உதயநிதி சட்டசபைக்கு வராதது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சட்டசபையில் நேற்று திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. இந்த துறையின் அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்க இருந்தார். ஆனால் நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்திற்கு அவர் வரவில்லை. இதனால், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வராதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவுடன் பேரவைக்கு வந்திருந்தார். தற்போதும் கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே, நான் மானியக் கோரிக்கையை முன் வைக்க கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பேச உள்ளார். பதிலுரைக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

* இருமொழி கொள்கையை வலியுறுத்தியதற்கு நன்றி அடுத்த முறை டெல்லி செல்லும் போது வக்பு மசோதா குறித்து பேச வேண்டும்: எடப்பாடிக்கு முதல்வர் வேண்டுகோள்
அடுத்தமுறை டெல்லி செல்லும்போது வக்பு சட்ட திருத்த பிரச்னை குறித்து எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தை அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் ஆதரித்து பேசினர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வக்பு வாரிய திருத்த சட்டமுன்வடிவை திரும்பப்பெற வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து இங்கே அனைத்துக் கட்சியின் சார்பாக அந்தந்த கட்சியினுடைய தலைவர்கள், உறுப்பினர்கள் (பாஜ தவிர) ஆதரித்து பேசியிருக்கிறார்கள். இங்கே பிரதான எதிர்க்கட்சியும் மனதார வரவேற்று இருக்கிறார்கள். அதற்காக நான் முதலில் எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவிடம் நான் வைக்கக்கூடிய ஒரு கோரிக்கை, நேற்று முன்தினம் இதே அவையிலே இரு மொழிக் கொள்கை பிரச்னை பற்றி பேசுகிறபோது ஒன்று சொன்னேன். எதிர்க்கட்சி தலைவர் (எடப்பாடி பழனிசாமி) டெல்லிக்கு சென்றிருக்கிறார். எனக்கு செய்தி கிடைத்திருக்கிறது. யாரை சந்திக்க போகிறார் என்கிற அந்த செய்தியும் கிடைத்திருக்கிறது என்று சொன்னேன். அதற்கு பிறகு மாலையில் பார்த்தால் உள்துறை அமைச்சரை சென்று எடப்பாடி சந்தித்திருக்கிறார். சந்திக்கலாம், நாங்கள் அதை வேண்டாமென்றோ, தவறு என்றோ சொல்லவில்லை.

ஆனால், அதே நேரத்தில், அங்கே சென்று தமிழ்நாட்டிற்கு வேண்டிய உரிமையை நான் கேட்டிருக்கிறேன், இருமொழிக் கொள்கை பற்றி நான் பேசியிருக்கிறேன் என்று டெல்லியில் இருந்து செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
அதற்காக, நான் இந்த அவையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வாறு இருமொழிக் கொள்கை குறித்து வலியுறுத்தி வந்திருப்பதாக தெரிவித்தாரோ, அதேபோல் வக்பு சட்டத் திருத்த பிரச்னையையும் அடுத்த முறை டெல்லி செல்லும்போது அவர் வலியுறுத்த வேண்டுமென்ற வேண்டுகோளை வைக்கிறேன் என்றார்.

The post உதயநிதி சட்டசபைக்கு வராதது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: