ஆசிரமத்திற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர் நள்ளிரவில் பூட்டை உடைத்து புகுந்த நித்யானந்தா சிஷ்யைகள்: சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து பூஜையால் பரபரப்பு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் டாக்டர் கணேசன். இவர் 18 வருடங்களுக்கு முன் நித்யானந்தாவின் தீவிர சிஷ்யராக இருந்து வந்தார். அப்போது தனக்கு சொந்தமான கோதை நாச்சியாபுரம் கிராமத்தில் உள்ள 4 ஏக்கர் நிலத்தையும், சேத்தூர் மலையடிவார பகுதியில் உள்ள சுமார் 37.75 ஏக்கர் நிலத்தையும் நித்யானந்தா தியான பீடத்திற்கு தானமாக வழங்கினார். இதன்பிறகு நித்யானந்தாவின் செயல்களால் அதிருப்தியடைந்த கணேசன், தியான பீடத்திற்கு தானமாக வழங்கிய 40 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தருமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் , நித்யானந்தாவின் ஆசிரமம் செயல்படக்கூடாது, சிஷ்யைகள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.இதையடுத்து இரண்டு ஆசிரமங்களிலும் உள்ள நித்யானந்தாவின் சிஷ்யைகளை வெளியேற்ற தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் கடந்த 19ம் தேதி ஆசிரமத்திற்கு சென்றனர். அப்போது, சிஷ்யைகள் ஆசிரமத்தை உள்புறமாக பூட்டிக் கொண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 2 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என கூறிவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

அதிகாரிகள் அளித்த கெடு முடிந்ததையடுத்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கிருந்த சிஷ்யைகளை வெளியேற அறிவுறுத்தினர். அவர்களும் சச்சரவு ஏதுமின்றி வெளியேறினர். இதையடுத்து அதிகாரிகள் ஆசிரமங்களை பூட்டி சீல் வைத்துவிட்டு சென்றனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் சேத்தூரில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உள்ள ஆசிரமத்திற்கு வந்த சிஷ்யைகள், சீல் வைத்த பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு இருட்டு அறைக்குள் அமர்ந்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்தவாறு, ‘தானமாக வழங்கியது எங்களது நிலம். அதனை வலுக்கட்டாயமாக அதிகாரிகள் பிடுங்கி வெளியேற்றுகின்றனர். பரமஹம்ச நித்யானந்தருக்கும் எங்களுக்கும் அநீதி நடந்துவிட்டது’ என்று கூறி அழுது புலம்பிய படி பூஜை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தகவல் அறிந்த சேத்தூர் போலீசார் நள்ளிரவில் உடனடியாக ஆசிரமத்திற்கு சென்றனர். அங்கு அத்துமீறி உள்ளே நுழைந்த சிஷ்யைகளை வெளியேற்றினர்.

The post ஆசிரமத்திற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர் நள்ளிரவில் பூட்டை உடைத்து புகுந்த நித்யானந்தா சிஷ்யைகள்: சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து பூஜையால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: