நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தில் விமானம் சார்ந்த ஈடுபாடுகள் பாதுகாத்தல் மசோதா: திமுக எம்பி பி.வில்சன் உரை


சென்னை: புதுடெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடரில் விமானம் சார்ந்த ஈடுபாடுகளைப் பாதுகாத்தல், 2025 தொடர்பான மசோதா விவாதத்துக்கு வந்தது. இதில் திமுக எம்பி பி.வில்சன் பேசுகையில், சர்வதேச நலன்கள் குறித்து கேப்டவுனில் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் உடன்படிக்கை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதில் முக்கிய அம்சம் என்னவெனில் விமானங்கள், என்ஜின்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்ற அசையும் விமான சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான ஒருதரப்படுத்தப்பட்ட சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. அதேநேரம் கடன் வழங்குபவர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் நிதியளிப்பவர்களுக்கு அத்தியாவசிய சட்ட பாதுகாப்புகளையும் வழங்குகிறது. இதில் இந்தியா கையெழுத்திட்ட போதிலும், கடந்த 2 தசாப்தங்களாக உறுதிப்படுத்த தவறிவிட்டது.

இதனால் அந்த விதிகள் அனைத்தும் தற்போது சட்டபூர்வமாக பயனற்றதாகிவிட்டன.
இந்த உடன்படிக்கை மூலம் பிற நாடுகள் முன்னேறிய நிலையில், இந்தியாவில் இந்த உடன்படிக்கை புறக்கணிக்கப்பட்டும் அமல்படுத்தப்படாமலும் இருந்தது. இறுதியாக, நீண்டகால தாமதத்துக்கு பிறகு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் விமானம் சார்ந்த ஈடுபாடுகளைப் பாதுகாத்தல், 2025 எனும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்னதாக, விமானத் தொழிலுக்கான சட்ட கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்துவதில் பங்களிக்கும் Aviation Working Group (AWG) பணிக்குழுவால் கேப்டவுன் உடன்படிக்கை இணக்க மதிப்பீட்டில் இந்தியா தரமிறக்கத்தை எதிர்கொண்டுவிட்டது. இத்தரமிறக்கம், இந்திய விமான நிறுவனங்களுக்கு உண்மையான நிதிவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாமதத்தினால் அதிக குத்தகை செலவுகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைதல், தேவையற்ற பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டன. குறிப்பாக, உலகின் 3வது பெரிய உள்நாட்டு விமானத் துறையான இந்தியா போன்ற மிகப்பெரிய சந்தையை பலரும் உற்றுநோக்குகின்றனர். இந்தியாவுக்கு அதிகப்படியான திறன் இருந்தும், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுவதில் அண்டை நாடான பாகிஸ்தானைவிட பின்தங்கியுள்ளது. இதற்குக் காரணம், உரிய நேரத்தில் இந்தியா செயல்படத் தவறியதேயாகும்.

The post நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தில் விமானம் சார்ந்த ஈடுபாடுகள் பாதுகாத்தல் மசோதா: திமுக எம்பி பி.வில்சன் உரை appeared first on Dinakaran.

Related Stories: