அதை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: நேற்று நான் பேசும் போது சொன்னேன். அமைச்சர் மிகவும் சாமர்த்தியமானவர், திறமையானவர் என்று. அவருடைய நிதிநிலை அறிக்கையில்
2025-2026ம் ஆண்டு மடிக்கணினி திட்டத்துக்கு 20 லட்சம் பேருக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கின்றார். இது இந்த ஆண்டுக்காக என்று சொல்லியிருக்கின்றார்கள். நிதிநிலை அறிக்கையில், முதற்கட்டமாக என்று குறிப்பிட்டிருந்தால், அதை நாங்களும் புரிந்து கொண்டிருப்போம்.
ஆக, நாங்கள் உங்களைவிட குறைவாகப் படித்தவர்கள் தான். அதனால், எங்களுக்கு கூட்டல் கணக்கு சரியாகத் தெரிந்தாலும்கூட, நீங்கள் இன்னொன்றையும் சொன்னீர்கள். வேறு கூட்டல் கணக்கில் நீங்கள் ஏமார்ந்துவிடாதீர்கள் என்று சொன்னீர்கள். எங்களுக்கென்று கொள்கைகள் இருக்கின்றன. எங்கள் தலைவர், ஒரு சாதாரணமான கிராமத்திலிருந்து வந்து, இந்த அளவிற்கு இந்த இயக்கத்தை வலிமையோடு நடத்திக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், எந்த கூட்டல் கணக்கிலும் நாங்கள் ஏமாறமாட்டோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உறுப்பினர் தங்கமணி, ‘நாங்கள் கூட்டல் கணக்கில் ஏமாற மாட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார். ஏமாறாமல் இருந்தால், எங்களுடைய வாழ்த்துகள். இவ்வாறு விவாதம் நடந்தது. இந்த அரசியல் சம்பந்தப்பட்ட விவாதத்தினால் அவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. முதல்வரின் கருத்தைக் கேட்டதும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஒலி எழுப்பினர்.
கொமதேக உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில் கூறியதாவது: விவசாயத் துறையில் இன்றைக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, சவுக்கு பயிரிடுவது அதிகமாகியுள்ளது. சவுக்கு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.17,700 மட்டுமே கடன் கொடுக்கப்படுகிறது. ஆனால், அது 3 ஆண்டுகாலப் பயிர். அத்தொகை போதவில்லை. இன்னொன்று, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சவுக்கு என்ற பெயர் இல்லை. ஆதலால், சவுக்கு பயிரிடும் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சவுக்கு என்ற பயிரின் பெயரும் சேர்க்கப்பட வேண்டும்.
கேள்வி நேரத்தின் போது பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் (திமுக) பேசுகையில், ” பேராவூரணி தொகுதியில் கிட்டத்தட்ட 25 கட்டிடங்கள் பேராவூரணி பேரூராட்சி, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம், பட்டுக்கோட்டை ஒன்றியங்களில் 25 கட்டிடங்கள் தேவைப்படுகின்றன. தயவுகூர்ந்து அந்தக் கட்டிடங்களைக் கட்டுவதற்கு நிதி தரப்படுமா?’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசுகையில், ‘‘வெகு விரைவிலே பரிசீலித்து நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் சொந்தக் கட்டிடங்களில் இயங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துறையூர் தொகுதி எம்எல்ஏ செ.ஸ்டாலின் குமார் (திமுக) பேசுகையில், துறையூர் தொகுதியில் அம்மாபட்டி, காளிபட்டி, சிங்களாந்தபுரம், ஈச்சம்பட்டி, பெத்துபட்டி, மருக்களாம்பட்டி, நல்லியம்பட்டி என ஊர் பெயர்களை பட்டியலிட்டு சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, என்ன, பேருந்து நிலையத்தில் நடத்துநர் சொல்வதுபோல் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே என்றார். இதனால், அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
The post கூட்டல் கழித்தல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: தங்கமணி பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலால் சிரிப்பலை appeared first on Dinakaran.