விழுப்புரம், மார்ச் 22: விழுப்புரம்- தஞ்சை இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க சாத்தியக்கூறு இல்லை என்றும், புதுவைக்கு மதிய நேரத்தில் ரயில் இயக்கவும், சென்னைக்கு மின்சார ரயில் தேவைக்கு ஏற்ப இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.13.21 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று சிறப்பு ரயில் மூலம் விழுப்புரத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைமேடை விரிவாக்கம், ஓய்வுஅறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் ரயில் நிலையம் பசுமை ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ரயில் நிலைய வளாகப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், கண்காணிப்பு கேமராக்களில் பழுது ஏற்பட்டுள்ளது.
பணிகள் முடிந்தவுடன் பழுது சரி செய்யப்படும். மேலும் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு வசதிக்காக 85 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில் பயணச்சீட்டை தற்போது செல்போன் செயலி மூலமாக பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர இயந்திரம் மூலமும் வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள், வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து அடிப்படை வசதிகளும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும். விழுப்புரம்-தஞ்சாவூர் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கும் திட்டம் சாத்தியமில்லை. விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தேவைக்கேற்ப மின்சார ரயில்களும் இயக்கப்படும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விழுப்புரம்-புதுச்சேரி இடையே மதிய நேரத்தில் இயக்கப்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் இயக்குவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரவித்தார். ஆய்வின் போது முதன்மை தலைமைப் பொறியாளர் ககலோத், திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன், முதன்மை திட்ட மேலாளர் நசீர் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post விழுப்புரம்- தஞ்சை இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க சாத்தியக்கூறு இல்லை புதுவைக்கு மதிய நேரத்தில் ரயில் சேவை தெற்கு ரயில்வே கைவிரிப்பு appeared first on Dinakaran.