சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி பேச முயற்சி முதல்வர் மு.க.ஸ்டாலின்-எடப்பாடி நேரடி வாக்குவாதம்: சட்டப்பேரவையில் கடும் கூச்சல் குழப்பம்; அதிமுக வெளிநடப்பு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி பேசும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பேரவையில் சிறிது நேரம் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. முதல்வரின் பதிலை கேட்காமல் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச எழுந்தார்.
* சபாநாயகர் அப்பாவு: நேற்று காலையில் பேரவை கூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் அதிமுக கொறடா என்னிடம் வந்து பேசினார். அவரிடம் பேரவையின் முன் வரிசையில் உள்ள நபர்கள் பட்ஜெட் மீதான விவாதம் குறித்து பேச இருப்பதால், இந்த பிரச்சனை குறித்து இரண்டு நாள் கழித்து பேச அனுமதி தருகிறேன் என்று கூறினேன். ஆனால் இன்றைக்கே இந்த பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் தற்போது கோரிக்கை வைக்கிறார்.
* துரைமுருகன் (அவை முன்னவர்): எதிர்க்கட்சி தலைவர் ஒரு பொருள் குறித்து பேச முன்கூட்டியே அனுமதி வாங்கி இருக்க வேண்டும். அப்போது தான் துறை அமைச்சருக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு பதில் பெற முடிவும். அந்த மரபை மீறக்கூடாது.
* எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்): நேரமில்லா நேரத்தில் இதுபோன்று அனுமதி பெற்று பேச முடியாது. இதற்கு பல முன்னுதாரனம் உள்ளது.
* முதல்வர் மு.க.ஸ்டாலின்: விதிமுறைப்படி தான் பேரவையில் பேச வேண்டும் என்று சபாநாயகர், அவை முன்னவர் சொன்ன பிறகும் எதிர்க்கட்சி தலைவர் கட்டாயம் பேச வேண்டும் என்று கூறுகிறார். அவரை பேச அனுமதி அளிக்கலாம். பதில் கூற நானும் தயாராக இருக்கிறேன்.
* எடப்பாடி பழனிசாமி: ஒரே நாளில் நேற்று மதுரையில் காவலர் சடலமாக மீட்பு, கோவையில் ஒருவர் எரித்து கொலை, சிவகங்கையில் ஒருவர் வெட்டிக்கொலை, ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் காரில் வைத்து ஒருவரை வெட்டி கொன்றுள்ளனர். இப்படி ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளது. சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் இந்த ஆட்சியில் குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். யாரும் தப்ப முடியாது என்று சொல்லிக்கொண்டு இருந்தபோதே இந்த சம்பவங்கள் நடந்துள்ளது. தினசரி இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.
* முதல்வர் மு.க.ஸ்டாலின்: நேரமில்லா நேரத்தில் பேச எதிர்க்கட்சி தலைவர் அனுமதி கேட்டார். நீங்களும் விதிமுறைப்படி இல்லாவிட்டாலும், எனது கோரிக்கையை ஏற்று பேச அனுமதி அளித்தீர்கள். ஆனால் நடந்த சம்பவத்தை கூறாமல் ஏதேதோ பேசுகிறார்.
* அப்பாவு (சபாநாயகர்): தமிழகத்தில் நடந்த சம்பவத்தை இங்கு பதிவு செய்து விட்டீர்கள், ஆனால் குற்றச்சாட்டை பதிவு செய்யக்கூடாது.
* துரைமுருகன் (அவை முன்னவர்): குற்றச்சாட்டை சொல்வதில் தவறில்லை. என்ன சம்பவம் நடந்தது, அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று அரசின் கவனத்தை ஈர்த்து என்ன நடவடிக்கை எடுப்பப்பட்டது என்று தான் கேட்க வேண்டும். (தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். ஆனால் அவருக்கு மைக் இணைப்பு வழங்கப்படவில்லை. அதனால் அவர் பேசுவது கேட்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்).
* அப்பாவு (சபாநாயகர்): ஒரு பிரச்னை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துவிட்டு, நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கிறீர்கள் என்றும், இதுதான் அரசின் சாதனையா? என்று சொல்வது சரியா?
* எடப்பாடி பழனிசாமி: அன்றாட நிகழ்வாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. முதல்வர் இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகள் அடக்கப்படுவார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தபோதே 4 பேர் கொலை செய்யப்படுகிறார்கள்.
* முதல்வர் மு.க.ஸ்டாலின்: தூத்துக்குடியில் நடந்த சம்பவம், சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் போன்றவற்றையெல்லாம் நீங்கள் மறந்துவிடக் கூடாது. உங்கள் பொறுத்தவரையில் டிவி-யை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. (அப்போதும், எடப்பாடி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்துநின்று மைக் இணைப்பு தரும்படி கூச்சலிட்டனர். சில அதிமுக உறுப்பினர்கள் முன் வரிசைக்கு வந்து சபாநாயகரிடம் எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர். அப்போது சில திமுக – அதிமுக உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டனர். இதனால் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்).
* முதல்வர் மு.க.ஸ்டாலின்: தைரியம் இருந்தால், நான் பேசும் பதிலை கேட்டுவிட்டு அவர்கள் போக வேண்டும். அந்த தைரியம் இல்லாமல் ஓடுகிறீர்கள்… ஆனாலும் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

The post சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி பேச முயற்சி முதல்வர் மு.க.ஸ்டாலின்-எடப்பாடி நேரடி வாக்குவாதம்: சட்டப்பேரவையில் கடும் கூச்சல் குழப்பம்; அதிமுக வெளிநடப்பு appeared first on Dinakaran.

Related Stories: