உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

*மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் டிஆர்ஓ பவணந்தி கள ஆய்வு மேற்கொண்டார். மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு கலெக்டரும், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, முதல் நாள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 வரையில் கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்று அடைவதை உறுதி செய்யப்படும்.

அதன்படி உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டிஆர்ஓ பவணந்தி அரசு அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்தும், கள ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகத்தில் நாகப்பட்டினம் வட்டம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார்.

அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை மற்றும் குழந்தைகளுக்க வழங்கப்படும் மதிய உணவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்து, திட்டச்சேரி பெரிய பள்ளிவாசல் தெரு ஓரங்களில் புல் அதிகமிருப்பதை பார்வையிட்டு சுத்தம் செய்வதற்கு அறிவுறுத்தினார்.

அதனைதொடர்ந்து திட்டச்சேரி குளத்துமேட்டு தெருவில் உள்ள இ-சேவை மையம், திட்டச்சேரி நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி நடைபெறுவதையும் டிஆர்ஓ பவணந்தி ஆய்வு செய்தார். பின்னர் நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகத்தில் டிஆர்ஓ தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசு அளிக்கப்படும் திட்டங்கள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் செயல்பட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா, திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், தனித்துணை ஆட்சியர்(சமுகபாதுகாப்புதிட்டம்) கார்த்திகேயன், நாகப்பட்டினம் ஆர்டிஓ அரங்கநாதன், நாகப்பட்டினம் தாசில்தார் ராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: