ஒன்றிய அரசை கண்டித்து திமுக பொதுக்கூட்டம்

தூத்துக்குடி, மார்ச் 22: ஒன்றிய அரசை கண்டித்து ஆத்தூரில் இன்றும், புதுக்கோட்டையில் நாளையும் திமுக பொதுக்கூட்டம் நடைபெறுவதாக தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் -மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுக்கு நிதி தர மறுக்கின்ற, மும்மொழி திட்டத்தை திணிக்கின்ற, மக்களவைத் தொகுதிகளை சீரமைக்க முயலும் ஒன்றிய அரசிற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டுமென துணை முதல்வரும், இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி ஆத்தூரில் இன்று (22ம் தேதி) மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை வகிக்கிறார். ஆழ்வை மேற்கு ஒன்றியச் செயலாளர் நவீன்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் ஜனகர், பேரூராட்சி தலைவர் கமால்தீன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பொன் முத்துராமலிங்கம், பேச்சாளர் கார்த்திக் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். நாளை (23ம் தேதி) புதுக்கோட்டையில் மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை வகிக்கிறார். இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுப்பிரமணியன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திராவிட இயக்க சிந்தனையாளர் சூர்யா சேவியர், பேச்சாளர் சண்முகநாராயணன் ஆகியோர் பேசுகின்றனர். இந்த இரு கூட்டங்களிலும் நான் சிறப்புரை ஆற்றுகிறேன்

The post ஒன்றிய அரசை கண்டித்து திமுக பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: