சென்னை: தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர. இஸ்லாமிய மார்க்கத்தில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு கடைப்பிடிப்பதும் ஒன்றாகும். புனித ரமலான் மாதத்தின் போது இந்த கடமையை இஸ்லாமிய பெருமக்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி ரமலான் நோன்பு கடந்த 2ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் நேற்று ”ஷவ்வால்” பிறை தென்பட்டதை தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை இன்று(திங்கட்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையக தலைமை காஜி தாவூத் கைசர் ஆகியோர் அறிவித்தார். அதன்படி ரம்ஜான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கட்சி அனைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஏழை எளிய மக்கள் மற்றும் நண்பர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினர். மேலும் சில இடங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் இஸ்லாமியர்கள் வழங்கினர். ரம்ஜானை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பிராட்வே டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் இன்று காலை 7.55 மணிக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பெருநாள் உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடசென்னை மாவட்டம் சார்பாக மண்ணடி அரண்மனைகாரன் தெரு, திருவல்லிக்கேணி சென்னை நடுநிலைப்பள்ளி, வடசென்னை மாவட்டம் புதுப்பேட்டை கிளை சார்பில் எழும்பூர் இம்பீரியல் ஓட்டலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதே போல, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் திருவல்லிக்கேணி, பெரியமேடு ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். வக்புவாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் கருப்பு பட்டை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர். சென்னை மயிலாப்பூர் ஜிம்மா மஸ்ஜித்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் கலந்து கொண்டார். தொழுகையை நிறைவு செய்து விட்டு வெளியே வந்த இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு புத்தாடை, உணவு பொட்டலங்கள், பணம் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினர்.
The post தமிழகம் முழுaவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் appeared first on Dinakaran.