இதன்மூலம் செய்யாறு, வந்தவாசி, திண்டிவனம் பகுதிகளில் இருந்து வேலூர், பெங்களூரு செல்ல விரும்பும் வாகன ஓட்டிகள் காஞ்சிபுரம் நகருக்கு உள்ளே வராமல் செல்ல கீழம்பி புறவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும், செய்யாறு சிப்காட் பகுதிகளுக்கு வேலூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் இந்த கீழம்பி புறவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும், ஏராளமான கனரக வாகனங்களுக்கும், இந்த புறவழிச்சாலை மிகுந்த பயன் அளிப்பதாக உள்ளது. இந்த, கீழம்பி புறவழிச்சாலை இரு வழி சாலையாக பயன்பாட்டில் உள்ள நிலையில், பல நூறு கனரக வாகனங்கள், கல்லூரி, தொழிற்சாலை பேருந்துகள் குறித்த நேரத்தில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடைய ஏதுவாக, இதனை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
எனவே, இதுகுறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன், கீழம்பி புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேசினார். இதற்கு, பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தை முதல்வர் உருவாக்கி இருக்கிறார். இதன் மூலம் 2 வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக அரசு அமைத்து வருகிறது. காஞ்சிபுரத்தில் கீழம்பி புறவழிச்சாலை மிகவும் அத்தியாவசியமானதுதான். காஞ்சிபுரத்தை பொறுத்தவரையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். அதனால், புறவழிச்சாலை மூலம்தான் செய்யாறு வழியாக எங்களுடைய மாவட்டத்துக்கு செல்ல முடியும். இந்த ஆண்டே இந்த சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து கொண்டிருக்கிறோம். உடனே பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில், சுமார் 8 கிமீ தொலைவுள்ள கீழம்பி புறவழிச்சாலை ₹42 கோடி திட்ட மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக மாற்றம் செய்யும் பணிகளை கடந்த பிப். மாதம் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், எம்பி செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதலில் இந்த சாலையில் உள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 37 சிறு பாலங்கள் ஒருபுறம் அகலப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, மற்றொரு புறம் அகலப்படுத்தும் பணிகள் நடைபெறும். பிப். மாதம் தொடங்கிய இந்த சாலை விரிவாக்கப் பணி அடுத்த ஆண்டு பிப். மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி பேருந்துகள், தொழிற்சாலை பேருந்துகள் போக்குவரத்து நெரிசல் இன்றி உரிய நேரத்தில் சென்றடைவதுடன், கனரக வாகனங்கள் நகரினுள் வராமல் செல்வதால் பெரிய அளவில் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலையாக மாறும் செவிலிமேடு – கீழம்பி புறவழிச்சாலை: விறுவிறுப்பாக வேலை நடைபெறுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.