பெரம்பலூர், மார்ச் 25: உரிய தேதிகளில் ஊதியம் வழங்க ஆணை பிறப்பிக்கக் கோரி தமிழ் நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று திங்கட்கிழமை காலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில்நடை பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக, ஆலத்தூர் பிளாக் தலைவரான ஆலத்தூர் தாலுக்கா, நாரணமங்கலம் ஊராட்சி, மருதடி கிராமம் குன்னுமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தலைமையில் முன்களப் பணியாளர்கள் திரண்டு வந்து அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா, கொளக்காநத்தம் பிளாக் 20ல், மஸ்தூர் பணியாளர்களாக வேலை செய்கிறோம்.
எங்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2- மாதங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. ஆனால் பெரம்பலூர் வேப்பந்தட்டை பிளாக்கில் ஜனவரி மாத ஊதியம் வழங்கி விட்டனர்.எங்களுக்கு ஒரு மாதம் வேலைசெய்தால் அடுத்த மாதம் கழித்துதான் சம்பள பில் தயார் செய்கிறார்கள். ஒரு முறையான தேதியில் ஊதியம் வழங்க, தாங்கள் தான் ஆணை பிறப்பிக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post டெங்கு ஒழிப்பு முன்களப்பணியாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.