நாக்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுபான்மை ஜனநாயக கட்சி தலைவரின் வீடு புல்டோசர் மூலம் இடிப்பு

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற கோரி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் கடந்த 17ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதை தொடர்ந்து நாக்பூரில் பெரும் கலவரம் நடந்தது. கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. கலவரத்தில் காயம் அடைந்த ஒருவர் இறந்துவிட்டார். கலவரம் தொடர்பாக 104 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பாகிம் கான் மற்றும் யூஷுப் ஷேக் ஆகியோரும் அடங்குவர்.

இதில் பாகிம் கான் கலவரத்தில் பங்கேற்ற முக்கிய குற்றவாளியாவார். பாகிம் கான் சிறுபான்மையினர் ஜனநாயக கட்சியின் தலைவர் ஆவார். இந்த கட்சி மாலேகாவில் செயல்படுகிறது. பாகிம் கானின் வீடு நாக்பூர், யஷோதரா நகரில், சஞ்சய் பாக் காலனியில் உள்ளது. இரு மாடிகளை கொண்ட இந்த வீடு நாக்பூர் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலம் வாடகைக்கு வழங்கப்பட்டது. இதனால் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீட்டை இடிக்கப்போவதாக 24 மணி நேரத்துக்கு முன் நாக்பூர் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

இதேபோல யூஷுப் ஷேக்கின் வீடும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடு என்றும் கூறும் அதிகாரிகள் அந்த வீட்டையும் இடிக்க முடிவு செய்து நோட்டீஸ் அனுப்பினர். இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு மாநகராட்சி அதிகாரிகள் பாகிம் கானின் வீட்டை புல்டோசர்களை பயன்படுத்தி இடித்தனர். இதனிடையே, வீடுகளை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. கோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே அதிகாரிகள் கானின் வீட்டை இடித்து விட்டனர். யூஷுப்பின் வீட்டின் ஒரு பகுதியையும் இடித்துவிட்டனர். கோர்ட் உத்தரவினை தொடர்ந்து இடிப்பு பணி நிறுத்தப்பட்டது.

The post நாக்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுபான்மை ஜனநாயக கட்சி தலைவரின் வீடு புல்டோசர் மூலம் இடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: