தேனி : தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ரஞ்ஜித்சிங் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை, மின்சார வாரியத்துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறுத் துறை அதிகாரிகள் மற்றும் தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பேசும்போது, வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை இதுவரை 176.8 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல்விதை 30 மெட்ரிக்டன்னும், சிறுதானியங்கள் 5.80 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 17.6 மெட்ரிக் டன்னும், எண்ணை வித்துப்பயிர் விதைகள் 1.8 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது.
தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1,571 மெட்ரிக்டன்னும், டிஏபி 753 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,439 மெட்ரிக் டன்னும், கலப்பு உரங்கள் 3,867 மெட்ரின்டன்னும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 27 ஆயிரத்து 320 பிரதமமந்திரி விவசாயிகள் திட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 578 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
மீதமுள்ளவர்களையும் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தோட்டக்கலைத் துறையின் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பிலான காளான் உற்பத்திக்குடில் ஒரு நபருக்கும், வேளாண்மை இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ. 46 ஆயிரத்து 800 மதிப்பிலான சுழல் கலப்பை ஒருவ ருக்கும் கலெக்டர் ரஞ்ஜித்சிங் வழங்கினார்.
இக்கூட்டத்தின்போது, விவசாயிகள் சீனிராஜ், கண்ணன், பாண்டியன், கென்னடி, ஜெயபால்,மனோகரன், இளங்கோவன், ராசு உள்ளிட்டோர் பேசினர். விவசாயிகள் பேசும்போது, பட்டு வளர்ப்புக்கான மல்பரி விவசாயத்தில் தேனி மாவட்டத்தில் சுமார் 1800 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் புதிய விவசாயிகளுக்கு மட்டும் அரசு இயற்கை உரம் உள்ளிட்டவை வழங்குவது போல பழைய விவசாயிகளுக்கும் வழங்கவும், புதிய விவசாயிகளை பட்டுநூற்பாலைகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வது போல பழைய விவசாயிகளையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை விடுத்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் சாந்தாமணி, உதவி வனப்பாதுகாவலர் அரவிந்த், வேளாண்மைக்கான மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் 176.8 மெட்ரிக் டன் நெல் விதை விநியோகம் appeared first on Dinakaran.