பட்டு திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4ம் தேதி இரவு மரகத நடராஜருக்கு 32 வகை மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய சந்தனம் சாற்றப்பட்டு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயிலின் பிரதான ராஜகோபுரங்கள், தூண்கள், மேல்தளம் மற்றும் தரைத்தளத்துடன் கூடிய உள்பிரகார மண்டபங்கள், நந்தி மண்டபம், அம்பாள் சன்னதி மண்டபம்,தெப்பக்குளம் ஆகியவை தொல்லியல் துறை ஆலோசனைப்படி பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

The post யாக பூஜைகள் இன்று தொடக்கம்; திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஏப்ரல் 4ல் குடமுழுக்கு: மரகத நடராஜரை 4 நாள் தரிசிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: