காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் பாம்பை கழுத்தில் போட்டு பிச்சையெடுத்த 4 பேர்


வேலூர்: காட்பாடியில் 4 பேர் கழுத்து மற்றும் தோள்களில் பாம்பை போட்டு பிச்சையெடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி, சாலையில் ஊர்ந்து செல்லும் பாம்பை பார்த்தாலே அனைவரும் பயந்து ஓடும் நிலைதான் உள்ளது. ஆனால் தற்போது பாம்பை கொண்டு பணம் வசூலிப்பது புதுமொழியாக உள்ளது. கடந்த 18ம்தேதி இரவு வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் 4 பேர் செய்த செயல் அங்கிருந்த பொதுமக்களை அச்சத்தில் உறைய வைத்தது. காரணம், அங்கு வந்த ஒரு பெண் உட்பட 4 பேர் தங்கள் கழுத்து மற்றும் தோள்களில் உயிருடன் உள்ள ஆள் உயர பாம்பை வைத்துக்கொண்டு பிச்சை கேட்டனர்.

உயிருடன் சீறும் பாம்புடன் இவர்கள் வருவதை பார்த்த பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். இவ்வாறு பிச்சை கேட்ட அந்த கும்பல் அங்கிருந்து காட்பாடி, தாராபடவேடு உட்பட பல பகுதிகளிலும் சென்று பிச்சை எடுத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ள நிலையில் இதுபற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, இதுபோல் விலங்குகளை பிடித்து வைத்து பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

The post காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் பாம்பை கழுத்தில் போட்டு பிச்சையெடுத்த 4 பேர் appeared first on Dinakaran.

Related Stories: